ஞாயிறு, 24 ஜனவரி, 2016

நட்சத்திரத் தேவார திருமுறைப் பாடல்கள் 02


14 சித்திரை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே. 01:52:03

பாடல் விளக்கம்‬:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.


15 சுவாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.! 01:116:02

பாடல் விளக்கம்‬:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


16 விசாகம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் 

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்ன நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்று உடைக் கம்பன் எம்மானை காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!.  07:61:07

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.


17 அனுஷம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 01:23:05

பாடல் விளக்கம்‬:
ஆண் மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.


18 கேட்டை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்றங்கு 
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே. 05:78:03

பாடல் விளக்கம்‬:
முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.


19 மூலம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கீளார் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் 
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. 07:24:02

பாடல் விளக்கம்‬:
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள்.


20 பூராடம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நின்னாவார் பிறர் அன்றி நீயே ஆனாய் 
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்
மன்னனாய் மன்னவர்க்கோர் அமுதம் ஆனாய் 
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் 
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே. 06:95:07

பாடல் விளக்கம்‬:
உனக்கு ஒப்பாக சொல்லக்கூடிய தன்மை உடையவர் எவரும் இல்லாததால், உனக்கு ஒப்பாக நீ ஒருவனே உள்ளாய்: அன்புடன் உன்னை நினைப்பவர் மனத்தினில் வித்தாக முளைத்து அவர்கள் உன்னை உணரும் வண்ணம் அருள் புரியும் தலைவனாக உள்ளாய்; உலகில் உள்ளவர்கள் அனைவருக்கும் மன்னவனாய் விளங்குகின்றாய்; மன்னவர்களுக்கு ஒப்பற்ற அமுதமாகவும், நான்கு மறைகளாகவும், அவற்றின் ஆறு அங்கங்களாகவும், பொன் மற்றும் மணி போன்ற செல்வங்களாகவும், செல்வத்தை அனுபவிக்கும் போகமாகவும், உலகத்தவரின் புகழ்ச் சொற்களுக்குத் தகுதி படைத்தவனாகவும், விளங்கும் உன்னை நான் எவ்வாறு புகழ்வேன். நீ எவ்வாறெல்லாம் ஆனாய், என்னவெல்லாம் ஆனாய் என்று நினைத்து வியப்பதை அன்றி, சிற்றறிவு உடைய ஏழையாகிய நான் என்ன சொல்லி உன்னை புகழ முடியும்.


21 உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே குழைக் காது உடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறை வண்டார் பொழில் சூழ்திரு ஆரூர்ச் செம்பொனே திரு ஆவடுதுறையுள் 
அறவனே எனை 'அஞ்சல்' என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!. 07:70:06

பாடல் விளக்கம்‬:
"குறை" எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே, இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்றதொரு மலை எனத் தக்கவனே, கூத்துடையவனே, குழையணிந்த காதினையுடையவனே, சிறையையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள, செம்பொன் போல்பவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால், உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ! என்னை, `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.


22 திருவோணம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரி தோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. 01:67:01

பாடல் விளக்கம்‬:
நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.


23 அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய 
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி 
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே. 04:90:06 

பாடல் விளக்கம்‬:
எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு, அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திருவேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவபெருமானை நாம் அடைந்து அருட்கடலில் ஆடுவோம்.


24 சதயம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கூடிய இலயம் சதி பிழையாமை கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று 
தேடிய வானோர் சேர் திருமுல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே!. 07:69:02

பாடல் விளக்கம்‬:
உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, `இறைவனே , நீ எங்குள்ளாய்?` என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.


25 பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே. 04:81:07

பாடல் விளக்கம்‬:
பாவியாகிய எனது நெஞ்சினில், சிவபிரானின் தலையில் அணிந்துள்ள ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், கண்களில் தென்படும் புன்சிரிப்பும், ஒலிக்கும் உடுக்கையை ஏந்திய திருக்கரமும், மேனியில் முழுதும் பூசிய வெண்ணீறும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பார்வதி தேவியை தனது உடலில் கொண்டுள்ள பாங்கும், இடையில் உடுத்திய புலித்தோலும், ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளும் நிலையாக இடம் பெற்றுள்ளன.


26 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே. 01:62:01

பாடல் விளக்கம்‬:
அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.


27 ரேவதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாருமாகில் நோக்கி நீ அருள் செய்வாயே. 04:76:06

பாடல் விளக்கம்‬:
நாயினும் கீழான தன்மை உடைய அடியேனை, சூலை நோய் கொடுத்து, நல்ல நெறியாகிய சிவநெறியினை எனக்குக் காட்டி, என்னை ஆட்கொண்ட இறைவனே, பல பாம்புகளை உடலில் அணிந்திருந்தாலும் அமுதமாக எனக்குத் தோன்றும் இறைவனே, நீ எனது உள்ளத்தில், அமுதம் போன்று எனக்கு இனியவனாக, வந்து தங்கிவிட்டாய்: எனது உள்ளத்தில் இவ்வாறு வந்து தங்கியதால் என்னை எந்த மலமும் அணுகாது. ஒருகால் பழைய தொடர்பு காரணமாக ஏதாவது மலம் என்னை வந்து சார்ந்தால், இறைவனே நீ தான் அருள் புரிந்து, அந்த நோயினை நீக்கவேண்டும்.

|| --- --- நட்சத்திர தேவாரப்பாடல் முற்றிற்று --- --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக