வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பஞ்சாக்ஷ்ர (நமச்சிவாய) திருப்பதிகம் 02 - பொது

திருமுறை : மூன்றாம் திருமுறை 049 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்.

திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். 

திருநல்லூர் பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தர் அவரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.

பாடல் எண் : 01
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. 

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்.


பாடல் எண் : 02
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாண்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.


பாடல் எண் : 03
நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தேயாகும். 


பாடல் எண் : 04
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.


பாடல் எண் : 05
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே.

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 06
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. 

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான "நமச்சிவாய" என்பதாகும். 


பாடல் எண் : 07
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. 

ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமான "நமச்சிவாய" என்பதாகும்.


பாடல் எண் : 08
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. 

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்.


பாடல் எண் : 09
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 10
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. 

தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர். 


பாடல் எண் : 11
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே. 

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர். 

பஞ்சாக்ஷ்ர (நமச்சிவாய) திருப்பதிகம் 01 - பொது


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

‪சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி‬


"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!."

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். 

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். 

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை: சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். 

பார்வதி! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச் சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். 

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

05 திருவாசகம் - திருச்சதகம் 04 ஆத்மசுத்தி


பாடல் எண் : 01
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பு இலை என்புருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணையிலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே.

பாடல் விளக்கம்:
எவ்விதச் செயலுமின்றி பிணம் போல் கிடக்கிற நெஞ்சே உனக்குத் தில்லைக் கூத்தன் திருவடிமீது ஒரு சிறிதும் அன்பில்லை. அன்பு மேலிட்டு நீ ஆடுவதுமில்லை, எலும்புருகப் பாடுவதுமில்லை. உணர்ச்சி மிகுந்தவனாய் பதைபதைப்படைவதுமில்லை. இறைவனை வணங்குவதில்லை. அவனுடைய செங்கமலத் திருவடிகளைச் சிரமீது தரிப்பதில்லை. அந்த திருவடிகளை மலர்த்தூவி அலங்கரிப்பதும் இல்லை. அவனுது நாமங்களை இசைத்தபடி வீதிகளில் போவதில்லை. இறைவனிடம் நாட்டமில்லாத உன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. இறைவுணர்வு இல்லாத மனம் பிணத்துக்குச் சமம். அது இறைவனின் துணையின்றி உயர்நிலையை எட்ட முடியாது.


பாடல் எண் : 02
அறிவிலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறியெலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப்பானைப்
பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாறாடுதி பிண நெஞ்சே
கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.

பாடல் விளக்கம்:
நான் அறியத் தக்கவைகவைகளை அறியும் அறிவில்லாதிருந்தபோது ஈசன் என் உள்ளத்தில் எழுந்தருளி அறியத்தக்கவை இவையென அறிவித்து எனக்கு ஞானத்தை வழங்கினான். மேலான நெறிகளை எல்லாம் எனக்கு தெளிவாக்கினான். என் தந்தை அவன், பிறவித் தளையை அகற்றிய பெருமான். அப்பெருமானை விட்டுப் பிரியாத விபூதிகள் பல இருக்கின்றன. இவை உனக்கு சொந்தமாயிருந்தும் அற்ப மனமே, நீ கீழ்மையில் தடுமாற்றம் அடைகின்றாய். பொய் நடைகள் உன்னிடம் மிகுந்திருக்கின்றன. கெடுவதற்கான உத்திகளால் என்னைக் கெடுத்துக் கீழ்மையில் ஆழ்த்துகின்றாய்.

மனிதர்கள் தங்கள் தோல்விக்கும், துன்பத்திற்கும் அடுத்தவர்களைத்தான் காரணம் காட்டுவார்கள். மனம் மாயையின்பாற் செல்வது. அது அறிவுரைகளை ஏற்காது. மாயை மனத்தை வெல்வதே அறிவின் பயன். மாயையின்பாற் செல்கிற மனம் தன்னை எவ்வெவ்வகையில் கெட்டழிக்க முயல்கிறது என்பதை அறிவு விழிப்புடனிருந்து கண்காணிக்க வேண்டும். இதனால், ஞானம் பெற்ற பின்பும் அதன் வழியே ஒழுகா விடில் கேடும் இழிவும் உண்டாகும் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 03
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதியிலி மடநெஞ்சே
தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கனெச் சிவனவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே.  

பாடல் விளக்கம்:
எமது அறிவற்ற மூட மனமே, நீ என்னுள் இருந்துகொண்டே என்னை கெடுக்கிறாய். ஒருபோதும் இனியுன்னை நம்புவதற்கில்லை. திருநீறணிந்த சிவனார்தோள் கண்டும் உனக்கு உள்ளக் கசிவு உண்டாகவில்லை. உடற்பற்று நீங்கவில்லை. அழிவை நோக்கிச் செல்வது உன் போக்கு. இது கேட்கச் சகிக்காத ஒன்று. 

மனம் நீர் போன்றது, நீரானது சேர்கின்ற மண்ணின் நிறத்தை அடைகிற மாதிரி, தன்னுடன் சேர்கிற பொருளின் தன்மையைப் பெறுகிற மாதிரி மனமும் உலக விஷயங்களைச் சார்ந்து தன் வலிமை இழக்கிறது. அது சிவத்தை அடையுமேல் சிவமயமாகும். தீயிற் சுட்ட பொருள் அனைத்தும் சாம்பலாகிவிடும். அது முடிவான பொருள். அதன் தன்மை மாறாது. அது தான் திருநீறாய் அணியப்படுவது. அதுவே சிவனது சின்னம். கீழ்மையில் கிடக்கிற மனது கேடுசெய்யும், கெட்டழியும், அது நல்லதில் சேர்ந்திட நன்மை விளையும், ஆத்மா தூய்மைப்படும்.


பாடல் எண் : 04
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்றெலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப்பாதம்
முற்றிலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்றவாறும் நின்னறிவும் நின்பெருமையும் அளவறுக் கில்லேனே.

பாடல் விளக்கம்:
ஏ மனமே! நீ உலக சுகங்களைத் துய்ப்பதிலேயே எப்போதும் நாட்டம் கொண்டு இருக்கிறாய். அதனால் நீ அழிந்துபட்டுப் போவாய். என்றும் இளமை மாறாதிருக்கும் இறைவனது திருவடிக்கே நான் ஆளாகியிருக்கிறேன். அவன் என்னை எது வேண்டுமாயினும் செய்து கொள்ளலாம். நான் அவனுக்கே சொந்தம். ஆனால் நீயோ அந்த இறைவனைப் புறக்கணித்துவிட்டு சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபாடு கொண்டுள்ளாய். அவ்வகையில் இவ்வுடலைக் கொண்டு எண்ணற்ற இன்பங்களை நீ அனுபவித்து இருக்கிறாய். அதற்கேற்ற சிற்றறிவு தான் உன்னிடம் இருக்கிறது. அச்சிற்றறிவு நீ அனுபவித்த உலகியல் சுகங்களை பற்றிப் பெருமையாய் பேசவைக்கிறது. உன் பெருமைகள் மாயமாய் மறைவதை எண்ணிப்பார்.

இறைவனிடத்தில் இருந்து வரும் இன்பம் பேரின்பம். அது சாசுவதமானது. ஆனால் புலன்வழிப் பெறுகிற இன்பமே சிற்றின்பம் நிலையற்றது. உடனடியாய் மறைந்துபோவது. விவேகத்தால் இதனை ஆராய்ந்து மெய்விளக்கம் பெறவேண்டும். அப்போது தான் ஆன்மா தூய்மை அடையும்.


பாடல் எண் : 05
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 

பாடல் விளக்கம்:
மனமே, உனக்கொரு உண்மை சொல்வேன். சிவபெருமான் தேவர்களாலும் அறியப்படாதவன், ஆனால் தனது அடியார்களுக்கு எளியவன். அவன் நமபால் கொண்ட பரிவு காரணமாய் நமது தீமைகளை அகற்றி நம்மை ஆட்கொள்ள சித்தம் கொண்டுள்ளான். அவனது கருணையை எண்ணி நீ கசிந்துருகியிருக்க வேண்டும். இந்திரியங்களுக்கு இலக்காயுள்ள சிற்றின்பங்களை நீ வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டும். உன்னிடமுள்ள குற்றங்களை நீக்கி இறைவனது திருவடியை வணங்கியிருத்தல் வேண்டும். ஆனால் நீ அவ்வாறெல்லாம் செய்யவில்லை. உன் பேதமையை என்னவென்பது?.

இந்திரிய சுகங்களில் சிக்கியுள்ள மனவிகாரத்தைப் போக்கி அவற்றின் மீது ஒரு வெறுப்பே உண்டாகும்படி செய்வான் இறைவன். தன் மீது அளவற்ற அன்பு வைத்து கண்ணீர் மல்கி தன்னை வாழ்த்தி வணங்குவோருக்கு அதனைச் செய்கிறான். பக்தி என்பது புறவொழுக்கம் மட்டுமல்ல. தனது உள்ளத்து மாசுக்களைத் துடைத்துத் தூய மனத்துடன் இறைவனை வழிபட வேண்டும். 

மோட்ச வீட்டின் தலைவனாகிய இறைவனை அடையவும் அவனருள் வேண்டும். இறையருள் பெற்று இன்புறுவதே மனித வாழ்வின் பயனாகும். இதனைப் "பரகதி புகுவானே" என்னும் சொற்களால் அறிவுறித்தியுள்ளார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 06
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்கு
உகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்கு என்செய்கேன் வினையேனே. 

பாடல் விளக்கம்:
சென்று அடைதற்கு உரியதும், சென்றால் மீளுதலில்லாததும் ஆகிய சிவலோகம், புகுதற் பொருட்டுச் செல்லுவதற்குத் தடையான பற்றுக் கழல்வதும் எம் தந்தையும், எம் தலைவனும், என்னை ஆண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும் நாள் தோறும், அமுதத்துடன் தேன் பால் கற்கண்டினும் மேற்பட்ட பேரின்பம் விளைவதும் இல்லையாயின் இதற்குத் தீவினையுடையேன் யாது செய்ய வல்லேன்?

தேவலோகம் முதலியவற்றுக்குச் சென்றால் மீளவும் பிறப்பு உண்டு. சிவலோகம் சென்றால் பிறப்பு இல்லை; ஆதலின், புகத்தக்கது சிவலோகமே என்பார். இறைவன் திருவடி மலருக்கு அன்பு செய்தற்கும், அம்மலரிலுள்ள தேனை உண்டு இன்பம் அனுபவித்தற்கும் தவம் செய்திருக்க வேண்டும்.


பாடல் எண் : 07
வினை என்போல் உடையார் பிறரார் உடையான் அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் இன்னது என்று அறியேனே.

பாடல் விளக்கம்:
என்னைப் போலத் தீவினை உடையவர் பிறர் யாருளர்? என் முதல்வன் நாய் போன்ற அடியேனைத் தினையளவும் நீங்கியிருப்பது அவனது திருக்குறிப்பு அன்று; ஆதலால் இறைவனது திருவடியாகிய நல்ல மலரை, நானே நீங்கியிருந்தும் தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக் கொள்கிலேன், பிளந்து கொள்ளேன், இத் தன்மையேனாகிய என்னுடைய பாவனை இரும்பாகும், மனமானது கல்லாகும், காது இன்ன பொருள் என்று அறியேன்?.

உலகத்தில் தலைவனைப் பிரிதலுற்றார் தலையை மோதிக் கொள்ளுவதையும், மண்டையை உடைத்துக்கொள்வதையும் காண்கிறோம்; இறைவனாகிய தலைவனைப் பிரிதலுற்றார் இச்செயல்களை மிகவும் செய்ய வேண்டும் அன்றோ! அவ்வாறு செய்யவில்லையே என்பார், "பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்" என்றார். கருத்துப் பண்பட வேண்டும். அதன் பிறகே அன்பை மனம் ஏற்றுக்கொள்ளும். கருத்தும் பண்படவில்லை, அதனால் மனமும் உருகவில்லை என்பார், "பாவனை இரும்பு, கல் மனம்" என்றார். கருத்து, மனம் இவற்றைக்காட்டிலும் செவி மிகவும் வன்மையுடையதாய் இருக்கின்றது என்பதற்கு, "செவி இன்னதென்று அறியேன்" என்றார். செவி முதலிய பொறிகளும், மனம் முதலிய அந்தக்கரணங்களும் தம்மோடு ஒத்துழைக்கவில்லை என்று வருந்துகிறார் அடிகள். இதனால், இறைவன் ஆட்கொண்ட பின்னர்ப் பிரிந்து வாழ்வது பெருந்துன்பமானது என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 08
ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனை என் சிவலோகக்
கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே.

பாடல் விளக்கம்:
மற்றையோர் எல்லாரும் இன்னது என்று அறியப்படாத தேன் போல்வானும், பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனும் எனது சிவலோகத் தரசனும், பெண்மானின் நோக்கம் போன்ற திருநோக்கத்தை உடையவளாகிய உமாதேவியின் ஒரு பாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை அணுகிலேன். நீண்ட நாள்கள் இருந்து உடம்பை வளர்க்கின்றேன். கெடுவேனாகிய எனது உயிர் ஒழியவில்லையே!. இதனால் சிவபோகத்தை விரும்புவார் உலக இன்பத்தை விரும்பமாட்டார் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 09
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்
தாயில் ஆகிய இன்னருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.

பாடல் விளக்கம்:
அழிவற்றவைகளை, ஒப்புவமையில்லாதவைகளை, ஞானவெளி வீசும் செங்கமலத் திருவடிகளை இறைவன் எனக்கு வழங்கியருளினான். கீழ்மையுற்ற எனக்கு மேலான வழியை அவன் காட்டியருளினான். தாய்மை நிறைந்த மனதால் என்னை ஆண்டு கொண்டான். அவனைக் காணப்பெறாத நிலையில் நான் அனலில் விழுந்தோ, மலையிலிருந்து உருண்டோ, அழ்கடலில் மூழ்கியோ உயிரை மாய்த்து கொள்ளாதிருக்கிறேனே. இதனால், சிவபோகத்தை விரும்புவார் உலகத்தைத் துறந்து உயிரை விடத் துடிப்பர் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 10
வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டினும் உண்டு உடுத்து இருந்தேனே.

பாடல் விளக்கம்:
மாதர் மயக்கத்தில் சிக்கி, உழன்ற என்னை ஆட்கொண்டருளின இறைவனது சிவபுரத்தை அடையாமல், உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் உண்டும் உடுத்தும் இருந்தேன். என்னே என் நிலை?. இதனால், உலக போகங்களைத் துய்ப்பதற்கான செயல்களை விடுத்த உயிருக்கு உறுதி தரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 20 பிப்ரவரி, 2016

கஷ்டங்களை தீர்க்கும் பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் தேவாரம் (7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது. 

சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை. 

சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள். அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.


விநாயகர் வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.


01. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - முதல் திருமுறை


தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. 

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, தூய வெண்மையான பிறையை சூடி, காட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! 


02. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - இரண்டாம் திருமுறை


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 

முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?.


03. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - மூன்றாம் திருமுறை


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே. 

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்.


04. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - நான்காம் திருமுறை


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.


05. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஐந்தாம் திருமுறை


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 

நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?.


06. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 


07. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை


பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை 
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, "அருட்டுறை" என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால் எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி இப்பொழுது, "உனக்கு அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.


08. மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.

பாலை காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.


09. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - ஒன்பதாம் திருமுறை 


பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால் பெறாது அழுது வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெருமானாய், ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத் திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு அருளை வழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமானுக்கு பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.


10. திருமூலர் அருளிய திருமந்திரம் - பத்தாம் திருமுறை 


சிந்தையது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக்கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசு கட்டில் கொற்றவை எனவே மதிக்கப்படும். இம்முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவனெனவே மதிக்கப்படும். அக்குறிப்புத் தோன்றச் "சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை" என ஓதினர். பால் கலமும் பால் போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர்போன்றே மதிக்கப்படுமல்லவா? அஃதும் ஒப்பாகும். நீங்கா நினைவுடன் திருவைந்தெழுத்தினை நினைவார் ஓங்கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின்கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந்தெளியக் 'கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தல்' என்னும் முறையான் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் "சிந்தையினுள்ளே சிவன்" எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந்தருள்கின்றனன்.


11. சேரமான் அருளிய பொன்வண்ண அந்தாதி  - பதினொன்றாம் திருமுறை


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே. 


12. சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் - பன்னிரண்டாம் திருமுறை 


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 


ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம் தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம் தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் உன் ஒரு முகம் தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம் தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம் தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்


வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன் நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும், தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நீதி உலகமெல்லாம் பரவ வேண்டும்.


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும். 


திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியது 


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக் கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடு விளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பஞ்சாக்ஷ்ர (நமச்சிவாய) திருப்பதிகம் 01 - பொது

திருமுறை : மூன்றாம் திருமுறை 022 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்



"வாழ்நாள் முழுவதும் எந்தவித குறையும் இன்றி வாழ்வதற்கு ஓத வேண்டிய திருப்பதிகம்." 

"நமசிவாய" என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும். ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பற்றி தனது இரண்டு பதிகங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். 

திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்ய விரும்பினார் சிவபாத இருதயார். அந்த உபநயனச் சடங்கில் "மறை நான்கும் தந்தோம்" என்றனர் அந்தண்ர். அப்பொழுது மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது உலகின் முழுமுதற் கடவுளின் திருவைந்தெழுத்தான "நமசிவாய" என்னும் மந்திரமே என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இப்பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடினார் ஆளுடைப் பிள்ளையார்.

முதலில் ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய "காதலாகி" என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார். "நெஞ்சகம் நைந்து நினைமின்" நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம் முதலிய இடர்களை அகற்றலாம் - என்கிறது முதல் பதிகம். அதையே "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்று சொல்கிறது, நிறைவுப் பதிகம். தேவாரம் அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத் திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர்.

பாடல் எண் : 01
துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே.

தூங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே. 


பாடல் எண் : 02
மந்திர நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.

மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும். 


பாடல் எண் : 03
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. 

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞான விளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருஐந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 04
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத் தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும். 


பாடல் எண் : 05
கொங்கலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து
அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்சு எழுத்துமே.

வலிய மன்மதனின் அம்பானது தேன் துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப மந்திரமும் திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 06
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. 

தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதி வந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 07
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.

இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 08
வண்டமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.


பாடல் எண் : 09
கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.

திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.


பாடல் எண் : 10
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. 

புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர் புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 11
நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈர் ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே. 

நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள். 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||