ஞாயிறு, 7 மே, 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : நான்காம் திருமுறை 62 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்று என்று
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே! பார்வதிபாகனே! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே! திருஆலவாயிலுள்ள அப்பனே! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 02
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்று என்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நான்கு முகங்களை உடையவனே! தலைவனே! ஞான வடிவினனே! என் பொன் போன்றவனே! எல்லோரையும் ஆள்பவனே! அன்பனே! ஆலவாயில் அப்பனே! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி, பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 03
ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்தாகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய்க்
கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே! அருள் செய்வாயாக.


பாடல் எண் : 04
செய்யநின் கமல பாதம் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத்தானே மான் மறி மழுவொன்று ஏந்தும்
சைவனே சால ஞானம் கற்று அறிவிலாத நாயேன்
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
தேவர் தேவனே! நீலகண்டனே! மான் மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.


பாடல் எண் : 05
வெண் தலை கையிலேந்தி மிகவுமூர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
உலகத் தலைவனே! ஆலவாய் அப்பனே! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன். அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள் செய்வாயாக.


பாடல் எண் : 06
எஞ்சலில் புகலிது என்று என்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
விடத்தைக் கழுத்தில் அடக்கிய, சிவம் என்ற சொற் பொருளானவனே! ஆலவாயில் அப்பனே! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக.


பாடல் எண் : 07
வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழுமலர்ப் பாதம் காணத் தெண்திரை நஞ்சம் உண்ட
குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்தாயுள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே! அழகிய வில்லை ஏந்தியவனே! கூத்தனே! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னை வாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 08
நறுமலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே! ஆலவாயில் அப்பனே! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக.


பாடல் எண் : 09
நலந்திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பதாக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன் வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள் செய்வாயாக.


பாடல் எண் : 10
பொடிக்கொடு பூசி பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்க மாட்டேன்
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன். கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே! அடியேனுக்கு அருள் செய்வாயாக.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக