ஞாயிறு, 18 ஜூன், 2017

அடியாருக்கு அகமகிழ்ந்து அருள்வான் பரமன்

அனைவருமே இறைவனைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இறைவனும் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறார்! யாரை? திருமூலா் விளக்கம் சொல்கிறார். அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் திருவொற்றியூர் வரை போய்விட்டு வரலாம், வாருங்கள், விஷயம் இருக்கிறது!


திருவொற்றியூரில் சிவபெருமான், ஒருவரின் முகவரியைத்தேடி அவரைக் கண்டுபிடித்து அவருடனே தங்கிவிட்டாராம்! இறைவனே தேடிப்போன அந்த உத்தம பக்தரின் பெயா் - பட்டினத்தார்!

"விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை 
வீணருடன் கிட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை
நான்மறைக்கும் எனும்பதம் தானே இங்கு வந்து
என்னிடத்தே எய்தியதே". 

- என்கிறார் பட்டினத்தார். அதாவது, நாம் தேடிக்கொண்டிருக்கும் தெய்வம், பட்டினத்தாரைத் தேடிப் போனதாம்! ஏன் என்பதைத் திருமூலர் சொல்லக் கேட்கலாம்: 

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்மெல்ல 
விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி 
சத்தம் ஆதி மனத்தையும் மெல்லத் தரித்தர் முகத்தே பசித்தே. 
(திருமந்திரம் - 2137) 

கருத்து: நல்வார்த்தைகளைப் பேசும் வாயும், நல்லவற்றையே நினைக்கும் மனமும் உடையவர்கள் உள்ளத்திலே, பரம்பொருளான சிவபெருமான் அருள் நடமிடுவார். இப்படிப்பட்ட தன்மை இல்லாதவர்கள் - அதாவது நல்லதைப் பேசாத வாயும், நல்லதைக் கேட்காத காதும், நல்லதை நினைக்காத மனமும் படைத்தவர்களுடைய முகம் வாடி, வருந்திப் பொலிவிழந்து காணப்படும்.

மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் சொல்லி, அறிவுறுத்தும் பாடலிது. இதுதான் வரிசை. ஆனால் திருமூலா் இந்த வரிசையை மாற்றி, வாக்கு - மனம் - காயம் (உடம்பு) என்கிறார். ஏன்? மனம் என்ன நினைக்கிறது, மனத்தில் என்ன உள்ளது என்பதை யாராலும் அறிய முடியாது. ஆனால், வாக்கு இனிமையாக இருக்கிறதா, நல்வார்த்தைகளாக இருக்கின்றனவா என்பதைச் சுலபமாக அறியலாம். 

அதனாலேயே, முதலில் வாக்கை வைத்தார் திருமூலா். அது மட்டுமல்ல, "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்" என அப்பா் சுவாமிகளும், முதலில் வாக்கை வைத்து, அதன் பிறகே, மனதை வைக்கிறார். நல்வாக்கு, வாழ்த்த வாய் என்றெல்லாம் முதலில் வைக்கப்பட்டதற்குக் காரணம், இனிமையான வாக்கும், வாழ்த்துதலும் என்றுமே பஞ்சத்திற்கு உட்பட்டிருக்கின்றன என்பதுதான்!

பெற்றோர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், உறவினா்கள் மற்றவர்கள் என அனைவரிடமும் கடுமையான வார்த்தைகளைத்தான் கொட்டுகிறோமே தவிர, இனிமையான வார்த்தைகளோ, நல்வார்த்தைகளோ இடம்பெற மாட்டேனென்கின்றன. வெறுப்பான வார்த்தைகளும் கொதிக்கும் சொற்களுமே இடம் பெறுகின்றன.

இதைப் பார்க்கும்போது, வள்ளுவருக்கே கோபம் வருகிறது: “எவன் அது?” என்று கோபமாகக் கேட்கிறார். "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது?" ஆகையால், அனைவரிடமும் இனிமையாகவே, நல்வார்த்தைகளையே பேசுவோம். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீா்வு. வாயில் நல்வார்த்தைகள் இருக்க, வாட்டம் எதற்கு? என்பார்கள் முன்னோர்கள். 

அடுத்து, மனதைச் சொல்கிறார் திருமூலா். வாயால் இனிமையாகப் பேசி, நல்வார்த்தைகளையே பேசினாலும், மனதில் களங்கம் இருந்தால், அது அடுத்தவர்க்கு மட்டுமல்ல, நமக்கே பிரச்னைகளை உண்டாக்கும். மனதிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன ஞான நூல்கள்.

சாதாரணமாகப் பேச்சு வழக்கிலேயே, “மனசாட்சி அறிய நான் சொல்வது உண்மை; பொய் சொல்லவில்லை” எனக் கூறுவதைக் கேட்டிருப்போம். மனசாட்சிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்? மனது இருக்கிறதே அதுதான் அனைத்திற்கும் காரணம். அழகான எதையாவது ஒன்றைப் பார்த்துவிட்டால், மனம் உடனே போய் அதில் விழுந்து விடுகிறது; மேலும் மேலும் பார்க்கும்படியாகக் கண்களைத் தூண்டுகிறது; எப்படியாவது அதை அடையும்படியாக அறிவைத் திட்டம் போடத்தூண்டுகிறது; அழகில் மயங்கிய மனமும் அறிவும் சோ்ந்து, தவறான வழிகளில் ஈடுபடுகின்றன.

அப்போது, அதிசயமாக “ஏய், இது வேண்டாம், பிரச்னையில் மாட்டிக்கொள்வாய், ஒதுங்கிவிடு” என அறிவு எச்சரித்தாலும், எடுபடாது. அறிவையே தனக்கு அடிமையாக, மனம் செய்துடும். பிறகென்ன? தவறான வழியில் போன மனது, மேலும் மேலும் முன்னேறி, மீளவே முடியாதபடி அந்தகாரத்தில் ஆழ்ந்து விடும்.

உதவி செய்ய ஒருவருமின்றித் தவிப்போம். வழிதெரியாமல் திண்டாடும் போது, “அப்பவே சொன்னேன். நீ கேக்கல. இப்ப பாத்தியா? திண்டாடித் தெருவுல நிக்கற!” என ஒரு குரல் கேட்கும். அது, மனசாட்சியின் குரல்! ஆம், அழகான ஒன்றைப் பார்த்ததும், அதன்மேல் போய் விழுந்து, அல்லலில் ஆழ்த்தியதே, அதே மனம் தான். அல்லல்களுக்குக் காரணமான மனமே, இடித்து அறிவுரையும் கூறும் இப்போக்கு மிகவும் விசித்திரமானது.

இப்படிப்பட்ட ஒருநிலை எல்லோருக்குமே வாய்த்திருக்கும். தவறு செய்யத் தூண்டிய மனமே, அதன் மூலம் உண்டான துயரங்களுக்கான காரணங்களைப் பட்டியலிடும்! நமக்கே நம் மீது வெறுப்பு வரும். ஒப்புக்கொள்கிறோமோ, இல்லையோ, மிகமிகத் தூய்மையானது மனம். இதைப்புரிந்து கொள்ள ஓா் உதாரணம் - தானும் பிரகாசித்து, தன்னைச் சுற்றி இருக்கும் இருளையும் நீக்கும் விளக்கைப் பலவிதமான மூடி(கூடை)களைப் போட்டு மூடி வைத்தால், மேலும் மேலும் இருள்தான் நீங்காதிருக்குமே தவிர, அதற்காகப் பிரகாசிக்கும் விளக்கைக் குற்றம் சொல்வோமா? விளக்கின் இயற்கை, ஔிவீசி இருளைப் போக்குவது தானே! 

அதுபோல, மனம் என்பது இயற்கையாகவே தூய்மையானது. அதை பலவிதமான மூடிகளால் - ஆசை, கோபம், பயம், தன்னலம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போட்டு மூடிவைத்திருக்கிறோம். இம்மூடிகளை மேலும் மேலும் அதிகரிக்கின்றோமே தவிர, நீக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை.

விளக்கைச் சுற்றி இருக்கும் மறைப்புகளை ஒவ்வொன்றாக நீக்க நீக்க, விளக்கு ஔி வீசுவதைப்போல, மனத்தைச் சுற்றியிருக்கும் மறைப்புகளை ஒவ்வொன்றாக விலக்க விலக்க, மனம் தன்னுடைய இயல்பான நன்னிலைக்கு வந்துவிடும். இந்நிலையை அடைந்தவகளேஞார்னிகள். அப்படிப் பட்டவர்களின் உள்ளத்தில் சிவபெருமான் - இறைவன் நடம் புரிகிறாராம்.

அந்நிலையை அடையாதவர்களோ, நல்லதைப் பேசாமல், நல்லதைக் கேட்காமல், நல்லதை நினைக்காமல்,செய்யக்கூடாதவற்றையெல்லாம் செய்து, துயர வலையில் அகப்பட்டு, எந்நேரமும் இருண்ட முகத்தோடே இருப்பார்கள் என்கிறார் திருமூலா். நல்வார்த்தைகள் பேசி, நல்லதையே நினைக்கும் பண்புகளைக் கொண்டவர்களின் உள்ளத்தில் சிவபெருமான் நடம் புரிவான் எனச் சொன்ன திருமூலா், அடுத்த பாடலில் அவ்வாறு சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களைக் கூறுகிறார்.

"தவிர வைத்தான் வினை தன் அடியார்கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவா் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித்துயா் தானே "
-- (திருமந்திரம் - 2050) 

கருத்து: தன் அடியார்களான மெய்யன்பர்கள் வினைத் துன்பங்களுக்கு ஆளாகாது தடுத்துக் காத்தருளினார். செய்த வினைகளால் வரும் நவகோள்களின் பாதிப்பு உண்டாகாதிருக்கத் தன்னுடைய திருவடிகளை அடியார்களின் தலைமேல் வைத்துக் காத்தருளினார். யம பயத்திலிருந்து அடியார்களைக் காத்தருளினார். மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் துயரம் தவிர்த்து, முக்தியையும் அருளினார். 

வினைத்துயரங்களிலிருந்து அடியார்களைக் காத்தது; நவக்கிரகக் கோளாறுகளிலிருந்து அடியார்களைக் காப்பது; அடியார்களின் தலைமேல் தன் திருவடிகளை வைப்பது; யமனிடமிருந்து அடியார்களைக் காப்பது; பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுவது எனச் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவற்றையும் இங்கே நம் மனதில் பதிய வைக்கிறார் திருமூலர்.

இப்பாடலின் ஒவ்வொருவரிக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்விலிருந்தே, நடந்த நிகழ்வுகளைக் கொண்டு நாம் விளக்கம்பெறலாம். அது நீண்டுபோகும் என்பதாலும், அதே சமயம் மேலும் சில உத்தமர்களுக்கு அருள்புரிந்த நிகழ்வுகளையும் பார்க்கலாம் என்ற நினைப்பாலும், வேறுவேறு நிகழ்வுகள் இங்கே அணிவகுக்கின்றன.

சிவபெருமானும், அம்பிகையும் கயிலையில், வில்வ மரத்தினடியில் எழுந்தருளியிருந்தபோது, மரத்தின் மேலிருந்த குரங்கொன்று வில்வ தளங்ளைப் பறித்து, சிவதம்பதியர் மேல் இட்டது. உடனே சிவபெருமான் அக்குரங்கை அழைத்து, “வில்வம் கொண்டு எம்மை அா்ச்சித்ததால், நீ சக்கரவர்த்தியாக ஆவாய்!” என்றார். அதற்குக் குரங்கு,”பரம்பொருளே! சக்கரவர்த்தியாயிருந்தால், பதவி சுகத்தில் ஈடுபட்டு, போகத்தில் திளைத்து, உம்மை மறக்கும்படி நேரலாம். ஆகையால், நான் சக்கரவர்த்தியாக இருந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்குமாறு அருள் புரியுங்கள். அப்போது தான், பழையனவற்றை நான் மறக்கமாட்டேன்; வினைகளும் என்னைத் தீண்டாது” என வரம் வேண்டியது.

“அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்தார் சிவபெருமான். வரம் பெற்ற அக்குரங்கு தான், முசுகுந்த சக்கரவர்த்தியாகப் பிறந்தது; வினை தீண்டாத நிலைபெற்றது. அடுத்து, நவகோள்களின் பாதிப்பிலிருந்து அடியாரைக் காத்தது: அமணர்களின் பிடியிலிருந்து ஆலவாயாம் மதுரையை மீட்பதற்காக, ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தார் அரசி மங்கையர்க்கரசி. 

அப்போது திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் இருந்த திருஞானசம்பந்தரைச் சந்தித்த அரசியின் தூதா்கள், தகவலைச் சொல்ல, மதுரைக்குப் புறப்பட ஆயத்தமானார் திருஞானசம்பந்தர். அமணர்களின் நடவடிக்கைகள் முழுவதையும் அறிந்த அனுபவசாலியான, முதுமை - ஞானம், கல்வி - கேள்வியில் சிறந்து விளங்கிய திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தரைத் தடுத்தார். 

“கோள்களின் நிலை சரியாக இல்லை; ஆகவே தாங்கள் இப்போது மதுரைக்குச் செல்ல வேண்டாம்” எனக்கூறித் தடுத்தார். திருஞானசம்பந்தரோ, ”இறைவனருள் பெற்றவர்க்கு எல்லா நாள்களும் கோள்களும் நல்லவையே” எனக்கூறி, கோளறு பதிகம் பாடிப் புறப்பட்டார், மதுரை சென்றார், வென்றார்.

அப்போது திருஞானசம்பந்தா் பாடிய "கோளறு பதிகம்" இன்றும் அடியார்களால், கோள்களின் பாதிப்பிலிருந்து நீங்கப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அறுபதுகளில், கோள்களின் கடும் பாதிப்பு குறித்து ஜோசியர்கள் கூற, காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் இக்கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்யச் சொல்ல, அனைவரும் திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்து,கோள்களின் பாதிப்பிலிருந்து நீங்கியது மிகவும் பிரசித்தம்.

அடுத்து, திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இருந்தபோது, கோள்களின் காரணமாகப் பலகாலம் மழையின்றிப் பஞ்சமும் பசியும் பரவின. அதை அறிந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருவீழிமிழலை நேத்ரார்ப்பணேசுவரரிடம் சென்று முறையிட்டார்கள்.

அவா்கள் முறையீட்டுக்குச் சிவபெருமான் பதில் அளித்தார்: “இத்தீங்கு உங்களைப் பீடிக்காது என்றாலும், அடியார்களின் கவலை நீங்குவதற்காக, நம் சந்நதியில் கிழக்குப் பீடத்தில் சம்பந்தனுக்கும், மேற்கு பீடத்தில் அப்பருக்கும், யாம் தினந்தோறும் ஒரு பொற்காசு வைப்போம். அதைக்கொண்டு அடியார்களின் துயா் தீருங்கள்!” அடுத்து, அடியார்களின் தலைமேல் சிவபெருமான் தன் திருவடிகளை வைத்தது - சைவசமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரா், சித்தவடம் எனும் மடத்தில் படுத்து உறங்கியபோது, அருகில் படுத்திருந்த கிழவா் ஒருவரின் திருவடி, சுந்தரரின் தலைமேல் பட்டது.

அதை சுந்தரா் கூறியபோது, “வயதானதால் எனக்குப் புரியவில்லை” என்றார் கிழவா். வேறுபக்கம் திரும்பிப் படுக்க, அப்போதும் கிழவரின் திருவடிகள் பட்டன. சுந்தரா் கோபத்துடன் “யாரையா நீா்? ஏனிப்படிச் செய்கிறீா்?” எனக் கேட்க, “எம்மை நீா் அறியவில்லையா?” எனச் சொல்லி அப்பெரியவா் மறைந்தார். வந்தது திருவதிகை சிவபெருமானே என்பதை அறிந்த சுந்தரா் அகமகிழ்ந்து, "தம்மானை அறியாத" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறைவனைத் துதித்தார். 

அடுத்தது யம வாதை வராமல் தடுத்தது. மார்க்கண்டேயருக்கு திருக்கடவூரில் நடந்த நிகழ்ச்சியிது. இவ்வாறு சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் பலவற்றையும் இப்பாடல் மூலம் நமக்கு உணா்த்துகிறார் திருமூலா். வினை நீக்கியது, கிரகக் கோளாறில் இருந்துகாத்தது, பசி தீா்த்தது, திருவடி வைத்தது, யமவாதை தீா்த்தது எனப் பல விவரங்களையும் சொல்லி நம்மை இறையருளுக்குப் பாத்திரர்களாக்குகிறார் திருமூலா்.

நன்றி பி என் பரசுராமன்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக