வெள்ளி, 17 மார்ச், 2017

ஐம்பூத மூர்த்திகள்


இவ்வுலகிலுள்ள அனைத்தும் பஞ்சபூதங்களால் உருவானவை. பூதம் என்றால் மிகப்பெரியது என்று பொருள். பஞ்சபூதங்களில் இறைவன் நிறைந்து விளங்குகிறான் என்பதை மாணிக்கவாசகர்,

"பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!'

என்கிறார். அதாவது, "ஆகாயத்தில் சப்தம் என்ற ஒரு குணமாகவும்; காற்றில் சப்தம், ஸ்பரிசம் என்ற இரண்டு குணங்களாகவும்; தீயில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம் என்ற மூன்று குணங்களாகவும்; நீரில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம், ரசம் என்ற நான்கு குணங்களாகவும்; நிலத்தில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களாகவும் திகழ்பவனைப் போற்றுவோம்" எனக் குறிப்பிடுகிறார்.

சிவபெருமான் ஐம்பெரும் பூதங்களாகக் காட்சி கொடுத்தருளிய தலங்கள் பஞ்சபூதத் தலங்களாக விளங்குகின்றன. காமாட்சியம்மனுக்கு இறைவன் காட்சி கொடுத்த காஞ்சிபுரம் பிருத்வி தலம் (மண் தலம்) எனப்படுகிறது. (திருவாரூரும் பிருத்வி தலமாகக் கருதப்படுகிறது.) சர்வேஸ்வரன் தண்ணீராக எழுந்தருளி அகிலாண்ட நாயகிக்கும், யானை, சிலந்தி ஆகியவற்றுக்கும் அருள்புரிந்த அப்பு (நீர்) தலம் திருவானைக்கா. 

அனைத்துலகிலும் ஒளிவீசும் பரம்பொருள் நெருப்புக்கம்பமாக நின்று பிரம்மா, விஷ்ணுவுக்குக் காட்சி தந்த தேயு (நெருப்பு) தலம் திருவண்ணாமலை. அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்புரியும் ஈசன், எல்லா உயிர்களும் சுவாசிக்கின்ற காற்றாக எழுந்தருளி சிலந்தி, பாம்பு, யானை ஆகியவற்றுக்கு முக்தியளித்த காளஹஸ்தி வாயு தலம். அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ள இறைவன் வானமாக விளங்கி பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் திருக்காட்சி தந்த ஆகாயத்தலம் சிதம்பரம்.

பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம் ஆகிய பஞ்ச லிங்கங்களும் சிவபெருமானின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிருத்வி லிங்கம் படைத்தலையும்; அனைத்துப் பொருட்களின் அழுக்கை நீக்கி, தூய்மைப்படுத்தி, உயிரினங்களின் தாகத்தைப் போக்கி வாழவைக்கும் தண்ணீராக உள்ள அப்புலிங்கம் காத்தலையும்; யாராலும் நெருங்க முடியாததும், எங்கும் பரவிச் சென்று எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிக்கொள்வதுமான நெருப்பாகவுள்ள தேயு லிங்கம் அழித்தலையும்; கண்களுக்குப் புலனாகாமல் எல்லா இடங்களிலும், உள்ளும் புறமும் உலவி உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வளிக்கும் காற்றாக உள்ள வாயு லிங்கம் மறைத்தலையும்; யாராலும் தீண்ட முடியாமல் இருப்பதும், அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று இயங்குவதற்கு இடம் தந்து எல்லாவற்றையும் தன்னுள் கொண்டதுமான வானமாகவுள்ள ஆகாய லிங்கம் பக்குவ மடைந்த ஆன்மாக்களுக்கு முக்தி கொடுத்து தன்னுள் ஏற்றுக்கொள்ளும் அருளல் தொழிலையும் குறிக்கிறது.

பஞ்சலிங்கத் தலங்களாக விளங்கும் காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவற்றின் சிறப்புக்களை இனி காண்போம்.

காஞ்சி சக்தி பீடங்களுள் ஒன்று. கச்சி என்றால் ஆமை. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது, ஆமையாக அவதாரம் செய்த திருமால் பின்னர் சிவனை வழிபட்டு மீண்டும் விஷ்ணு வடிவத்தையும், வைகுந்த வாழ்வையும் இத்தலத்தில் பெற்றதால் இத்தலம் திருக்கச்சி எனப்பட்டது. நான்கு திசைகளிலும் நான்கு மறைகளைப் போன்று நான்கு பகுதியாக வளர்ந்துள்ள ஒற்றை மாமரத்தடியில், மண்ணால் லிங்கம் செய்து ஆகம விதிப்படி பூஜித்த காமாட்சியம்மனுக்கு மாமரத்தில் சிவபெருமான் காட்சிதந்த தலம் இது.

சிவபெருமான் தண்ணீராக எழுந்தருளியுள்ள தலம் திருவானைக்கா. "கா" என்றால் பூஞ்சோலை. நாவல் மரத்துக்கு ஜம்பு விருட்சம் என்று பெயர். பூஞ்சோலையில் நாவல் மர நிழலில் வெளிப்பட்டிருந்த சுயம்புலிங்கப் பரம்பொருளை யானையும் சிலந்தியும் வழிபட்ட தலம் இது. ஈசன் ஜம்பு விருட்சத்தின் அடியில் எழுந்தருளியதால் இத்தலம் ஜம்புகேஸ்வரம் எனப்பட்டது. இத்திருத்தலத்தில் வழிபட்டால் ஆன்மா தூய்மையடைந்து பிறவி நீங்கி முக்தி பெறும். லிங்கப் பரம்பொருளிலிருந்து எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் எனப்படுகிறது.

அக்னித் தலமான திருவண்ணாமலை, நினைத்தால் முக்தி தரும் தலம். பிரம்மாவும் விஷ்ணுவும் தாமே பரம்பொருள் என்று வாதிட்டபோது அவர்களது அஞ்ஞானத்தைப் போக்குவதற்காக ஈசன் பேரொளிப் பிழம்பாக, ஜோதிலிங்கமாக வெளிப்பட்டார். ஆணவ இருள் நீங்கி ஜோதியை அவர்கள் தொழுதபோது, ஈசன் திருவடிகளும் திருமுடியும் மறைந்திருக்குமாறு லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்தருளிய தலம். எல்லாவற்றையும் சுத்திகரிக்கும் நெருப்பாக இறைவன் நின்று ஒளிவீசும் தலமிது.

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் வாயு லிங்கப் பரம்பொருளை வழிபட்டு முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. சிவபெருமான் காற்றாக எழுந்தருளி உலக உயிர்களை வாழவைக்கும் திருத்தலம் இது. இங்கு லிங்கப் பரம்பொருளிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கும். கர்ப்பக்கிரகத்தில் எரியும் தீபம் சதாசர்வ காலமும் காற்றால் மோதப்பட்டதுபோல் அசைந்து கொண்டே இருப்பதிலிருந்து இதை அறிந்துகொள்ளலாம்.

எங்கும், எல்லாமாக வியாபித்திருக்கும் பரம்பொருள் அம்பரமாக (ஆகாயமாக) எழுந்தருளியிருக்கும் தலம் சிதம்பரம். சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் வலப்பக்கத்தில் ஆகாய லிங்கம் மந்திர ரூபமாக, எந்திர சக்கரத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் தங்கத்தாலான வில்வ மாலைகள் திரையிடப்பட்டு காட்சி தருகின்றன. இங்கு ஈசன் அரூபமாக பக்தர்களுக்குக் காட்சிதருகிறார். இதனை ஸ்ரீரகசியம் அல்லது சிதம்பர ரகசியம் என்பார்கள்.

இத்தலத்தில் அருவமாக ஸ்ரீரகசியமும், உருவமாக ஸ்ரீநடராஜர் - சிவகாமிசுந்தரி அம்மையும், அருவுருவமாக ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரும் (படிகலிங்கம்) காட்சியருள்கிறார்கள். பஞ்சபூதலிங்கங்கள் எழுந்தருளியுள்ள தலங்களில் இறைவனை பக்தியுடன் வழிபடுகின்றவர்களை இயற்கைச் சீற்றங்களாகிய பூகம்பம், வெள்ளம், நெருப்பு, புயல், இடி, மழை போன்றவற்றால் துன்பம் நேராமல் இறைவன் காத்தருள்கிறார்.

நன்றி பிரணவி (ஓம் ஆன்மிக இதழ்)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக