செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்

"நீறுமெய் பூசி நிறை சடை தாழ" என்னும் பதிகத்தை சம்பந்தர் பாடி முடித்தபோது, பிணம் போல் கிடந்த இளவரசி தூங்கி விழித்தவள் போல் எழுந்தாள். தான் கோவிலில் இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு சிவபெருமானை வணங்கினாள். பின்னர் நடந்த விவரங்களை தந்தை கூற, சம்பந்தரையும் பணிந்தாள். அதுமுதல் முற்றாகப் பிணி நீங்கப்பெற்றாள்.


அடுத்தது திருக்கொடி மாடச் செங்குன்றூர். தற்போது திருச்செங்கோடு என்று அழைக்கப்பெறும் தலம். இங்குள்ள செந்நிற மலையில் சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரராக விளங்குகிறார். திருமால் சந்நிதியும் உண்டு. இங்குள்ள முருகன் சிலையிலேயே வேல் இருப்பது சிறப்பு. செங்கோட்டு வேலவனை, "மறவேன் உனை நான்" என்று போற்றித் துதித்துள்ளார் அருணகிரியார்.

அத்தலத்திலுள்ள அன்பர்கள் ஞானசம்பந்தரை வேண்டி அங்கு வரவழைத்தனர். காரணம், அப்பகுதிவாழ் மக்களை கடும் நோய் வாட்டி வதைத்தது. எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. அங்குசென்ற சம்பந்தர் மலைமீதிருக்கும் ஈசனைப் பணிந்து-

"மறக்கு மனத்தினை மாற்றினம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்து உமையேத்தும் பணி அடியோம்
சிறப்பிலி தீவினைத் தீண்டப்பெறா திருநீலகண்டமே." - என்று பாடினார்.

உடனே மக்களை வாட்டிய பிணி நாட்டை விட்டே அகன்றது. உயிரினங்களையெல்லாம் காக்க ஆலகால விஷத்தையே உண்டவரல்லவா சிவபெருமான்! தன் பிள்ளை பணிந்து வேண்ட நோய் நீக்கியருளினார் அர்த்தநாரீஸ்வரர்.

அடுத்து பட்டீஸ்வரம் நோக்கிச் சென்றார் சம்பந்தர். காமதேனுவின் மகள் பட்டி ஈசனை வழிபட்ட தலமிது. இங்குள்ள விஷ்ணு துர்க்கை சக்தி வாய்ந்தவள். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் இவ்வன்னையை வணங்கிச் சென்றே வெற்றி பெற்றனராம்.

சம்பந்தர் இத்தலத்துக்கு வரும் சமயம் வெய்யில் சற்று அதிகமாக இருக்கவே, சிவபெருமான் முத்துப் பந்தல் வழங்க, அதனுள்ளே சம்பந்தரும் சிவனடியார்களும் நடந்து வந்தனராம். சம்பந்தர் நேராக வந்து தரிசிக்க வசதியாக நந்தியை விலகச் சொன்னாராம் சிவபெருமான். இத்தலத்தில் நந்தி விலகியிருப்பதை இன்றும் காணலாம். இதுபோல் நந்தனாருக்காக நந்தியை விலகச் செய்தார் சிவலோகநாதர். பரமனுக்கு பக்தர்கள் மீது அவ்வளவு பரிவு. (ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியில், "பக்தி: கிம் ந கரோதி' என்கிறார். அதாவது பக்தி எதைத்தான் செய்யாது என்கிறார். அதற்கு ஆழ்ந்த பக்தி தேவை.)

அடுத்து திருவாவடுதுறை வந்தனர். அப்போது ஞானசம்பந்தரின் தந்தை சிவபாதர் "சீர்காழியை விட்டு நாம் புறப்பட்டு நெடுநாட்களாகின்றன. யாகம் செய்யவேண்டியுள்ளது. அதற்குப் பொருள் தேவை. எனவே நாம் சீர்காழி செல்லலாம்'' என்றார். அதற்கு சம்பந்தர், "தந்தையே, இத்தல சிவபெருமானிடம் முறையிடுவோம்'' என்றார். திருவாவடுதுறை சிவனைப் பணிந்து

"இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
மிடறினில் அடக்கி வேதியனே.

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. - என்று பாடி முடித்தார்.

அப்போது ஒரு சிவகணம், பலிபீடத்தின் மீது ஆயிரம் பொற்காசுகள் கொண்ட கிழியை வைத்தது. சிவநேசனும் பிள்ளையும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மனங்குளிர யாகம் செய்து முடித்தனர். 

பின்னர் திருச்செங்காட்டங்குடி, கணபதீச் சுரம் சென்று ஈசனைப் பணிந்து பதிகம் பாடினார். அங்கிருந்து திருமருகல் வந்து ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது, ஒரு மடத்திலிருந்து அபலைப் பெண்ணொருத்தியின் அழுகுரல் கேட்டது. என்னவென்று விசாரிக்கச் சொன்னார் சம்பந்தர்.

தன் முறைமாமனிடம் மனதைக் கொடுத்த பெண், அவனுடன் சேர்ந்து வந்து அந்த மடத்தில் இரவு தங்கினாள். அந்த நிலையில் முறைமாமன் அரவம் தீண்டி மாண்டுபோனான். தாய் தந்தையரை விட்டு வந்த இச்சமயம் இவ்வாறு நேர்ந்ததே என்று கதிகலங்கி அழுதாள். சம்பந்தரின் மனம் இளகியது. அரவம் தீண்டிய உடலை சிவன் சந்நிதியில் கிடத்தச்சொல்லி

"துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன 
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன் 
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே."

என மனமுருகப் பாடினார். பதிகம் முடிந்த தும் தூங்கி விழித்தவனைப்போல எழுந்தான். இருவரும் சம்பந்தரைப் பணிய, அத்தல ஈசன் முன்னிலையிலேயே திருமணம் செய்வித்தார். அவர்கள் ஆனந்தத்துக்கு எல்லையுண்டோ.

(இதே போன்ற சம்பவம், அப்பூதியடிகளின் மகன் திருநாவுக்கரசுக்கு திங்களூரில் நிகழ்ந்தது. அப்போது திருநாவுக்கரசர் திங்கள் சடையினன் சிவன் மீது பதிகம்பட, அரவு தீண்டி இறந்த பிள்ளை மீண்டெழுந்தான். சிவனடியாரின் பாடல் மகிமை அத்தகையது.)

அடுத்து முருகனார் என்ற சிவனடியார் வாழும் திருப்புகலூர் வந்தார் சம்பந்தர். அங்கு திருநாவுக்கரசரும் வந்து சேர்ந்தார். அங்கே சிவானந்த அமிர்த வெள்ளம் பொங்கிப் பிரவகித்தது.

பின்னர் நாவுக்கரசரும் சம்பந்தரும் திருக்கடவூர் வந்து, மார்க்கண்டேயரை ஆட்கொண்ட சிவனைத் துதித்தனர். இங்கு குங்கிலியம் இடும் திருப்பணி செய்த குங்கிலியக் கலய நாயனார் அன்புடன் அவர்களை வரவேற்றார். அங்கிருந்து திருவீழிமிழலை வந்தனர்.

அச்சமயம் ஞானசம்பந்தரை சீர்காழிக்கு அழைத்துச்செல்ல அடியார்கள் வந்தனர். அப்பரோ "மிழலை நாதரை வணங்கியபின் செல்லலாமே" என்றார். அன்றிரவு சம்பந்தரின் கனவில் தோன்றிய மிழலைநாதர், "சீர்காழி தோணியப்பரை நீ இங்கேயே தரிசிக்கலாம்" என்றருளினார். மறுநாள் காலை மிழலை நாதரை தரிசித்து தோணியப்பரையும் அவருள்கண்டு பரவசப்பட்டு பதிகம் பாடினார்.

"எம் இறையே இமையாத முக்கண் ஈச
என் நேச இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை
விண்ணிழி கோவில் விரும்பியதே."

திருவீழிமிழலையின் சிறப்பென்னவென்றால், ஒரு சமயம் மகாவிஷ்ணு ஆயிரம் தாமரை மலர்களைக்கொண்டு இத்தல ஈசனைப் பூஜித்தார். ஈசன் திருவிளையாடல் புரிந்து ஒரு மலரைக் குறைத்தார். திருமால் தன் தாமரை போன்ற கண்ணையே பறித்து பூஜித்து முடித்தார். ஈசன் உவந்து திருமாலுக்கு சக்கராயுதம் வழங்கினார். 

பின்னர் சம்பந்தரும் நாவுக்கரசரும் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டுக்கு வந்தனர். அத்தல ஈசன் கோவிலின் நேர் நுழைவாயில் நெடுங்காலமாகத் திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. இதுகண்டு இருவரும் மனம் வருந்தினர். 

அவ்வூர் மக்களும் இவர்களிடம் கதவைத் திறந்தருளுமாறு வேண்டினர். அப்போது நாவுக்கரசர் சில பதிகங்கள் பாடினார். கதவுகள் திறந்தன. முதல் பாடல் காண்போமே.
-
"பண்ணின் நேர் மொழியள் உமைப் பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக்காணக் கதவினை
திண்ணமாய் திறந்தருள் செய்மினே."

தொண்டர் குழாம் யாவரும் அந்த வழியில் சென்று ஈசனைக் கண்டு நெகிழ்ந்து பணிந்தனர். பின்னர் அனைவரும் வெளியே வந்ததும் நாவுக்கரசர் சம்பந்தரிடம், "நீவிர் பதிகம் பாடி கதவுகளை மூடச் செய்க. இனி தினமும் கதவுகள் திறந்து மூடும்'' என்றார்.

"சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா இதுநன்கு இறைவைத்தருள் செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே" என்னும் பாடலை சம்பந்தர் பாட, கதவுகள் மூடிக்கொண்டன. 

இருவரும் சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து சிவனை வழிபட்டு வந்தனர். அப்போது மதுரையிலிருந்து சில அடியார்கள் அங்குவந்து சம்பந்தரிடம், "எங்கள் ராணியும் அமைச்சரும் தங்களை மதுரைக்கு அழைத்துவரச் சொன்னதன் பேரில் வந்துள்ளோம். தயை செய்யவேண்டும்'' என்றனர்.

இதைச் செவியுற்ற அப்பர், "குழந்தாய், என்னை சமணத்தில் சாரச் செய்வதற்காக அவர்கள் இழைத்த கொடுமைகள் பலப்பல. எனவே மதுரை செல்ல வேண்டாம். மேலும் தற்போது நாளும் கோளும் சரியில்லை'' என்றார்.

சம்பந்தரோ, "நம்முள் சிவன் உறையும் போது நாளும் கோளும் என் செய்யும்?'' என்று சொல்லி, "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்" எனத் தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடினார். (நவகிரக தோஷம் நீங்க இப்பதிகத்தைப் பாடுவது வழக்கம்.) பின்னர் அவர்களுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். 

ஊர் எல்லையிலேயே அமைச்சர் குலச்சிறையார் சம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்றார். "ஆலவாய் கோவில் எங்குள்ளது?'' என சம்பந்தர் கேட்க, "அதோ பாருங்கள் கோபுரம்'' என்று சுட்டிக்காட்டினார் குலச்சிறையார். அங்கேயே சிவிகையை விட்டிறங்கிய சம்பந்தர், நடந்தே ஊருக்குள் சென்று கோவிலை அடைந்து சொக்கநாதரையும் மீனாட்சியையும் வணங்கி மகிழ்ந்தார்.

அங்கே சம்பந்தரைப் பணிந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி, "தங்கள் வருகையால் மதுரை புனிதமடைந்தது. தங்கள் அருளால் சமணப்பற்று மிகுந்திருக்கும் எங்கள் மன்னரை சைவப்பற்றாளராக மாற்றவேண்டும்'' என்று முறையிட்டாள். 

"அச்சம் வேண்டாம்; சிவனருளால் நல்லதே நடக்கும்'' என்றார் சம்பந்தர். அங்கே ஒரு மடத்தில் தங்கினார். சமணர்களுக்கு கதி கலங்கியது. உடனே மன்னனிடம் சென்று "சீர்காழிப் பிள்ளையாம், ஞானசம்பந்தனாம். அவன் வந்ததிலிருந்து ஊரே ஜொலிக்கிறது'' என்றனர். "அதனால் என்ன?'' என்று அரசன் கேட்க, "அவன் தங்கியிருக்கும் மடத்திற்குத் தீயிட்டு அவனைப் பொசுக்கவேண்டும்'' என்றனர். அரசனுக்குப் புரியவில்லை. என்றாலும் சரியென்றான்.

அன்றிரவே சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இப்படி நடக்குமென்று யூகித்திருந்த அமைச்சர், ஆட்களைக்கொண்டு தீ பரவாமல் அணைத்தார். இந்த சலசலப்பு ஓசையைக் கேட்டு என்னவென்று வினவினார் சம்பந்தர். அமைச்சர் நடந்ததைக் கூற, சம்பந்தர் ஆலவாயப்பனைத் துதித்து "சிவனடியார்க்கு இட்ட தீ மன்னனையே பற்றட்டும்" என்று பதிகம் பாடினார்.

அடுத்த நிமிடம் மஞ்சத்தில் படுத்திருந்த பாண்டியனுக்கு உடலெல்லாம் எரிந்தது. கடும் காய்ச்சல் பல மருத்துவர்கள் வந்து பார்த்தும் பயனில்லை. சமண குருக்கள் வந்து மந்திரம் ஓதினார். மயிற்பீலியால் தடவி நீர் தெளித்தனர். அரசனின் வேதனை மேலும் அதிகரித்தது.

அப்போது அமைச்சர் அரசியிடம், "சீர்காழிப் பிள்ளையை அழைத்து வந்து திருநீறு தடவச் சொன்னால் ஜுரம் தணியுமே'' என்றார். அரசியும் இசைந்து மன்னனிடம் சென்று, "ஞானசம்பந்தர் என்னும் சிவபாலன் மதுரை வந்துள்ளார். அவர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் நேற்றிரவு தீயிட்டனர். தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதன் விளைவு தானோ என்னவோ. சம்பந்தரை அழைத்துவந்து நீறு பூசச் செய்யலாமா?'' என்று கேட்டாள்.

சம்பந்தர் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே வெப்பம் தணிவதை அரசன் உணர்ந்து, அதற்குச் சம்மதித்தான். சம்பந்தர் வந்து, "மந்திரமாவது நீறு" என்னும் பதிகம்பாடி திருநீறு பூச, அரசனின் காய்ச்சல் மெல்லத் தணிந்து சுய உணர்வு பெற்றான். உண்மை உணர்ந்து சைவம் சார்ந்தான்.

மயிலாப்பூரில் பூம்பாவையை உயிர்ப்பித்தது, திருவோத்தூரில் ஆண் பனையை பெண் பனையாக்கியது, திருக்கொள்ளம்புத்தூரில் ஓடக்காரனின்றி தானாக ஓடத்தை ஓடச்செய்தது என பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய சம்பந்தர், திருவண்ணாமலை சிவனையும் பணிந்து பாடினார்.

சம்பந்தர் சீர்காழி வந்ததும், அவருக்குத் திருமணம் செய்விக்க எண்ணம் கொண்டார் சிவபாதர். சம்பந்தருக்கு விருப்பமில்லை எனினும், சிவன் விருப்பம் என்றெண்ணி தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டார். நல்லூர் நம்பியாண்டார் மகளை மணந்தார். நல்லூர் ஆச்சாள்புரம் கோவிலுக்கு அனைவரும் செல்ல, ஈசன் பேரொளியாகத் தோன்றி, "யாவரும் வருக" என்று தம்முள் இணைத்துக்கொண்டான். இவ்வாறு வைகாசி மூல நட்சத்திரத்தன்று குழாத்தோடு திருஞானசம்பந்தர் இறையொளியில் கலந்தார். 

"சைவத் தொண்டோடு தமிழ்த்தொண்டும் புரிந்த சீர்காழிச் செல்வனை கைதொழுவோம்."

நன்றி : ராமகிருஷ்ணன் அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக