செவ்வாய், 27 டிசம்பர், 2016

சொல்லின் செல்வன் பிறந்த நாள்


மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தன்று அனுமன் பிறந்ததால், அந்நாளை அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றோம். ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதப் பௌர்ணமியன்று கொண்டாடுகின்றனர்.

சொல்லின் செல்வன் என்று ராமரால் பாராட்டப்பட்ட அனுமன், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். இவரைத் துதிப்போருக்கு சகலவிதமான ஆனந்தங்களும் கைவரப்பெறும் என புராணங்கள் கூறுகின்றன. இதிகாச புராணங்களில் இணையற்ற இடம் பெற்று இருக்கும் அனுமன், ஈரேழு பதினான்கு உலகிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

ராமாவதாரத்தின் போது அனைத்து தேவர்களும் பூமியில் வானரங்களாகப் பிறந்தனர் என்றும், சிவபெருமான் ராமனுக்கு உதவிபுரிவதற்காக அதிபராக்கிரமசாலியான அனுமனை அவதரிக்கச் செய்ததாகவும் ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதூர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற ஆஞ்சநேயர் "சிரஞ்சீவி" பட்டம் பெற்றவர்.

முழுமுதற்கடவுளான பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். காக்கும் கடவுளான திருமாலோ அலங்காரப்பிரியர். சொல்லின் செல்வன் அனுமனோ ஸ்தோத்திரப்பிரியர் ஆவார். ராம நாமத்தின் உயிர் உருவமான அவர் தமது செவிகளில் ராம நாமமே ஒலிக்க வேண்டும் என்று விரும்புவார். சிரஞ்சீவி அனுமன் வாயுதேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினார். அதனால் துயருற்ற அவர் சிவபெருமானை நோக்கி தவம்புரிய, ஜோதிச்சுடரான சிவபெருமான் அவர் முன் தோன்றி, "உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு, அவள் விரும்பியபடி ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக சிறப்புற்று திகழ்வான்" என்று கூறிவிட்டு மறைந்தார். அவ்வாறே அவர் மனைவிக்கு ஒரு மகள் பிறக்க, அவள் அஞ்சனை என அழைக்கப்பட்டாள். கேசரி என்னும் வானர வீரருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி "பெண்ணே! நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று, மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் வண்ணம் மகன் பிறப்பான்" என்றார். பிறகு அஞ்சனை காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயுதேவன் அதிசயித்தார். இதையடுத்து அவர், சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அஞ்சனை அக்கனியை உண்டாள். சில தினங்களில் அவர் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. "அஞ்சனா தேவி! சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயு புத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப்போற்றி புகழும்" என்றது.

இதைக் கேட்ட அஞ்சனை பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். அஞ்சனை தன் கணவர் கேசரியிடம் நடந்ததைக் கூறினாள். அஞ்சனையும், கேசரியும் மகன் பிறக்கும் நாளை எதிர்பார்த்து இருந்தனர். மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனாதேவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். வாயுபுத்திரன், மகாபவிஷ்டன், அர்ஜூனசகன் என்று பலபெயர்கள் உண்டு. 


வாயுதேவனின் அருளால் பிறந்ததால் காற்றைப் போல் எல்லா திசைகளிலும் திரியும் ஆற்றல் பெற்று இருந்தார். குழந்தை பருவத்திலேயே மலை சிகரங்களை தாண்டுவார். தன்னலமற்ற தொண்டர். தன்னிகரற்ற பிரம்மசாரி. எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் அவர் ஸ்ரீ ராமனுக்கு தொண்டு செய்தார்.

ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடந்தார். ராவணனின் இழிசெயல் பொறுக்காமல் இலங்காபுரியை எரித்தார். போர்க்களத்தில் வீழ்ந்த லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த மலையை கொண்டு வந்தார். அகிராவணனை பாதாள லோகத்தில் சம்ஹாரம் செய்து ராம, லட்சுமணர்களை மீட்டு வந்தார். இருப்பினும் தமது அறிவையும், ஆற்றலையும் குறித்து அவர் ஒரு போதும் தற்பெருமை பாராட்டியதே இல்லை.

"நான் ஸ்ரீ ராமனின் சாதாரண தூதன். அவரின் பணியைச் செய்வதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன். ஸ்ரீ ராமனின் கிருபையால் எனக்கு அச்சமே கிடையாது. நான் ராமனுக்கு தொண்டு செய்கையில் மரணமடைய நேர்ந்தால் அதை வரவேற்கிறேன்" என்று ராவணினிடம் சொன்னவர். இதன் மூலம் அனுமானின் பணிவை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில், ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்தபோது, "நீ யார்?" என்று ராமன் கேட்டார். அதற்கு, "காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நாமமும் அனுமன்" என்று தன் தந்தை, தாயின் பெயருடன், தன் பெயரையும் அடக்கமாக கூறுகிறார் அனுமன்.

இலங்கையில் அனுமன் சீதையை தேடி சென்ற நேரத்தில் அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு திடுக்கிட்டு ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்க கூறிய ராமபக்தன் நான். ராமர் விரைவில் வந்து சிறைமீட்டு செல்வார் என்று நயம்பட உரைத்து சீதையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார். ராம தொண்டை சிரத்தையுடன் செய்து வந்த, ஆஞ்சநேயரின் ஜெயந்தி விழா அன்று, விரதம் இருந்து ராமநாமம் பாடி அனுமானை வழிபட வேண்டும்.

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். 

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம். அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். 


பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசி அன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து "ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய" என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமான் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும். காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி சேவிக்க வேண்டும்.

வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். இதை அருகில் இருந்து கவனித்த அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார். இதையடுத்து அனுமான் கருணைக் கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். 

இன்றும் அனுமான் கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் அனுமான் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்திய பிறகு சிலைக்கு எண்ணெய் கலந்த செந்தூர பவுடரை பூசி விடுகின்றனர். பக்தர்களும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி நலமுடன் வாழ செந்தூரத்தை நெற்றியில் பொட்டாக வைத்து கொள்கின்றனர்.


இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கை அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது, ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து "ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார்" என்று கூறினார். 

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு "சிரஞ்சீவியாக இருப்பாயாக" என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

ராமாவதாரம் முடிந்தபின் ராமர் வைகுண்டம் செல்லும்போது தன்னுடன் வர அனைவரையும் அழைத்தார். ஆனால் அனுமன் வர மறுத்தார். "பூவுலகில் தான் ராம நாமம் கேட்க முடியும். அதனால் ராம நாமம் கேட்டபடி இருக்க இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டார். அதனால் தான் ராமாயண கதா காலட்சேபம் நடத்தப்படும் இடங்களில் ஒரு பலகையை தனியாகப் போட்டு வைப்பார்கள். அனுமன் அதில் அமர்ந்து ராம சரிதம் கேட்பதாக ஐதீகம்.

திரேத யுகத்தில் பிறந்த அனுமன் துவாபர யுகம் கடந்து இந்தக் கலியுகத்திலும் பூவுலகில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பணிந்தால் நல்லனவெல்லாம் நடக்கும்!.

தொகுப்பு : தில்லையம்பதி ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக