புதன், 17 பிப்ரவரி, 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 03 சுட்டறுத்தல்


பாடல் எண் : 01
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறு புனலில் கீழ் மேலாகப்
பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண் இணையும் மரமாம் தீ வினையினேற்கே.

பாடல் விளக்கம்:
கங்கை நீர்ப்பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினையுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதி முற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல் நெஞ்சமாகி உருகாதிருக்கிறது. உலர்ந்த மரக்கட்டையில் செய்த கண்கள் இரண்டும் வறண்டு கிடக்கின்றன. என்வினை எவ்வளவு கொடியது.


பாடல் எண் : 02
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே. 

பாடல் விளக்கம்:
தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல, "நான் இத்தன்மையன்" என்று உன்னியல்பை எனக்கு அறிவுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இரும்பினால் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன் முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?.


பாடல் எண் : 03
ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நான் உனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியர் தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசுகேனே. 

பாடல் விளக்கம்:
ஆராய்ந்து பார்க்குமிடத்து நீயே யாவர்க்கும் பெரியவன் என்று நான்கு வேதங்களும் முறையிடுகின்றன. நான் யாவர்க்கும் சிறியவன் என்பதும் வெளியாகிறது. ஆயினும் நான் உனக்குப் புறம்பானவன் அல்லன் என்பதும் அந்த ஆராய்ச்சியின் விளைவாம். நாயையும் பேயையும் ஒத்த நான் உனக்கு அன்பன் என்று சொன்னதும் நீ அதை உறுதிப் படுத்தி விட்டாய். உனக்கு வேறு அன்பர்கள் இல்லாமையினால் நீ இப்படிச் செய்யவில்லை. தகுந்த அன்பர்கள் பலர் உனக்கு இருக்கின்றனர். கருணையினால் நீ இங்ஙனம் செய்தாய். உன் மகிமையை நான் எப்படிக் கூறமுடியும்?.


பாடல் எண் : 04
பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசி
போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 

பாடல் விளக்கம்:
இறைவனே, பேசும் பொழுதும் உன் திருப்பெயரைப் பேசியும் பூசும்பொழுதும் திருநீற்றையே நிறையப் பூசும் நல் அன்பரை ஆண்டருளும் இயல்பினை உடைய நீ, அன்பில்லாத என்னை ஆண்டருளினது வியக்கத் தக்கதாயிருக்கின்றது.


பாடல் எண் : 05
வண்ணந்தான் சேயதன்று வெளிதே அன்று
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன்தன்
வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்
திண்ணந்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக்கேனே.

பாடல் விளக்கம்:
தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்?.


பாடல் எண் : 06
சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனியனேற்கே.

பாடல் விளக்கம்:
கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழிபாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திருவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங்குணத்தை என்ன வென்று புகழ்வேன்?.


பாடல் எண் : 07
தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயர் என்னும் காலால்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

பாடல் விளக்கம்:
தனியனாய்ப் பிறவிப் பெருங்கடலில் விழுந்து, பலவகைத் துன்பங்களாகிய அலைகளால் எறியப்பட்டு, மற்றோர் உதவியும் இன்றி, மாதர் என்னும் பெருங்காற்றால் கலங்கி, காமமாகிய பெருஞ்சுறாவின் வாயிற்சிக்கி, இனிப்பிழைக்கும் வழி யாதென்று சிந்தித்து, உன் ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கிடக்கின்ற என்னை முத்தியாகிய கரையில் ஏற்றி அருளினை.


பாடல் எண் : 08
கேட்டாரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்
இணையிலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே
நாயினுக்குந் தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே.

பாடல் விளக்கம்:
ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு - இருக்கை, ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக்காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.


பாடல் எண் : 09
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியனாக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசமாகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே.

பாடல் விளக்கம்:
ஆண், பெண், அலி என்னும் உருவங்கள் இல்லாதவனாய் ஐம்பூத உருவினனாய், அவற்றுக்குக் காரணமாகிய மூலப் பகுதியாய், அதனையும் கடந்து நின்ற சிவபெருமான், சிறியேனைத் தன் அடியவன் ஆக்கிப் பிறவித் துன்பம் நீங்கும் வண்ணம் ஆட்கொண்டருளி, என் மனம் உருகும்படி அதனுள்ளே நுழைந்து நிலைத்திருந்தான். உலகத்தில் இது போன்ற விந்தையொன்று உண்டோ?.


பாடல் எண் : 10
தேவர்க்கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியர் அடியாரோடும்
மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே.

பாடல் விளக்கம்:
தேவர்களால் அறியப் பெறாதவனும் மூவர்களுக்கும் மேலானவனும் ஆகிய இறைவன் தானே எழுந்தருளி என் சிறுமை கருதாது என்னைத் தடுத்தாட் கொண்டமையால், இனி நாம் யார்க்கும் குடிகளல்லோம்; எதற்கும் அஞ்சோம்; அவன் அடியார்க்கு அடியாரோடு சேர்ந்தோம். மேன்மேலும் ஆனந்தக் கடலில் குடைந்தாடுவோம்.  


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக