"பேரின்பத்தில் தன்னை மறந்த நிலை நீங்காதிருத்தல் ஆனந்தாதீதம் என்பதாம்."
பாடல் எண் : 01
மாறிலாத மாக் கருணை வெள்ளமே
வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை
வேறிலாப் பதப்பரிசு பெற்ற நின்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறிலாத நீ எளியை ஆகி வந்து
ஒளிசெய் மானுடமாக நோக்கியும்
கீறிலாத நெஞ்சு உடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
பொருளுரை:
இறைவனே! உன் மெய்யன்பர் முந்தி வந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.
பாடல் எண் : 02
மை இலங்கு நல் கண்ணி பங்கனே
வந்து எனைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு நீ
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே.
பொருளுரை:
இறைவனே! நீயே எழுந்தருளி என்னை ஆட்கொண்ட பிறகு உன்னை எளிதாய் நினைத்ததே அன்றி அரிதாய் நினைத்தேனில்லை. ஆயினும் உன் மெய்யடியார் உன் உண்மை நிலையையடைய, நானொருவனுமே இந்தவுலகத்தில் தங்கியிருக்க விட்டு நீ போவது உனக்குத் தகுதியாமோ?.
பாடல் எண் : 03
பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்
போத என்று எனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே.
பொருளுரை:
பொய்யனாகிய என்னை விரும்பி நோக்கவும் நோக்கின உதவியை நினைந்து நான் வருந்தி மாண்டிலேன். இறைவனே! உன் அன்பரும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இவ்வுலகத்தில் இருத்துதல் உனக்கு முறையாமோ? என் தீவினைக்கு இறுதி இல்லையோ!.
பாடல் எண் : 04
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே
ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
பொருளுரை:
இறைவனே! எனக்கு உன் திருவடிக் கண் அன்பு இல்லையாகவும், கல்லைக் குழைத்த வித்தையைக் கொண்டு என்னைத் திருத்தி உன் திருவடிக்கு அன்பனாக்கினாய். ஆதலால் உன் கருணைக்கு ஓர் எல்லை இல்லை.
பாடல் எண் : 05
வான நாடரும் அறி ஒணாத நீ
மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத்து உடைய விச்சையே.
பொருளுரை:
இறைவனே! தேவர்கள், மறைகள், ஏனை நாட்டவர்கள் ஆகியோர்க்கும் அரியையான நீ, அடியேனை ஆட்கொள்ளுதல் முதலாயினவற்றை நோக்கும் இடத்தில், அஃது எனக்கு இவ்வுலக சம்பந்தமான அஞ்ஞானம் அழிதற்கேயாகும்.
பாடல் எண் : 06
விச்சது இன்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.
பொருளுரை:
இறைவனே! எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய். என்னை உன் கோயில் வாயில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கும் உரியேனாகச் செய்தனை. உலகத்தார், தாம் வளர்த்தது ஆதலின் நச்சு மரமாயினும் வெட்டார்; அடியேனும் உனக்கு அத்தன்மையேன்.
பாடல் எண் : 07
உடைய நாதனே போற்றி நின் அலால்
பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்
தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.
பொருளுரை:
நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னை அல்லது வேறு புகலிடம் ஏதேனும் உளதோ? பகர்ந்தருள்வாயாக. தேவர்களுக்கெல்லாம். மேலாகிய மேலோனே! உன்னை வணங்குகிறேன். இனி யானோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் உனக்கு அடிமையாக்கினாய். எனக்குத் தொடக்கமும் முடிவும் நீயே. அத்தகைய அப்பனே! உன்னை வணங்குகிறேன்.
பாடல் எண் : 08
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே
அகம்நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில்
உரியனாய் உனைப் பருக நின்றதோர்
துப்பனே சுடர் முடியனே துணை
யாளனே தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
நைய வையகத்து எங்கள் மன்னனே.
பொருளுரை:
எனக்குத் தந்தையே! அமிர்தமே! ஆனந்தமே! உள்ளம் உருகுதற்கும் வாய் ஊறுதற்கும் ஏதுவாயுள்ள தேன் போன்றவனே! உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே! ஒளி விளங்கும் திருமுடியை உடையவனே! மாறாத் துணையாய் இருப்பவனே! தொண்டர் தளர்வுற்று இருக்கும் பொழுது உதவும் செல்வமே! இப்பொய் உலக வாழ்க்கையில் நான் துன்புற்று இருக்கும்படி வைப்பது முறையாகுமோ? எங்கள் அரசே! கூறுவாயாக.
பாடல் எண் : 09
மன்ன எம்பிரான் வருக என் எனை
மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை
முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
பெய்கழற்கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப்
பாவ நாச நின் சீர்கள் பாடவே.
பொருளுரை:
என்றும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. திருமாலுக்கும் நான்முகனுக்கும் மூலப்பொருளே! என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கி இருக்கும் போது எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே! நான் உன்னைப் புகழவும் உனது சிறப்பினைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.
பாடல் எண் : 10
பாட வேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.
பொருளுரை:
இறைவனே! நான் உன்னைப் பாடுதல் வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் நின் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். நீ இந்த உடம்பை ஒழித்து வீடு தந்தருளல் வேண்டும். உனக்கு வணக்கம் செய்கிறேன்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக