திங்கள், 13 ஜூன், 2016

தேவாரம் காட்டும் ஐம்புல வழிபாடு‬

சமய வாழ்க்கை என்பது முன்பெல்லாம் சமூகத்தினர் அனைவராலும் பின்பற்றமுடியாத ஒன்றாக இருந்தது. ஆங்காங்கே ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றாலும் மந்திரம், யாகம் போன்றவையே வழிபாட்டு முறையாக இருந்தன.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள், பக்தி என்பது இறைவன் மீது ஏற்படும் அன்பே என்பதையும், அந்த அன்புணர்வை வெளிப்படுத்தும் முறையே வழிபாடு என்பதையும் மக்கள் மனதில் தோற்றுவித்தனர்.

தேவார மூவர் எனப்படும் சுந்தரர், சம்பந்தர், அப்பர் போன்ற அடியார்கள் இறைவனின் பெருமைகளை நமக்கு சுட்டிக்காட்டி, அவனை வழிபடும் முறையையும் கற்றுத்தந்திருக்கிறார்கள். இறைவனை தரிசித்து இனிய தமிழில் துதிப்பதைவிட சிறந்த வழிபாடு இருக்க முடியாது என்பதை தலம் தலமாகச் சென்று பதிகம் பாடி நமக்கு உணர்த்தியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கும் ஆன்மிக ஒளியைக் காட்டி, அவர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வதே தேவாரப் பாடல்களின் நோக்கம் எனலாம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வ தோடு, வாழ்க்கை முடிந்தபின் வீடுபேறு அடைதலையும் மக்கள் விரும்பினார்கள்.

தமது புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வதால் வீடுபேறு அடையலாம் என்பது நம் முன்னோர்கள் காட்டிய வழி. "புலன்களையும் மனதையும் அடக்கவேண்டும் என்பதில்லை; அவற்றைப் பயன்படுத்தியே முக்தி பெறலாம்" என்பதை சம்பந்தர் தன் தேவாரப் பதிகங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐம்புலன் நுகர்ச்சியால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறும் தேவாரப் பதிகங்கள், ஐம்புலன்களையும் பயன்படுத்தி அன்பு வழியில் நடந்து பக்தி செய்வது பற்றிக் கூறுகின்றன. இது எப்படி சாத்தியம் என்ற ஐயம் நமக்குள் எழுகிறது.

திருநாவுக்கரசர் தமது திருவங்க மாலையில் "மனமானது கடவுளை தியானிக்கவேண்டும்; கைகள் கடவுளை அர்ச்சிக்கவேண்டும்; கால்கள் கோவிலை வலம் வரவேண்டும்; காதுகள் பகவத் விஷயங்களைக் கேட்கவேண்டும்; கண்கள் கடவுளை தரிசிக்கவேண்டும்; மூக்கு வில்வம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை நுகரவேண்டும்; தலை இறைவனை மட்டுமே வணங்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களுமே அவற்றிற்குரிய செயல்களைச் செய்கின்றன. அவற்றின் செயல்கள் வழிதடு மாறிச் செல்லும்போது, நமக்குத் துன்பங்கள் விளைகின்றன. புலன்களின் செயல்பாடுகளை அடக்கி நெறிப்படுத்தினால் நன்மை பயக்கும் என்பது ஒரு நிலை. புலன்களை அடக்குவதைவிட, அவற்றின் செயல்பாடுகளை திசை திருப்பி இறைவழி பாட்டில் ஈடுபடச் செய்வதே அன்பு வழியாக இருக்கும் என்பதே சம்பந்தர் கூறும் மற்றொரு நெறி.

முதலாவது கண்களின் செயல்பாடு. முற்காலத்தில் நம் முன்னோர்களும் மன்னர்களும் அமைத்துள்ள உயர்ந்த கோபுரங்கள், கோவில்கள், அவற்றைச் சுற்றி அமைந்துள்ள நீர்நிலைகளுடன் கூடிய நந்தவனங்கள், கோவில்களில் காணப்படும் சிற்ப வேலைப் பாடுகள் ஆகியவை கண்ணைக் கவர்வனவாக உள்ளன.

இறை மூர்த்தங்களுக்கு செய்யப்படும் அழகிய அலங்காரங்கள் நம் கண்களை ஈர்ப்பன. கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த தெய்வீக அழகு, மனதை இறைவனை நோக்கி இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. இவற்றைக் காண்பதாலேயே மனதில் அன்பு பெருகி வளர்வதை நம் அனுபவத்தில் உணரலாம்.

அடுத்ததாக செவிப்புலன். இறைவனைப் பற்றிய புராணங்கள், கதைகள், இசையுடன் கூடிய துதிப்பாடல்கள் ஆகியவற்றைக் கேட்பதே ஒரு சிறந்த வழிபாட்டு முறையாகக் கூறப் பட்டுள்ளது. தேவாரம் பாடிய மூவரும் முறையாக இசைக்கத்தக்க பாடல்களை, கேட்போர் மனதில் இறையுணர்வு ஊட்டும் வகையில் பண் அமைத்துப் பாடியுள்ளனர். இறைவனைப் பற்றிய இன்னிசைப் பாடல்களைக் கேட்பதே, இதயத்தை உருக்கி மனதுக்கு விருந்தாக அமையும். 

நல்லிசையின் வாயிலாக மக்களின் மனதைக் கவர்ந்து இறை சிந்தனையில் ஈடுபடுத்த முடியும் என்பதை தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. இசையில் தேர்ச்சி பெறாதவர்களும் இறைவனைப் பற்றிய பாடல்களைக் கேட்கும் போது உலகியலை மறந்து இறை அனுபவத்தில் ஈடுபடுகின்றனர். செவிப்புலனை இறைவழிபாட்டை நோக்கி ஈர்க்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.

நாசியின் மூலம் நறுமணங்களை நுகர்கிறோம். மனதில் இனிமையான உணர்வைத் தூண்டி மனதைத் தூய்மைப்படுத்தும் தன்மையுடையது நறுமணம். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் தூபம், ஊதுவத்தி, பன்னீர், சந்தனம், மலர்கள், வில்வம் போன்றவற்றின் இனிய மணம், இறையன்பினைத் தூண்டி நம்மை இறைவனை நோக்கி இட்டுச்செல்கிறது.

நாவுக்கு இன்பமளிப்பது இறைவன் நாமத்தை நவில்வதே. இறைவனின் உயர்வு, பெருமை, கருணைத் திறம், வடிவழகு ஆகியவற்றைப் போற்றிப் பாடுவதே நாவிற்கு இன்பம் பயப்ப தாக அமையும். எண் சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம். தலையாய உறுப்பாகிய தலை இறைவனை மட்டுமே வணங்கவேண்டும்.

ஐம்புலன்களையும் அடக்கி செயல்பட முடியாமல் செய்வதைவிட, அவற்றை இறைவனின் வடிவம், புகழ், பூசனைக்குரிய பொருட்களின் தன்மை ஆகியவற்றில் முழுமையாக ஈடுபடுத்தவும், வேறு வழிகளில் இப்புலன்கள் செல்லாதவாறு செயல்படப் பழகுதலும் பக்தி மார்க்கத்தின் முதற்படியாகும். மனம், புலன்கள் ஆகியவற்றின் வழியே வழிபடுவதால், இன்பப்பயனும் அதன் வழியே கிடைக்கிறது. இன்பப்பயனை அருள்வதோடு இறைவன் வீடுபேறும் அளித்தருள்கிறார்.

"நீ நாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே 
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே."

‪‎பாடல் விளக்கம்‬: 
நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர் வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

என்ற தேவாரப் பதிகம், புலன் வழிபாட்டின் சிறப்பையும் பலனையும் விளக்குகிறது.

‪‎நன்றி‬ : கே சுவர்ணா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக