செவ்வாய், 26 ஜூலை, 2016

நலம் தரும் திருப்பதிகம் 05 திருஅண்ணாமலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ அண்ணாமலையார்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அபீதகுஜாம்பாள், ஸ்ரீ உண்ணாமுலை

திருமுறை : ஐந்தாம் திருமுறை 04 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ ஒத வேண்டிய திருப்பதிகம்."

ஆரோக்கியம், செல்வ வளம் இரண்டும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தான். இதை அனைவருக்கும் வழங்கும் அண்ணாமலையாரை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன் என திருநாவுக்கரசர் இந்த தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலையில் விளக்கேற்றியதும் படித்தால் ஆனந்தம் வீட்டில் நிலைத்திருக்கும். 


பாடல் எண் : 01
வட்டனைம் மதிசூடியை வானவர்
சிட்டனைத் திருஅண்ணாமலையனை
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் 
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
கந்தையுடை அணிந்தானும், மதிசூடியும், வானவர்க்கு உயர்ந்தானும், திருவண்ணாமலை வடிவினனும், விருப்பம் உடையானும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ.


பாடல் எண் : 02
வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திருஅண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
வானத்துள்ளவனும், பிறைசூடிய பேராற்றல் உடையவனும், தேனென இனிப்பவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், பன்றிக்கொம்பை அணிந்தவனும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 03
மத்தனைம் மதயானை உரித்த எம்
சித்தனைத் திருஅண்ணாமலையனை
முத்தனைம் முனிந்தார் புரம் மூன்று எய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
ஊமத்தமலர் அணிந்தவனும், யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும், திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும், முத்தனும், முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 04
காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணாமலையனைக்
கூற்றனைக் கொடியார் புரம் மூன்று எய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
காற்றாகியுள்ளவனும், கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம் புரிபவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும், கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 05
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனைத் திருஅண்ணாமலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
அன்னை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
மின் ஒளியுருவாயவனும், வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், என்னை உடையவனும், இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 06
மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்
சென்றனைத் திருஅண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் 
கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
ஐந்துவகை மன்றங்களில் (சபைகளில்) எழுந்தருளியிருப்பவனும், மதியாத தக்கன் வேள்வியின் மேல் உருத்துச் சென்றவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும், சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 07
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனைத் திருஅண்ணாமலையனை
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 08
கருவினைக் கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினைத் திருஅண்ணாமலையனை
உருவினை உணரார் புரம் மூன்று எய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
கருவாயிருந்து காப்பவனும், கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும், திருவண்ணாமலை வடிவினனும், உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 09
அருத்தனை அரவை ஐந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திருஅண்ணாமலையனைக்
கருத்தனைக் கடியார் புரம் மூன்று எய்த
அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
பொருள் வடிவாயுள்ளவனும், ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும், திருவண்ணாமலை வடிவினனும், தலைவனானவனும், தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும், உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 10
அரக்கனை அலற அவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திரு அண்ணாமலையனை
இருக்கமாய் என் உடலுறு நோய்களைத் 
துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும், திருவண்ணாமலை வடிவினனும், இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக