செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம்


அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம்
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் 
வல்வினை தீரும் நிஜம்

சீரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க
ஸ்ரீ ராம பக்தன் என் சீர் சடை காக்க
நெறி மேவி நின்றவன் என் நெற்றியை காக்க
புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க

இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க
சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க
வீரத்தின் வீரன் என் விழிகளை காக்க
வீசிடும் காற்றோன் என் விழி மூடி காக்க

நாரணப் பிரியன் என் நாசியை காக்க
காரணப் பொருளே என் காலமே காக்க
முழுஞானம் கொண்டவன் என் மூக்கினை காக்க
முன்நின்ற வானரன் என் வாயினை காக்க

வெற்றிலை பிரியன் என் வெற்றியை காக்க
பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க
பல் நலம் கொண்டவன் என் பற்களைக் காக்க
நல் மனம் கொண்டவன் என் நாவினைக் காக்க

நாடியே வந்தவன் என் நாடியை காக்க
தேடியே வந்தென்னை தேவனே காக்க
கரிமலை கடந்தவன்-என் கன்னங்கள் காக்க
கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க

கையிலையின் வாசன் என் கைகால்கள் காக்க
கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க
நல்லன செய்பவன் என் நகங்களைக் காக்க
அல்லனதீர்ப்பவன் என் அகம் தனை காக்க

நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க
சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க
இடுக்கண் கழைபன் என் இடுப்பினை காக்க
இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க

தோழமை கொண்டவன் என் தோழ்களை காக்க
தோன்றிய புகழவன் என் தோலினைக் காக்க
குரங்கினத் தவைவன் என் குறியினைக் காக்க
குருவாகி வந்து என் குருதியை காக்க

திசையெலாம் திரிந்தவன் என் தசையினை காக்க
விசையெனப் பாய்ந்து என் செவிகளை காக்க
நடுவாகி நின்று என் முதுகினை காக்க
நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க

ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
புண்படா வண்ணமே புவனமே காக்க
இளமையும் முதுமையும் இனியவா காக்க
இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க

உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க
கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க 
சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க

இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க

வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க 
வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
எம்மை எந்நாளும் உன் நிழலினில் காக்க
இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க

நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க

தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க

பஞ்ச பூதங்கள் எனை பகைக்காது காக்க
வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க
பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க

அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
இரக்கமறு மாந்தர்கள் பகை இன்றி காக்க
சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
மறையெலாம் போற்றும் உன் பொன்னடிகள் காக்க

இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க
நில்லாத பசி எனை அண்டாது காக்க
கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க

செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
மெய் வருந்தாமல் எனை மேன்மையாய்க் காக்க
புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
தலத்திலே வந்து உன் தனையனை காக்க

கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
வானமும் வையமும் வளம் பெறக் காக்க
தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க

நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க
கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க உன் 
நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க

மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
நீள் ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க

மரணத்தின் வாசலில் மாருதி காக்க
சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க

முனிவரும் தேவரும் எனக் அருள் செய்ய
பனிதரும் திங்களின் மூலனே காக்க
இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க

பார்க்க நீ பார்க்க பாவங்கள் போக்க
தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க
வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க
காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க

ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
வீர அனுமனே காக்க ராம பக்தனே காக்க
ஸ்ரீ ராம பக்தனே காக்க காக்க.

குறிப்பு: இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : தில்லையம்பதி ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

சொல்லின் செல்வன் பிறந்த நாள்


மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தன்று அனுமன் பிறந்ததால், அந்நாளை அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றோம். ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதப் பௌர்ணமியன்று கொண்டாடுகின்றனர்.

சொல்லின் செல்வன் என்று ராமரால் பாராட்டப்பட்ட அனுமன், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். இவரைத் துதிப்போருக்கு சகலவிதமான ஆனந்தங்களும் கைவரப்பெறும் என புராணங்கள் கூறுகின்றன. இதிகாச புராணங்களில் இணையற்ற இடம் பெற்று இருக்கும் அனுமன், ஈரேழு பதினான்கு உலகிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

ராமாவதாரத்தின் போது அனைத்து தேவர்களும் பூமியில் வானரங்களாகப் பிறந்தனர் என்றும், சிவபெருமான் ராமனுக்கு உதவிபுரிவதற்காக அதிபராக்கிரமசாலியான அனுமனை அவதரிக்கச் செய்ததாகவும் ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதூர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற ஆஞ்சநேயர் "சிரஞ்சீவி" பட்டம் பெற்றவர்.

முழுமுதற்கடவுளான பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். காக்கும் கடவுளான திருமாலோ அலங்காரப்பிரியர். சொல்லின் செல்வன் அனுமனோ ஸ்தோத்திரப்பிரியர் ஆவார். ராம நாமத்தின் உயிர் உருவமான அவர் தமது செவிகளில் ராம நாமமே ஒலிக்க வேண்டும் என்று விரும்புவார். சிரஞ்சீவி அனுமன் வாயுதேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினார். அதனால் துயருற்ற அவர் சிவபெருமானை நோக்கி தவம்புரிய, ஜோதிச்சுடரான சிவபெருமான் அவர் முன் தோன்றி, "உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு, அவள் விரும்பியபடி ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக சிறப்புற்று திகழ்வான்" என்று கூறிவிட்டு மறைந்தார். அவ்வாறே அவர் மனைவிக்கு ஒரு மகள் பிறக்க, அவள் அஞ்சனை என அழைக்கப்பட்டாள். கேசரி என்னும் வானர வீரருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி "பெண்ணே! நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று, மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் வண்ணம் மகன் பிறப்பான்" என்றார். பிறகு அஞ்சனை காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயுதேவன் அதிசயித்தார். இதையடுத்து அவர், சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அஞ்சனை அக்கனியை உண்டாள். சில தினங்களில் அவர் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. "அஞ்சனா தேவி! சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயு புத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப்போற்றி புகழும்" என்றது.

இதைக் கேட்ட அஞ்சனை பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். அஞ்சனை தன் கணவர் கேசரியிடம் நடந்ததைக் கூறினாள். அஞ்சனையும், கேசரியும் மகன் பிறக்கும் நாளை எதிர்பார்த்து இருந்தனர். மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனாதேவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். வாயுபுத்திரன், மகாபவிஷ்டன், அர்ஜூனசகன் என்று பலபெயர்கள் உண்டு. 


வாயுதேவனின் அருளால் பிறந்ததால் காற்றைப் போல் எல்லா திசைகளிலும் திரியும் ஆற்றல் பெற்று இருந்தார். குழந்தை பருவத்திலேயே மலை சிகரங்களை தாண்டுவார். தன்னலமற்ற தொண்டர். தன்னிகரற்ற பிரம்மசாரி. எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் அவர் ஸ்ரீ ராமனுக்கு தொண்டு செய்தார்.

ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடந்தார். ராவணனின் இழிசெயல் பொறுக்காமல் இலங்காபுரியை எரித்தார். போர்க்களத்தில் வீழ்ந்த லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த மலையை கொண்டு வந்தார். அகிராவணனை பாதாள லோகத்தில் சம்ஹாரம் செய்து ராம, லட்சுமணர்களை மீட்டு வந்தார். இருப்பினும் தமது அறிவையும், ஆற்றலையும் குறித்து அவர் ஒரு போதும் தற்பெருமை பாராட்டியதே இல்லை.

"நான் ஸ்ரீ ராமனின் சாதாரண தூதன். அவரின் பணியைச் செய்வதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன். ஸ்ரீ ராமனின் கிருபையால் எனக்கு அச்சமே கிடையாது. நான் ராமனுக்கு தொண்டு செய்கையில் மரணமடைய நேர்ந்தால் அதை வரவேற்கிறேன்" என்று ராவணினிடம் சொன்னவர். இதன் மூலம் அனுமானின் பணிவை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில், ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்தபோது, "நீ யார்?" என்று ராமன் கேட்டார். அதற்கு, "காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நாமமும் அனுமன்" என்று தன் தந்தை, தாயின் பெயருடன், தன் பெயரையும் அடக்கமாக கூறுகிறார் அனுமன்.

இலங்கையில் அனுமன் சீதையை தேடி சென்ற நேரத்தில் அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு திடுக்கிட்டு ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்க கூறிய ராமபக்தன் நான். ராமர் விரைவில் வந்து சிறைமீட்டு செல்வார் என்று நயம்பட உரைத்து சீதையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார். ராம தொண்டை சிரத்தையுடன் செய்து வந்த, ஆஞ்சநேயரின் ஜெயந்தி விழா அன்று, விரதம் இருந்து ராமநாமம் பாடி அனுமானை வழிபட வேண்டும்.

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். 

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம். அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். 


பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசி அன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து "ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய" என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமான் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும். காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி சேவிக்க வேண்டும்.

வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். இதை அருகில் இருந்து கவனித்த அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார். இதையடுத்து அனுமான் கருணைக் கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். 

இன்றும் அனுமான் கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் அனுமான் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்திய பிறகு சிலைக்கு எண்ணெய் கலந்த செந்தூர பவுடரை பூசி விடுகின்றனர். பக்தர்களும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி நலமுடன் வாழ செந்தூரத்தை நெற்றியில் பொட்டாக வைத்து கொள்கின்றனர்.


இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கை அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது, ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து "ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார்" என்று கூறினார். 

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு "சிரஞ்சீவியாக இருப்பாயாக" என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

ராமாவதாரம் முடிந்தபின் ராமர் வைகுண்டம் செல்லும்போது தன்னுடன் வர அனைவரையும் அழைத்தார். ஆனால் அனுமன் வர மறுத்தார். "பூவுலகில் தான் ராம நாமம் கேட்க முடியும். அதனால் ராம நாமம் கேட்டபடி இருக்க இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டார். அதனால் தான் ராமாயண கதா காலட்சேபம் நடத்தப்படும் இடங்களில் ஒரு பலகையை தனியாகப் போட்டு வைப்பார்கள். அனுமன் அதில் அமர்ந்து ராம சரிதம் கேட்பதாக ஐதீகம்.

திரேத யுகத்தில் பிறந்த அனுமன் துவாபர யுகம் கடந்து இந்தக் கலியுகத்திலும் பூவுலகில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பணிந்தால் நல்லனவெல்லாம் நடக்கும்!.

தொகுப்பு : தில்லையம்பதி ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கார்த்திகை தீபம்


“சீல முனிவோர்கள் செறியு மலை..,
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை...
ஞான நெறி காட்டு மலை...
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..."

என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது.  அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும்.  அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. 

அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.


அகத்தையும் புறத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டுமென்பதை உணர்த்தும் கார்த்திகை தீபம். கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் உயரத்திலோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும்.

மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமன்றி சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும்.

இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர். திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணி தீபம். இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர்.


அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும்.

உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவர். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகின்றது.


இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி - ஆருத்ரா தரிசன திருநாளில் கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து நடராஜருக்கு சாத்தி வழிபாடுகள் நடைபெறும்.

பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து நெற்றியில் இட்டு வர துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும், நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. அண்ணாமலை யார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்பரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருளி பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.


ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச் சுடர் எண்ணெய்யை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பெருகும்.

சிவனுக்குரிய பஞ்சபூததலங்களில் அக்னி தலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பெறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது. நல்ல புத்திர சம்பத்து முதல் சித்தி தரும் தீபம் சிவதீபம் சக்திக்கு உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப் பயிராகும் கார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திர பாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.


திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159 வது பாடலின்படி திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா?

கார்த்திகை வெண்பா என்ற பாடலின்படி அண்ணாமலையார் தீப தரிசனத்தால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அறிவார்ந்த புத்திரர்கள் பிறப்பர். பிறப்பற்ற நிலை கிடைக்கும். திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள் மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால் தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.


இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது.


ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார்.

எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால் அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

"தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது.


இறைவன் ஜோதி வடிவில் வந்து ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைவரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில்

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.


நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

நந்திகேஸ்வரர் துதி

நந்திகேஸ்வரர் துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம் புரியும் கனிந்த நந்தி...! 

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி...! 

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி...! 

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக் காக்க வருக நந்தி...! 

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி...! 

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி...! 

வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி...! 

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி...! 

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திங்கள், 5 டிசம்பர், 2016

சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். "சோமன்" என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.


சிவ விரதங்களுள் சோமவார விரதமும் மிக மேலானதாகும். சந்திரனுக்குரிய தினம் திங்கள். எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. கிருதயுகம் தோன்றியதும் சந்திரன் சிவபெருமானின் முடியில் அமரும் பேற்றினைப் பெற்றதும் கார்த்திகை சோமவாரத்திலே தான். எனவே இம்மாதத்து திங்கட்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது.*

சிவாலயங்களில் சங்காபிஷேகம் நிகழ்த்தப்படும் நன்னாள். சங்குகளைக் கொண்டு கார்த்திகை மாதத்தின் முதல் அல்லது மூன்றாவது அல்லது கடைசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு நடந்து வரும் வைபவமாகும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.


இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்று தான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.


அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகமும் ஆராதனைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. சோமவாரத்தில் நிகழும் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்கள் தீரும் என்பர் - ஆன்றோர். இல்லறத்தில் கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் விளங்கவும், இல்லத்தில் பிள்ளைகளுடன் சுற்றம் சூழ தீர்க்காயுளுடனும் நல்வாழ்வு வாழவும் இந்த சங்காபிஷேக வழிபாட்டினைச் செய்யலாம்.*

சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே உணவு எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இப்படியாக விரதம் செய்பவர்கள் கயிலை மலையானின் அருள் பெற்று நலம் சேர்ப்பர். சோமவார விரதம் செய்தவர்கள் அடைந்த பலன்களை எடுத்துக் கூறும் விதமான புராணங்களில் சொல்லப்பட்டுள்ள அருட்கதைகளை இந்த விரதம் ஏற்பவர்கள் படித்துவிட்டுச் சிவனை வணங்குதல் நலம் தரும்.


திங்கட் கிழமைக்கு உரிய சந்திரன் மனோகாரகன் எனப்படுபவன். நமக்கு விளையும் நன்மைக்கும் தீமைக்கும் மனமே மூல காரணம். மனம் கொண்டு விளைந்த அவலங்களுக்கு வருந்தி, அவற்றிலிருந்து - நாம் விலகுவதற்கே வழிபாடு, சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை*.

"சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்"


என்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோம்.

இந்த நாளில் மனம் ஒன்றி வழிபடும் எவரும் நல்வழிப்படுவர் என்பதே திருக்குறிப்பு!.. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!..."

நன்றியுடன் உங்கள் ஸ்ரீ தில்லை இளந்தென்றல் 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அதிசயங்கள் அநேகமுற்ற பழநி

"சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட கசட மூட மட்டி பவ வினையிலே ஜனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ."


என்று சுவாமி மலையில் நின்று பாடிக் கொண்டிருந்த அருணகிரிநாதரின் மனக்கண் முன் பழநியாண்டவன் தோன்றினான் போலிருக்கிறது, உடனே, ‘‘அதிசயம் அனேகமுற்ற பழநி மலை மீதுதித்த அழக! திருவேரகத்தின் முருகோனே...’’ - என்று அப்பாடலை நிறைவு செய்கிறார். இதைப் படிக்கும்பொழுது "பழநி அதிசயங்கள் என்னென்னவாக இருக்கலாம் என்ற கேள்வி எழுவது இயல்பே. அருணகிரிநாதர் காலத்திற்கு முன்னரும், பின்னரும், ஏன் இன்று வரையிலும் பழநியில் உற்ற அநேக அதிசயங்கள் தான் என்னென்ன?

முருகப்பெருமானுக்கு கந்த வாசஸ் தலங்கள் ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை. இந்த ஆறும் மலைத் தலங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூரும் கடற்கரையில் அமைந்த மலைத்தலமாவே இருந்தது. சந்தன மலையாக இருந்த பாறைகளைக் குடைந்தே தற்போதைய செந்திலாண்டவர் கோயில் கட்டப்பட்டது. ‘‘சந்தனத்தின் பைம்பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே’’ “உயர் சந்தனாடவியினும் உறை குறமகள்’’ என்பது அருணகிரியார் வாக்கு.

முருகனை உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோத மூர்த்தியாகக் காணும் அருணகிரியார், இவற்றுள் மூன்றாவதான யோக மூர்த்தியாகப் பழநி ஆண்டவனைக் குறிப்பிடுகிறார். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களுள் மூன்றாவதாக விளங்கும் மணிபூரகத்திற்குரிய திருத்தலம் தான் பழநி என்பார் வாரியார் சுவாமிகள். தாழக்கோயில் எனப்படும் திருஆவினன் குடி என்பதே ஊரின் பெயர் என்றும், "பழநி"யை மலையின் பெயர் என்றும் கூறுவார் உண்டு.

பழங்காலத்தில் ஆவியர் குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இவ்விடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். ஆவியருடைய நல்ல குடி ஆதலின் ஆவிநன்குடி என்று பெயர் வந்ததாகக் கருத்து உண்டு. ஆ(காமதேனு), இனன்(சூரியன்), கு(பூமி) டி(அக்னி) ஆகியோர் பூஜித்த தலமாதலால் ஆவினன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுவர். பழங்காலத்தில் பழநி மலையைப் "பொதினி" என்றும் அழைத்தனர்.

ஆவினன்குடியைப் போலவே பொதினியாகிய பெருங்கல்லிலும் முருகன் இருந்து மக்களைக் காத்தான் என்பதற்குரிய குறிப்புகள் சங்ககால நூல்களில் உள்ளன என்கிறார் வகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள். அது மலைத் தொடரும் அன்று, சிறு குன்றும் அன்று என்பதால் "பெருங்கல்" எனப்பட்டது. ஆவினன்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கடையேழு வள்ளல்களுள் ஒருவனான பேகனை, "பெருங்கல் நாடன் பேகன்" என்று பாடுகிறார் புலவர் பெருஞ்சித்திரனார்.

அதன் உச்சியிலே அருந்திறற் கடவுள் நின்று காக்கிறது என்று கூறப்படுவதால் அது பழநியைக் குறிப்பதாகவே கொள்ளலாம். பழநி எனும் பெயரைக் கேட்டதுமே விபூதி, பஞ்சாமிர்தம், மலையின் மலைக்க வைக்கும் அழகு, வேலாண்டியாக ஞான தண்டத்துடன் மேற்கு திசை நோக்கிக் குடி கொண்டிருக்கும் பழநி ஆண்டவன், விநாயகருக்கும், முருகனுக்கும் இடையே நாரதர் நடத்தி வைத்த மாதுளங்கனித் திருவிளையாடல், நவபாஷாணத்தாலான ஒப்பற்ற முருகன் திருவுருவம் எல்லாம் நினைவுக்கு வரும். 

சித்தன் வாழ்வு, பொதினி, பழனாபுரி, சிவகிரி போன்ற பல பெயர்களை உடையது பழநி. ஊர் பெயரும் மலையின் பெயரும் ஒன்றாக அமைந்த பல திருத்தலங்களுள் ஒன்று இது. பிற உதாரணங்கள்: சுவாமிமலை, திருச்செங்கோடு, சென்னிமலை, திருவண்ணாமலை. பழநியைச் சிறப்பித்து, ‘‘காசியின் மீறிய பழநி’’,  ‘‘பிரகாசம் பழனாபுரி’’,  “பதினாலுலகோர் புகழ் பழநி’’ என்றெல்லாம் பாடும் அருணகிரிநாதர், 97 பாடல்களை "திருப்பழநி வகுப்பு" என்ற ஒரு தனி தொகுப்பையும் பாடியுள்ளார்.

திருமுருகனின் தந்தை இருப்பது கயிலைமலை, திரிபுரம் எரிக்க அவர் எடுத்தது மேருமலை, பார்வதியை அவருக்களித்தது இமயமலை, மாமன் ஆயரைக் காக்க குடையாய்ப் பிடித்தது கோவர்த்தனமலை, அவரது வேல் பிளந்தது கிரௌஞ்சமலை, விரும்பிச் சென்றமர்ந்தது பழநிமலை, தெய்வயானையைத் தந்தது பரங்குன்றம், வள்ளியை அளித்தது வள்ளிமலை - இவ்வாறு சுவைபடக் கூறுகிறார் புலவர். சே.த. ராமலிங்கம் பிள்ளையவர்கள். எனவேதான் "குறிஞ்சிக் கிழவன்" என்று குவலயம் ஓதுகின்ற முருகப் பெருமானை "மலைக்கு நாயக", "சிலோச்சிய", "குறிஞ்சி மகிழ் அயிலா" என்றெல்லாம் அருணகிரியார் விளிக்கிறார் போலும்!

‘‘கோமின் ஐயன் வில் என்பதும் குன்றமே
மாமன் வெண்குடை என்பதும் குன்றமே
நீ மண்ணும் தென் நிகேதனம் குன்றமே
பூமின் நின் அயில் போந்ததும் குன்றமே’’

என்று பாடுகிறார் பாம்பன் சுவாமிகள். மலைகளின் அழகும் இயற்கை வளமும் நம்மை மலைக்க வைப்பவனவாக உள்ளன. மலைகளில் மூலிகை நிறைந்திருப்பதால் ஓய்வெடுக்கவும், நோய் தீரவும் ஆண்டாண்டு காலமாக மக்கள் மலைத்தலங்களுக்கு விரும்பிச் செல்கிறார்கள். இத்தகு பெருமையுடைய மலைகளை "கிரிராஜகுமாரிமகன்" விரும்பித் தன் இருப்பிடமாகக் கொள்கிறான் என்பது சாலப் பொருத்தமே. அருணகிரிநாதருக்கு அதிசயங்கள் அநேகம் காட்டிக் கொடுத்த பழநி மலை எவ்வாறு தோன்றியது?

கயிலை மலையில் நாள்தோறும் சிவபெருமானைக் குறித்துப் பூஜை செய்து வந்தார் அகத்திய முனிவர். அவரைத் தென்னாட்டிலுள்ள பொதிய மலைச்சாரலில் சென்று தவம் புரியுமாறு கூறினார் சிவபெருமான். அகத்தியரது தனி பூஜைக்காகத் தமது அம்சமாகிய சிவகிரி, சக்தியின் அம்சமாகிய சக்திகிரி ஆகிய இரு மலைகளை அளித்து, தமிழ்மொழி அறிவையும் வழங்கினார். இறைவனருளால் பந்து போல லேசாகத் தோன்றிய இரு மலைகளையும் சுமந்த வண்ணம் நடக்க ஆரம்பித்தார் அகத்திய முனிவர்.

கேதாரத்தை அடுத்த பூர்ச்சவனத்தை அடைந்ததும் அந்த இரு மலைகளும் கனக்கத் தொடங்கின. தொடர்ந்து அவற்றைச் சுமக்க முடியாததால், அந்த மலைகளை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார் அகத்தியர். நெடுந்தொலைவு சென்றபோது எதிரே உயர்ந்த தோற்றமும், பரந்த மார்பும், அசுர உருவமும் கொண்ட ஒருவன், ஒரு பெண்ணுடன் நடந்து வருவதைக் கண்டார். அவனது தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் நெற்றியில் பளிச்சென்று திருநீறு துலங்கியது. தன்னைக் கண்டு வணங்கிய அவனிடம், ‘‘நீ யாரப்பா?’’ என்று அன்புடன் வினவினார் அகத்தியர்.

‘‘என் பெயர் இடும்பன்; இவள் என் மனைவி இடும்பி, நான் சூரபத்மாதியர்களுக்கு வில்லாசிரியனாக விளங்கியவன். முருகப் பெருமானது கருணைக்கோலம் கண்டு அவனது பக்தனாகி இப்புறம் வந்து விட்டேன். அடியேனுக்குத் தாங்கள் இடும் பணி எதுவாக இருந்தாலும் சிரமேற்கொண்டு செய்வேன்’’ என்று கூறி முனிவரை வணங்கினான் இடும்பன். பூர்ச்சவனத்தில் தாம் விட்டுவந்த மலைகளைச் சுமந்து கொண்டு வரும் பணியைச் செய்யக்கூடிய வல்லமை உடையவன் இவனே என்றெண்ணிய அகத்தியர், நடந்தவற்றை இடும்பனிடம் விவரித்தார்.

பூர்ச்சவனம் செல்லும் வழியை விளக்கி அத்துடன் "ஷடாக்ஷர" மந்திரத்தையும் உபதேசித்து அவனை வழியனுப்பி வைத்தார். அகத்தியர் காட்டிய பாதையில், கந்தனைக் கருத்திலும் அவன் நாமத்தை நாவிலும் வைத்து மனைவியுடன் பூர்ச்சவனத்தை நோக்கிச் செல்லலானான் இடும்பன். காடும், நதியும், மலையும் கடந்து பூர்ச்சவனம் சென்றடைந்தபோது, இறைவன், இறைவியின் அருளே திரண்டாற்போல் நின்ற சிவகிரி - சக்திகிரி எனும் அப்புண்ணிய மலைகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தான் இடும்பன்.

அவற்றை மனமாற வணங்கி மனைவியுடன் வலம் வந்து ஷடாக்ஷர மந்திரத்தை ஜபித்த வண்ணம் இருந்தான். கந்தபிரானருளால் பூமி பிளக்க, அப்பிளவிலிருந்து எட்டு பாம்புகள் தோன்றின. வானத்திலிருந்து பிரம்ம தண்டு ஒன்றும் வந்தது. பாம்புகளைப் பக்கத்திற்கு நாலாகப் பிரித்து உறிபோல் ஆக்கி இரு மலைகளையும் உறியில் வைத்து, பிரம்ம தண்டத்தால் அவற்றை இணைத்தான் இடும்பன். மலைகளைத் தூக்கி, காவடி போல் தோளில் வைத்து நடக்கத் தொடங்கினான்.

கணவனுக்கு மலைகளின் பாரம் தெரியாமலிருக்க இடும்பியும் இடைவிடாது ஆறெழுத்து மந்திரத்தை ஜெபித்த வண்ணம் அவனைப் பின் தொடர்ந்தாள். வெகு தொலைவு சென்றபின், வழி இரண்டாகப் பிரிந்தது கண்டு சற்று மயங்கி நின்றான் இடும்பன். அடியார்க்கு நல்ல பெருமாளாகிய முருகன், காற்றிலும் கடுகிச் செல்லும் குதிரை மீதேறி வேட்டைக்குச் செல்லும் அரசகுமாரன் போல் வேடந்தாங்கி, இடும்பன் எதிரே வந்தான்.

இடும்பனுக்குச் சரியான பாதையைக் காட்டிக் கொடுத்தான், பின் மாயமாய் மறைந்தான். இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பிற்காலத்தில் அருணகிரிநாதர் வாழ்விலும் நடந்தது. வயலூரிலிருந்து விராலிமலை செல்லும் வழி தெரியாமல் நின்ற அவருக்கு, முருகப்பெருமான் வேடன் உருவில் வந்து வழிகாட்டிப் பின் மறைந்து போனான். இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து,

‘‘வாதனை தவிர்த்த குருநாதனும், வெளிப்பட மகா
அடவியில் நிற்பதோர் சகாயக்காரனும்’’
- (திருவேளைக்காரன் வகுப்பு)

என்றார் அவர். இடும்பனும், வந்தவன் முருகன் என்றுணராமல் இளவரசன் காட்டிய பாதையில் நடந்தான். தொடர்ந்து செல்லமுடியாதபடி, பசியும், பாரமும் அவனைத் தளர்த்தின. மலைகளை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, மனைவி பறித்து வந்த கனிகளை உண்டு இளைப்பாறினான். இடும்பி, அந்த மலைச்சாரலின் அழகை அனுபவித்த வண்ணம் சற்று தொலைவு தனியாக நடந்து சென்றாள்.

உறங்கிக் கண் விழித்த இடும்பன், "முனிவர் காத்திருப்பாரே, காலதாமதம் ஆகிவிட்டதே" என்று எண்ணி பரபரப்புடன் எழுந்தான். மலைகளைத் தூக்க முயன்றான். அவை முன்பைவிட அதிகமாக கனத்தன. மலைகளை உற்றுப் பார்த்த போது, சிவகிரி மேல் ஒரு புதிய குரா மரம் தெரிவதைக் கண்டான். அது மட்டுமா, அந்த மரத்தடியில்,

‘‘பிடர்பு இழந்த புன் குஞ்சியும், பெருகிய
கருணைக்கடல் அலம்பு கண்களும், கவின் ஒழுகிய
முகமும், வடிவு நூல் மார்பும், கை ஒண் கோலும்
வயங்க நெடிய கோவண உடையுடன்’’

ஒரு சிறுவன் மரத்தடியில் நிற்கக் கண்டான். (பாலசுப்ரமண்யக் கவிராயரின் பழநித் திருத்தல புராணம்) இடும்பன் சிறுவனை நோக்கி, ‘‘சிறுவ! நீ ஏன் இங்கு தனியாக நிற்கிறாய்? வழி தவறி வந்துவிட்டாயோ?’’ என்று கேட்டான். பதில் ஏதும் கூறாமல் புன்னகை பூத்த சிறுவன் மீது கோபம் கொண்டான் இடும்பன். அசுர குணம் தலை தூக்கியது. ‘‘சிறுவ! நீ இம்மலையை விட்டு இறங்கு; நான் ஒரு கொலைகாரன்; நினைவிருக்கட்டும்; என்று கர்ஜித்தான்.‘‘ ஒரு பெரிய மலையைத் தூக்கும் வலிமை உடைய உனக்கு நான் ஒரு பாரமா?.

முடியுமானால் என்னையும் சேர்த்துத் தூக்கு’’ என்று புன்முறுவலுடன் கூடிய சிறுவன் மேல் திடீரென்று பாய்ந்தான் இடும்பன். அடுத்த வினாடியே பெரிய அலறலுடன் கீழே விழுந்து மாண்டான். இடும்பனின் அலறலைக் கேட்டு ஓடி வந்தாள் இடும்பி. கணவனின் கோலம் கண்டு கதறி அழுதாள். அவள் கண்களுக்குக் குரா வடிவேலன் காட்சியளித்தான். தன் கணவன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருளி அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டி நின்றாள். சற்று நேரத்தில் இடும்பனும் கண் விழித்து எழுந்தான்.

குராவடிக் குமரனிடம் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினான். இடும்பனை நோக்கி குகன் கூறினான்: ‘‘இம்மலை இங்கேயே இருக்கட்டும். இதில் நான் விரும்பி அமர்வேன். என்னுடன் நீயும் தங்கு வாயாக! என்னைக் காண வரும் பக்தர்களும் தங்கள் நிவேதனப் பொருட்களைக் காவடி கட்டி சுமந்து கொண்டு வந்து உன்னை தரிசித்தபின் என்னைக் காண வரவேண்டும்’’ என்று கூறி ஆசி கூறினான்.

இதற்குள் பிரம்ம தண்டமும் பாம்புகளும் அகத்தியரிடம் செய்தியைத் தெரிவிக்க, உடனே அங்கு வந்த அகத்தியர் முருகவேலை வணங்கி ‘‘நீ எழுந்தருள விருப்பமுடையதாயின் இம்மலை இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறினார். இதையே அருணகிரிநாதர்,

‘‘பரகிரி உலாவு செந்தி மலையினுடனே இடும்பன்
பழநிதனிலே இருந்த குமரேசா’’

என்று கதிர்காமத்தில் பாடுகிறார். பழநியில் சிவகிரியும் சக்திகிரியும் அடுத்தடுத்து இருந்தாலும் முருகப்பெருமான் சிவகிரி மீதமர்ந்து இடும்பனுக்கு அருள்புரிந்தமையால் அச்சிறப்புப் பெயரே மலைக்கு வழங்கலாயிற்று. ‘‘பழநிச் சிவகிரி மீதினில் வளர் பெருமாள்’’ (கலக்கயல் திருப்புகழ்); ‘‘அருள்சேர் பழநிச் சிவகிரி வாழ் ஐயா வருக வருகவே’’ (பழநிப் பிள்ளைத்தமிழ்); ‘‘பழநிச் சிவகிரிதனிலுறை கந்தப் பெருமாளே’’ (புடவிக்கணி திருப்புகழ்)

இவை தவிரவும் அத்வைத சாஸ்திரத்தின் சாரத்தைப் பிழிந்து கொடுக்கும் ‘குககீதை’ என்ற நூல், அகஸ்தியரின் வேண்டுகோளின்படி "குகனே பிக்ஷு வடிவில் வந்து இடும்பனுக்கு உபதேசித்தான்" என்கிறது. இவ்வரிய உபதேசம் பெற்ற இடும்பன், ஷண்முகனைப் பரமேஸ்வர ரூபம் காட்டி அருள வேண்டிய போது, யுத்தகளத்தில் சூரனுக்கும் வீரவாகுவிற்கும் காட்டிய விசுவரூப தரிசனத்தை இடும்பனுக்கும் காட்டியருளினான் என்ற குறிப்பு அந்நூலில் வருகிறது.

இவ்வாறு இடும்பனைத் தடுத்தாட்கொண்ட குராவடி வேலவனையும், இடும்பனையும் பழநிமலைப் படிகளில் ஏறிச் செல்லும்போது காணலாம். பெரும்பான்மையான முருகன் கோயில்களில் தனி இடும்பன் சந்நதியைக் காண்கிறோம். பழநியில் இடும்பனுக்கு, கள்ளும் சுருட்டும் நைவேத்தியம் செய்வதாகக் கேள்விப்படுகிறோம். அசுரனாயிற்றே, அதனால் தான் போலிருக்கிறது!

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||