பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை விஜயா ஏகாதசியாக கொண்டாடுவர். விஜயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
ஏகாதசி விரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் "ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து பால்குண (பங்குனி) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப் பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்" என்றான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "ஹே பார்த்தா! பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜயா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன.
ஒரு சமயம் தேவரிஷி நாரதர், ஜகத்தைப் படைப்பவரான தன் தந்தை பிரம்ம தேவரிடம் "தந்தையே! தாங்கள் எனக்கு பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசியின் விரத விதானத்தை கூறி அருள வேண்டும்." என்றார்.
பிரம்மதேவர் பதிலளிக்கையில் "மகனே நாரதா! விஜயா ஏகாதசி விரதமானது முற்பிறவி மற்றும் இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்க வல்லது. இவ்விரதம் அனுஷ்டிக்கும் விதியை இதுவரை நான் யாருக்கும் சொன்னதில்லை. நீ கேட்ட கேள்வியின் பதில், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் அளிக்கும் என்பதால் கூறுகிறேன். இவ்விரதத்தின் பலனானது, அனுஷ்டிப்பவர் அனைவருக்கும் அனைத்திலும் வெற்றியை அளிக்கக்கூடியது. ஆகையால் நான் விவரித்து கூறப்போகும் இவ்விரத மஹாத்மியத்தை கவனத்துடன் கேள்." என்றார்.
திரேதா யுகத்தில், புருஷோத்தமனான ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி, தனது பதினான்கு வருட வனவாசத்தின் போது பஞ்சவடியில், மனைவி சீதா மற்றும் தமையன் லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார். அக்கால கட்டத்தில், மஹா பாபியான இலங்கை வேந்தன் இராவணன், அன்னை சீதா தேவியை அபகரித்துச் சென்றான். சீதையின் நிலையை அறியாது, இழந்த சோகத்தால் துக்கம் பீடிக்க, கவலையுடன் அன்னையை தேடி அலைந்தனர். வனத்தில் அங்கு மிங்கும் அலைந்து திரிந்து, கடைசியில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஜடாயுவை கண்டு, அவரருகில் சென்றனர்.
ஜடாயு, அன்னை சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விபரத்தை பகவான் ஸ்ரீ ராமனிடம் கூறி விட்டு, அண்ணலின் மடியில் தனது உயிரை நீத்து, ஸ்வர்க்கலோகம் அடைந்தார். சீதை இருக்கும் இடம் அறிந்து, ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணனும், அன்னையைத் தேடும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறிது தூரம் சென்றதும், சுக்ரீவன் இருப்பிடத்தை அடைந்தனர். ராமபக்த ஹனுமான் முலம் சுக்ரீவனுடன் தோழமை பூண்டு, வானர ராஜன் வாலியை வதம் செய்தார் ஸ்ரீ ராமர். ஸ்ரீ ஹனுமான், கடலைக் கடந்து, லங்கா நகருக்குச் சென்று, அன்னை சீதையைக் கண்டு அண்ணல் ஸ்ரீ ராமர், சுக்ரீவன் இருவரின் தோழமைப் பற்றி விவரித்து உரைத்தார்.
லங்கையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் அசோக வனத்தில் அன்னை சீதையின் நிலையைப் பற்றி விவரமாக கூறினார். அன்னையின் நிலை அறிந்ததுடம், அன்னையை மீட்பதற்காக, வானர ராஜன் சுக்ரீவனின் அனுமதியுடன் வானரர் மற்றும் கரடிகளின் சேனையுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டனர் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள். பயணம் இறுதியில் தென்கோடி சமுத்திரத்தின் கரையில் வந்து நின்றது.
முதலை, மீன் ஆகிய ஜீவராசிகள் அடங்கிய பரந்து விரிந்த சமுத்திரத்தைப் பார்த்த ஸ்ரீ ராமர், லக்ஷ்மணனிடம் "ஹே லக்ஷ்மணா, அனேக நீர் வாழ் ஜீவராசிகள் அடங்கிய பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தை எங்ஙனம் கடப்பது?" என்று வியந்து நின்றார்.
அதற்கு லக்ஷ்மணன் மதிப்பிற்குரிய சகோதரா! தாங்களே புருஷோத்தமனான ஆதிபுருஷன் ஆவீர். தாங்கள் அனைத்தும் அறிவீர். இங்கிருந்து அரை யோஜனை தூரத்தில் குமாரி தீபம் என்னும் இடத்தில் வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமம் இருக்கிறது. அவர் அனேக பிரம்ம ஜனனங்களை கண்டவர். தாங்கள் அவரிடத்தில் சென்று நம் வெற்றிக்கான உபாயத்தை கேட்பது உசிதம்." என்றான்.
லக்ஷ்மணனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமர் அதன்படி வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று முனிவரைக் கண்டு தனது பணிவான வணக்கத்தைச் சமர்ப்பித்து அவர் முன் அமர்ந்தார். மனிதனாக அவதாரம் எடுத்துள்ள புருஷோத்தமனான ஸ்ரீ ராமரை அறிந்து கொண்ட வக்தால்ப்ய முனிவர், ஸ்ரீ ராமரிடம் "ஹே ஸ்ரீ ராம்! எக்காரியத்திற்காக இங்கு நீ எழுந்தருளியுள்ளாய்." என்று வினவினார்.
அதற்கு ஸ்ரீ ராமர்" மஹரிஷி! நான் என்னுடைய படைகளுடன் சமுத்திரத்தின் கரையில் முகாமிட்டுள்ளேன். என் மனைவி சீதையை இலங்கை வேந்தனான இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்துள்ளான். ஆகவே என் மனைவி சீதையை மீட்பதற்காகவும், அரக்கர்களை யுத்தத்தில் வெல்லவும் பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடந்து இலங்கை செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இதற்கான உபாயத்தை வேண்டி தங்களிடம் வந்துள்ளேன். தாங்கள் தயவு கூர்ந்து பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடப்பதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்." என்றார்.
வக்தால்ப்ய ரிஷி ஸ்ரீ ராமரிடம் "ராமா! தங்களுக்கு மேலான ஒரு விரதத்தைப் பற்றி கூறுகிறேன். கேளுங்கள். இதை அனுஷ்டிப்பதால் தங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும்." என்றார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த ஸ்ரீ ராமர் "முனிவரே அப்படி ஒரு மகத்தான விரதம் எது? அதன் பெயர் என்ன? அதை அனுஷ்டிப்பதால் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிட்டுமா?" என்று வினவினார்.
அதற்கு வக்தால்ப்ய முனிவர் "ஹே மரியாதைக்குரிய புருஷோத்தமா, பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசி விரதத்தை விரத விதானப்படி அனுஷ்டிப்பதால் தாங்கள் நிச்சயமாக சமுத்திரத்தைக் கடந்து செல்வது மட்டுமின்றி யுத்தத்திலும் தங்களுக்கு வெற்றி கிட்டும். ராமா, இவ்விரதத்திற்காக முந்தைய நாளான தசமியன்று தங்கம், வெள்ளி, தாமிரம், அல்லது மண்ணால் ஒரு கலசம் செய்து அதில் நீர் நிரப்பி அதில் மாவிலையுடன் சேர்த்து ஐந்து வகை இலைகளை வைத்து ஒரு மரப்பலகையின் மீது ஸ்தாபிதம் செய்யவும்.
ஏழு வகை தானியங்கள் கலந்த கலவையை மேடு போல் செய்து அதன் மேல் கலசத்தை வைக்கவும். கலசத்தை மூடி அதன் மேல் பார்லியை நிரப்பி அதில் ஸ்ரீமன் நாராயணனின் தங்க விக்ரஹத்தை ஸ்தாபிதம் செய்யவும். ஏகாதசி அன்று காலையில் ஸ்நானம் முதலிய நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணருக்கு தூபம், தீபம், நைவேத்யம், தேங்காய், பழம், தாம்பூல சமர்ப்பணத்துடன் பூஜை செய்ய வேண்டும். அன்று நாள் முழுவதும் கலசத்தின் முன் அமர்ந்து தியானம் செய்வதுடன், இரவிலும் அதே போல் அமர்ந்து கண் விழித்தல் வேண்டும். மறுநாள் துவாதசியன்று நதி அல்லது குளக்கரையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு அக்கலசத்தை பிராம்மணருக்கு தானமாக அளிக்க வேண்டும். ராம, தாங்கள் இவ் விஜயா ஏகாதசி விரதத்தை, தங்கள் படைகளின் சேனாபதியுடன் ஒன்று சேர்ந்து கடைப்பிடித்தால் கட்டாயம் தங்களுக்கு வெற்றி கிட்டும்." என்றார்.
முனிவரின் ஆக்ஞைப்படி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தனது படைகளுடன் விதிப்பூர்வமாக விஜயா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தின் பலனால் அவருக்கு அரக்கர்களுடனான யுத்தத்தில் வெற்றி கிட்டியது. இவ்வாறு கூறிய பிரம்ம தேவர், நாரதரிடம், "மகனே, இவ்விரத நாளன்று, எவர் ஒருவர் இவ்விரத மஹாத்மியத்தை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ, அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த பலன் கிட்டுகிறது" என்றார்.
இதைக் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர் "ஹே ராஜன்! எவர் ஒருவர் இவ்விரதத்தை விதி பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாது மேலுலகிலும் வெற்றி நிச்சயம்' என்று அருளினார்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ரூபம் எவ்விதமானாலும் சரி, அவரை பூஜிப்பதால், சர்வ மனோகாம்யங்களும் பூர்த்தி அடையும். ஸ்ரீ ராமர், தான் விஷ்ணுவின் அவதாரம் என்று அறிந்து இருந்தாலும், தான் எடுத்துள்ள மானுட அவதாரத்தில் சகலருக்கும் நன்மார்க்கத்தை காட்டுவதற்காக, விஷ்ணுவை ஆராதிக்கும் ஏகாதசி விரதத்தை, ஒரு சாதாரண மனிதராக மேற்கொண்டார். வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் வெற்றியை அடைய விரும்புவோர், இவ்விரதத்தை கடைப்பிடித்தால், அதன் விளைவாகக் கிட்டும் அளவில்லா பலனை அடைவதற்கான நற்பேற்றினைப் பெறுவர். விஜயா ஏகாதசி விரதம், மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றியை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது.
நன்றி : Kshetra Yaatra
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||
|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக