பாடல் எண் : 01
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்ற போது நின்னொடு என்னொடு என்னிதாம்
புணர்ப்பது ஆக அன்றிதாக அன்பு நின் கழல்கணே
புணர்ப்பது ஆக அங்கணாள புங்கம் ஆன போகமே.
பொருளுரை:
ஆண்டவனே! உன்னோடு மாறுபட்டுத் திரிகின்ற அடிமையை நால்வகை உபாயங்களாலும் உன்னடிமை என்று உன்னோடு கூட்டிக் கொள்வது போல, மெய்யடியார் குணங்கள் ஒன்றும் இல்லாத என்னை, ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளித் தடுத்து ஆட்கொண்டு மெய்யடியார் மீது வைக்கும் அருள் நோக்கத்தை அடியேன் உணர்வுக்கு உள்ளும் புறமுமாக வைத்தருளினை! பிரமாதிகளுக்கும் அரிய இவ்வருள் நோக்கம் அடியேனுக்குக் கிடைத்தல் அரிதென்று அதன் அருமை அறிந்தபோது எனதாயிருந்த சகசமலம் ஒன்றும் என்னை நின்னொடு இரண்டறக் கூட்டுவதாகவும், இப்பிரபஞ்சத்தின் மேல் நின்ற அன்பு உன் திருவடிக்கண் மீளாது நிற்பதாகவும் ஆயின. அழகிய கண்ணாளா! திருமால், பிரமன் அகியவருடைய உலக போகங்களையும் கடந்து இருக்கும் சிவானந்த போகமே! இந்தக் காருண்ணியத்துக்கு நாயேனால் செய்யப்படுவதாகிய கைம்மாறும் உண்டோ?.
பாடல் எண் : 02
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்
ஏகநின் கழல் இணை அலாது இலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆறதாக ஐயனே.
பொருளுரை:
ஐயனே! இந்திரன் முதலியோருடைய போகங்களையும் விரும்பிலேன். உன் திருவடியையன்றி மற்றோர் பற்று மிலேன். என்கைகள் உன்னை அஞ்சலிக்கவும் என் கண்களில் நீர் ஆறு போலப் பெருகவும் வேண்டும்.
பாடல் எண் : 03
ஐய நின்னது அல்லது இல்லை மற்றொர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.
பொருளுரை:
ஐயனே! உன்னையன்றி வேறொரு பற்றிலேன். நான் முழுப் பொய்யனாயினும் உன் திருவடியை அடைந்த மெய்யன்பரது அன்பு போன்ற அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.
பாடல் எண் : 04
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே.
பொருளுரை:
இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.
பாடல் எண் : 05
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.
பொருளுரை:
உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?.
பாடல் எண் : 06
நினைப்பதாக சிந்தை செல்லும் எல்லையேய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே.
பொருளுரை:
பரமனே! உலகனைத்தும் ஆகியிருக்கிறான். எனினும் அவனை அநுபூதியில் அடைவதற்கு மனம் உதவாது; வாக்கு உதவாது; ஐம்பொறிகளும் உதவமாட்டா. அந்தக் கரணங்கள் யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. பஞ்சபூதப் பொருளாகிய பரமனை வழிபடுதற்குச் சிறிதேனும் அவைகள் பயன்படா.
பாடல் எண் : 07
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையின்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே.
பொருளுரை:
சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமையால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி, நான் உன்னை அடையும் வகையில்லை.
பாடல் எண் : 08
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.
பொருளுரை:
இறைவா! இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றும் இல்லை என்று என் அறிவுக்கு எட்டியவாறு நான் கருதுவேன். அங்ஙனம் எண்ணவில்லையேல் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ பரம்பொருள். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை.
பாடல் எண் : 09
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்புலன்களால்
முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தையாய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே.
பொருளுரை:
மனம் முதலியவற்றால் முற்காலத்தில் உன்னை அடையாத மூர்க்கனாகிய நான், வெந்தொழிந்தேனில்லை. என் மனம் குன்றி, வாய் விட்டலறினேனில்லை. இன்னும் உன்னையடைய நினைத்திருக்கிறேன்.
பாடல் எண் : 10
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே.
பொருளுரை:
இரும்பு போலும் வன் மனத்தையுடைய நான், என்னை ஆண்டருளின உன் திருவடியைப் பிரிந்தும், தீப்பாய்ந்து மடிந்திலேன். இத்தன்மையேனாகிய என்னிடத்தில், உனக்குச் செய்ய வேண்டிய அன்பிருக்கின்றது என்பது என்ன மாய வித்தை?.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக