மாசி மாத சுக்ல பட்சத்தில் இந்த ஏகாதசி வரும். தேவேந்திரனின் சாபத்திற்கு ஆளான மால்யவான் எனும் மன்னனும் அவன் மனைவி புஷ்பவந்தி எனும் தேவ கன்னிகையும் பூமியில் பேய் உருக்கொண்டு அலைந்து அரச மரத்தடியில் பசியால் வருந்தி, அன்றைய ஏகாதசி இரவில் கண் விழித்திருந்த காரணத்தால் சாப விமோசனம் பெற்ற தினம். இந்த விரதத்தால் பேய்களுக்கே நற்கதி கிட்டும் எனில், மானிடருக்கு கிடைக்கும் பேரருளைப் பற்றி சொல்லவா வேண்டும்?.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம். யுதிஷ்டிரா! இந்த விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால் அகால மரணத்தால் பூத, பிரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள் அனைத்தும் அந்நிலையிலிருந்து விடுபட்டு நன்னிலை எய்துவர். மேலும் இந்த விரதமானது நம்மை பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கும். இதனை மிகவும் சிரத்தையுடனும், பக்தியுடனும், விதிப்பூர்வமாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த நன்னாளின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கவனமாகக் கேள் !! என்று கூறத் தொடங்கினார். ஒருசமயம் தேவலோகத்தில் இந்திரனின் நந்தவனத்தில் அனைத்து தேவர்களும் உல்லாசமாக இருந்தனர். புஷ்பதண்டன் என்னும் கந்தர்வன் தலைமையில் இனிமையான கானம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கேற்ப கந்தர்வ கன்னிகளும் அங்கே அழகாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே அமராவதியின் ஆஸ்தான பாடகனான கந்தர்வன் சித்திரசேனன் அவனது மனைவி மாலினி மற்றும் அவர்களுடைய அழகான மகன் மால்யவான் உடன் அங்கே வந்தார். அப்போது அங்கே நாட்டியமாடிக் கொண்டிருந்த புஷ்பவதி என்னும் கந்தர்வ கன்னி மால்யவானின் அழகைக் கண்டு மயங்கினாள்.
அவளது நடன அசைவுகளால் அவனை கவர முயற்சி செய்தாள். அதைக் கண்ட மால்யவானும் அவளது அழகில் மயங்கி அவளை ரசித்தான். அதனால் அவனும் அங்கே பாடிக் கொண்டே அவளுடன் நடனமாடத் தொடங்கினான். ஆயினும் பிறரை மகிழ்விக்கும் பொருட்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட மயக்கத்தினால் காம வயப்பட்டு சுருதியையும், தாளத்தையும் மறந்தனர். இதனால் சங்கீதத்தின் லயம் கெட, கானத்தின் ஆனந்தம் கெட்டது. இது தேவேந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதனால் அவர் அவர்கள் இருவரையும் சபித்தார். நீங்கள் இருவரும் சங்கீதத்தின் புனிதத்தை மதிக்காமல் அவமானம் செய்தது அன்னை சரஸ்வதியை அவமதித்து போலாகும். மேலும் கற்றறிந்தோர் நிறைந்த சபைதனில் அடக்கம், பணிவு, நாணம் இன்றி செயல்பட்டதால் நீங்கள் இருவரும் தேவலோகம் விடுத்து பூலோகத்தில் சபிக்கப்பட்ட பிசாச ரூபம் கொண்டு வாழ்வை கழிக்கக் கடவது என்று சாபம் இட்டார்.
தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் அவர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து பிசாச வடிவம் கொண்டு பூலோகத்தில் ஹிமாலய பர்வதத்தின் அடியில் வீழ்ந்து அங்கேயே வேதனை அடைய தொடங்கினர். என்ன தான் குகையில் வசித்தாலும் அங்கே இருந்த கடும் பனியினால் உடல் நடுக்கம் கொண்டு பற்கள் கிடுகிடுத்தன. மற்றும் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு, உடல் விறைத்துக் கொண்டு மிகவும் துன்பத்தை அனுபவித்து வந்தனர். இப்படியொரு வாழ்க்கை வாழ்வதை விட நரகவேதனையே மேலானது என்றெண்ணி ஒருவருக்கொருவர் அழுது கொண்டிருந்தனர்.
தெய்வாதீனமாக அவர்கள் அங்கே வந்த சில காலத்திலேயே மகிமை வாய்ந்த ஜயா ஏகாதசி நன்னாள் தோன்றியது. அன்று இருவரும் குளிரினால் மிகுந்த வேதனை அடைந்து அன்று உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் பட்டினியாகக் கிடந்தனர். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஜயா ஏகாதசி விரதத்தினை அனுஷ்டித்தனர்.
குளிர் தாங்க முடியாமலும், பசி மயக்கத்தினாலும் அவர்களிருவரும் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்தனர். அன்றைய இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தனர். இவ்வாறாக தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் துன்பப்பட்ட போதும், அறியாமல் அவர்கள் அனுஷ்டித்த ஜயா ஏகாதசி விரதத்தால் அவர்கள் இறைவன் ஸ்ரீ ஹரியின் அருளுக்குப் பாத்திரமானார்கள்.
மறுநாள் துவாதசி உதித்த வேளையில், இறைவன் அருளால் இருவரும் பிசாச ரூபம் நீங்கி அழகிய கந்தர்வ உடலைப் பெற்றனர். மேலும் அவர்கள் இருவரும் தேவலோகத்தை நோக்கிப் பயணிக்கையில் தேவகணங்களும், கந்தர்வர்களும் மலர்மாரி பொழிந்து அவர்களை வாழ்த்தினர். இருவரும் விரைவில் தேவலோகத்தை அடைந்து இந்திரனை வணங்கி நின்றனர்.
அதுகண்ட தேவேந்திரன், எனது கடுமையான சாபத்திலிருந்து நீங்கள் இருவரும் அப்படி என்ன புண்ணிய காரியம் செய்து இவ்வளவு விரைவாக முக்தி அடைந்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு மால்யவான், “ஹே தேவேந்திரா !! எம்பெருமான் இறைவன் ஸ்ரீ ஹரி மகாவிஷ்ணுவின் அருளால் மற்றும் ஜயா ஏகாதசி விரத புண்ணியத்தினாலும் தான் நாங்கள் எங்கள் பிசாச வடிவம் நீங்கி நன்னிலையை அடைந்தோம்” என்றான்.
அதனைக் கேட்ட இந்திரன், “ஹே மால்யவான்!! ஜயா ஏகாதசி விரதமிருந்து நீங்கள் இறைவன் ஸ்ரீ ஹரியை மகிழ்வித்து பாவங்கள் நீங்கி பவித்ரமடைந்தீர்கள். எனவே நீங்கள் இருவரும் இப்போது என்னுடைய வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரியவர் ஆகிவிட்டீர்கள். ஏனெனில், எவரொருவர் ஈசனையும், நாராயணனையும் வழிபடுகிறார்களோ அவர்கள் தேவர்களின் வணக்கத்துக்கு உரியவர் ஆகிறார்கள் என்று கூறி, அவர்களை தேவலோகத்தில் உல்லாசமாக இருக்கும்படி கூறுகிறான்.
இவ்வாறு ஜயா ஏகாதசியின் மகத்துவத்தைக் கூறி முடித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரா!! எவரொருவர் ஜயா ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாகக் கடைபிடிக்கிறாரோ, அவர் பூத, பிரேத, பிசாச உடல் மற்றும் தொல்லைகளிலிருந்து முக்தி பெறுவதோடு மட்டுமின்றி, அவர் அனைத்து பாவங்களில் இருந்து விடுபடுவதோடு, அவர் அனைத்து தானம், தவம், யாகம் ஆகியவற்றை செய்த பலனை அடைகிறார் என்று கூறினார்.
அதோடு விதிபூர்வமாக ஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அனைத்து புனித நதிகளில் நீராடிய பலனையும், 1000 ஆண்டு காலம் சுவர்கத்தில் வசிக்கும் பேற்றினைப் பெறுவார்கள். மேலும் எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் சாம வேதம் உச்சரித்து செய்யப்படும் அக்னிஸ்தோம யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார்.
நன்றி : Chamarthi Srinivas Sharma (Chennai) ஐயா அவர்களுக்கு
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||
|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக