வெள்ளி, 18 டிசம்பர், 2015

மங்களப் பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாயகி, ஸ்ரீ திருநிலை நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 24 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


நல்ல ஒலி அலைகள் பரவி மங்களம் பெருகவும் திருமணம், பிறந்தநாள், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளில் வாழ்த்தவும் குடும்ப ஒற்றுமைக்கும் ஓத வேண்டிய "மங்களப் பதிகம்" ஞானசம்பந்தப் பெருமான் பெற்றோரை வணங்கிப் பாடிய திருக்கழுமலப் பதிகம். கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்
பாடல் எண் : 01
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. 

பாடல் விளக்கம்‬:
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 02
போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத் 
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன் 
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். 


பாடல் எண் : 03
தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்
வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
தொன்று தொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு, வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 04
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக. (இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, கயல் மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர் வளமும், நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 05
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி, கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 06
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன் படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு, என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 07
குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக. நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில், பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 08
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
பெருமையுடைய கயிலை மலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார். பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட, கூர்மையான வாளை அருளினார். திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 09
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்
அடியொடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண் யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 10
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே.

பாடல் விளக்கம்‬:
மாலை போன்று, பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை எடுத்துரைக்காது, தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை விடுத்து, இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக. பசுமை வாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 11
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே. 

பாடல் விளக்கம்‬:
நீர் வளமும், தேன் வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில், மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானை, அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர். 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக