ஞாயிறு, 18 ஜூன், 2017

வரூதினீ ஏகாதசி

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன


வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். அர்ஜூனன் கிருஷ்ண பரமாத்மாவிடம் "பிரபு! தாங்கள் தயைகூர்ந்து வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்." என்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர், ஹே குந்தி நந்தனா! வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீ ஏகாதசியின் புண்ணிய பலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார். இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்ட ரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்கலோகப் பிராப்தியும் பெற்றார்.

வரூதினீ ஏகாதசி விரத புண்ணிய பலன் பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ர பூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும். உத்தமமான இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால், மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். 

"ராஜன்! இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுட‌ன், இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம் மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட,  தில(எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ண தானம் பன்மடங்கு மேலானது எனவும், தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விட அன்னதானம்  மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தகுதியானவருக்கு கன்யா தானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும், அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம் அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார். கன்யாதானம், அன்னதானம், கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர்.

பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில் வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறு ஜென்மத்தில் இழி பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர். ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறை வணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை, வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம்.  

இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்று இருத்தல் வேண்டும். பிறரை நிந்தனை செய்தல்,  சூதாட்டம், கேளிக்கை, பகல் உறக்கம், வெற்றிலை பாக்கு, எண்ணெய் மற்றும் உணவு உண்ணுதலும் தவிர்க்கப்பட வேண்டும். துஷ்டர் மற்றும் பாவம் புரிந்தோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். கோபம் கொள்வதும், பொய் பேசுதலும் கூடாது.

ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீ ஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம் கிட்டப் பெறும். இவ்ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப் பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.

கதாசாரம்: தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும். அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல், சுகத்திற்கும் சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர் மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும்

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக