"சிவானுபவத்தினால் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதலாம்"
பாடல் எண் : 01
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே.
பொருளுரை:
இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.
பாடல் எண் : 02
செய்வது அறியாச் சிறு நாயேன் செம்பொன் பாதமலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போரேறே.
பொருளுரை:
செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.
பாடல் எண் : 03
போரேறே நின் பொன்னகர்வாய் நீ போந்தருளி இருள்நீக்கி
வாரேறு இளமென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற
சீரேறு அடியார் நின்பாதம் சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரேறாய் இங்கு உழல்வேனோ கொடியேன் உயிர் தான் உலவாதே.
பொருளுரை:
இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?.
பாடல் எண் : 04
உலவாக் காலம் தவமெய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவியேனைப் பணி கொண்டாய்
மலமாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே.
பொருளுரை:
அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?.
பாடல் எண் : 05
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட
ஊனார் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே.
பொருளுரை:
மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.
பாடல் எண் : 06
உடையானே நின்றனை உள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டு இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பதாக முடித்தாயே.
பொருளுரை:
உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.
பாடல் எண் : 07
முடித்த வாறும் என்றனக்கே தக்கதே முன்னடியாரைப்
பிடித்த வாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த வாறும் துகில் இறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.
பொருளுரை:
நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.
பாடல் எண் : 08
தேனை பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானும் சிரித்தே அருளலாம் தன்மையாம் என் தன்மையே.
பொருளுரை:
மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.
பாடல் எண் : 09
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.
பொருளுரை:
உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?.
பாடல் எண் : 10
புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினைக் காண நீ ஆண்டருள அடியேனும்
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
பொருளுரை:
இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக