ஞாயிறு, 24 ஜனவரி, 2016

நட்சத்திரத் தேவார திருமுறைப் பாடல்கள் 01


01 அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. 04:096:09

பாடல் விளக்கம்:
சான்றோர்கள் வாழும் தில்லைப் பதியினில், மிகவும் விருப்புடன் அமர்ந்தவனே, வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, சமண சமயத்தைச் சார்ந்து வெகுகாலம் இருந்த நான் சமண சமயத்தை விட்டொழிந்து, நான் வந்த மரபுக்கு உரிய சிவவழிபாட்டினை மேற்கொண்டு உன்னை அடைக்கலமாக அடைந்தேன். இனிமேல் உன்னைப் பற்றிய செய்திகள் அல்லாமல் எந்த சமயநெறியின் மீதும் எனக்கு விருப்பம் இல்லை, அவைகளால் நான் அடையக்கூடிய பயனும் ஏதும் இல்லை.

மிக்கார் = சான்றோர். மற்றவர்களை விட ஒழுக்கத்தில் மிக்கவர். தக்கார்வம்=தகுந்த ஆர்வம். தான் வந்த மரபுக்குத் தகுந்த ஆர்வம். சூலை நோயினால் வருந்தி, மந்திர தந்திரங்கள் ஏதும் பயன் அளிக்காத நிலையில், தனது தமக்கையாரை அணுகியபோது, அவர் காட்டிய வழியில், அவர்களின் மரபுக்கு தகுந்தவாறு சிவபிரானின் வழிபாடு செய்தது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


02 பரணி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கரும்பினும் இனியான் தன்னை காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானை
பெரும் பொருள் கிளவியானை பெருந்தவ முனிவர் ஏத்தும் 
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. 04:074:03

பாடல் விளக்கம்:
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.


03 கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. 04:043:08

பாடல் விளக்கம்‬:
பார்வதிபாகராய், முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சி நகரிலே, சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார்.


04 ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் 
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும் 
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. 07:023:02

பாடல் விளக்கம்‬:
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.


05 மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி 
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி 
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி 
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி. 06:55:07

பாடல் விளக்கம்‬:
பண்ணாகவும், பண்ணிலிருந்து பிறக்கும் இசையாகவும் நிற்பவனே, உன்னை உள்ளத்தில் தியானிப்பவர்களின் பாவத்தை அறுப்பவனே, எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்துக்கள் அடங்கிய சொற்களாகவும் உள்ளவனே, எனது சிந்தையில் நீங்காது இருப்பவனே, விண்ணாகவும், மண்ணாகவும், தீயாகவும், மற்றும் உள்ள நீராகவும், காற்றாகவும் இருப்பவனே, மேலோர்களுக்கேல்லாம் மேலான தலைவனே, கண்ணின் மணியாகத் திகழ்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


06 திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற 
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார், 
அவ் அத்திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே. 07:82:03

பாடல் விளக்கம்‬:
ஓசையையுடைய கடல், முழக்கம் செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள்அவர் களை விட்டு நீங்காள்.


07 புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறை தொறும் தூப்பொருளாயின தூக் கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணையடியே. 04:100:01 

பாடல் விளக்கம்‬:
நிலையான தன்மை கொண்ட இமயமலையின் பெண்ணாக கருதப்படும் பார்வதி தேவியின் கைகளால் வருடப்பட்டவை, சிவபெருமானின் திருப்பாதங்கள்: இந்த பாதங்கள் வேதங்களின் எல்லாத் துறைகளிலும் கூறப்படும் விஷயங்களின் உட்பொருளாக விளங்குவன: தூய்மையான தாமரை மலர் போன்று சிவந்தும் மென்மையாகவும் காணப்படும் இந்த பாதங்கள், தன்னிடத்தில் அன்பு கொண்டுள்ள அடியார்களுக்கு, அவர்கள் பெருந்துன்பமாக கருதும் பிறவிப் பிணியினை நீக்கி வீடுபேறு எனப்படும் அமுதம் அளிப்பன ஆகும். இத்தகைய சிறப்புகள் பெற்றவை இன்னம்பரில் வீற்றிருக்கும் பெருமானின் இணை அடிகள் ஆகும்.


08 பூசம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்
உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?. 04:80:02

பாடல் விளக்கம்‬:
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!.


09 ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந்தீ முழங்க
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்து
பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே. 04:81:01

பாடல் விளக்கம்‬:
தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நிலையான கருமை நிறத்தைத் தனது கழுத்திலே பெற்று நீலகண்டனாய்த் திகழும், உலகங்களுக்கு தலைவனும், தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் வழங்கும் கற்பகமாக உள்ளவனும், தாங்கள் பெற்ற வரத்தினைக் கொண்டு போரில் ஈடுபட்ட திரிபுரத்து அரக்கர்களை அழிக்க வல்லவனும், ஊழிக் காலத்தில் ஊழித்தீ முழங்கி ஒலிக்கும் போது ஆனந்த நடனம் ஆடுபவனும் ஆகிய, தில்லை நகருக்குத் தலைவனான, சிற்றம்பலத்தில் பெருமை மிக்க நடனம் ஆடும் சிவபிரானை வானவர் தலைவன் என்று வாழ்த்துவேன்.


10 மகம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பொடியார் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த
வடியார் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும் 
கடியார் கொன்றையனே கடவூர் தனுள் வீரட்டத்து எம் 
அடிகேள் என் அமுதே எனக்கார் துணை நீ அலதே. 07:28:01

பாடல் விளக்கம்‬:
திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, திருக்கடவூரினுள், வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!.


11 பூரம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் 

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே 
சேலடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 01:048:01 

பாடல் விளக்கம்‬:
சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக..


12 உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கு அங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ. 07:77:08

பாடல் விளக்கம்‬:
பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!


13 அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே. 04:62:01

பாடல் விளக்கம்‬:
மறைகளையும் அதன் பொருளையும் நன்கு உணர்ந்தவனே, மறைகளால் புகழப்படும் பெருமானே, விண்ணவர்கள் அனைவருக்கும் மூத்தவனே, என்று உனது திருநாமங்களை ஓதியவாறே, உனது திருமேனியின் மீது மலர்கள் தூவி, ஒன்றிய மனத்துடன்  வழிபட்டு வரும் அடியேன், உனது திருப்பாதங்களைக் காண நான் ஆசைப்படுகின்றேன். பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனே, படர்ந்து காணப்படும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமானே, அனைவர்க்கும் முந்தியவனே, ஆலவாயில் அப்பனே, உனது திருவடிகளை அடியேன் காணுமாறு நீ அருள் புரியவேண்டும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக