வெள்ளி, 5 மே, 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 115 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே
பாலின் நேர் மொழியாள் ஒரு பங்கனே பாதம் ஓதலர் சேர்புர பங்கனே
கோல நீறணி மேதகு பூதனே கோதிலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுதுண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே.

பொருளுரை:
சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர். அவருக்கு விருப்பமான பாடல் இருக்கு வேதமாகும். அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர். அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர். குற்றமற்றவர்களின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர். ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர். தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 02
பாதியாய் உடன் கொண்டது மாலையே பம்பு தார் மலர்க் கொன்றை நன்மாலையே
கோதில் நீறுது பூசிடும் மாகனே கொண்ட நற்கையின் மானிட மாகனே
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆனையே நாடி அன்று உரி செய்ததும் ஆனையே;
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.

பொருளுரை:
சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை. பாம்பும், கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும். குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர். இடத்திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர். அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்சகவ்வியத்தால். அவர் உரித்தது யானையை. வேத நூல்களை அருளுவது அவரது திருவாய். விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருஆலவாய்.


பாடல் எண் : 03
காடுநீட துறப்பல கத்தனே காதலால் நினைவார்தம் அகத்தனே
பாடு பேயோடு பூதம் மசிக்கவே பல்பிணத்தசை நாடி அசிக்கவே
நீடும் மாநடம் ஆட விருப்பனே நின்னடித் தொழ நாளும் இருப்பனே
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே.

பொருளுரை:
இறைவர், பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர். தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர். பாடுகின்ற பேய், மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர். அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர். திருவடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர். அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே. 


பாடல் எண் : 04
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் அறுத்தியே 
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய கண்டனே.

பொருளுரை:
முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர். உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர். பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர். தூய வெண்ணிற இடபத்தின் மீது ஏறி இருப்பீர். மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர். அன்பில்லாதவரை இகழ்வீர். தேவர்கட்குத் தலைவரே! குற்றங்களை நீக்குபவரே. திருஆலவாயின்கண் வீற்றிருந்தருளும் அளவிடமுடியாத பரம்பொருளே.


பாடல் எண் : 05
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன் பாலையே
வென்றி சேர் மழுக்கொண்டு முன் காலையே வீழவெட்டிடக் கண்டு முன் காலையே
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்தன கங்கையால்
அன்று நின்னுருவாகத் தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே.

பொருளுரை:
தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட, புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று. ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசாரசருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான். அப்பெருமான், தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர். அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார். 


பாடல் எண் : 06
நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
தக்க பூ மனைச் சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே.

பொருளுரை:
சிவபெருமான் நாடுகளிலும், ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார். அவர் திருமேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ, அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார். தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர். திருத்தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர். எலும்பு மாலை அணிந்துள்ளவர். மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர். அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 07
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெங்கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனே அனலாடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவுகங் காளமே
ஐயம் ஏற்பது உரைப்பது வீணையே ஆலவாய் அரன் கையது வீணையே.

பொருளுரை:
சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்தது கையால் குட்டி. அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி. அவரே தலைவர். அனலில் ஆடும் திருமேனியுடையவர். அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர். உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே. அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே.


பாடல் எண் : 08
தோள்கள் பத்தொடு பத்தும் மயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்துக் களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை எடுத்த உன் மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ ஆலவாய் அரன் உய்த்தது மெய்கொலோ.

பொருளுரை:
வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து, தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து, இப்பூவுலகில் களித்து நிற்க, தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக் கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன். அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற, இராவணனின் தலை நெரிய, அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான். உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல்? திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ?.


பாடல் எண் : 09
பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதம் நீண்முடி நேடிட மாலொடே
துங்க நற்தழலின் உரு வாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரை செய்வது பிச்சையே
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இடக்கையே.

பொருளுரை:
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும், முடியையும் தேட, அவர்கள் மயங்க, உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான். பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின, அவர்கள் வாய். சிவந்த கயல் மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே. அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே. அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே. திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும்.


பாடல் எண் : 10
தேரரோடு அமணர்க்கு நல் கானையே தேவர் நாள்தொறும் சேர்வது கானையே
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள்கழல் புண்டரிகத்தையே
நேரில் ஊர்கள் அழித்தது நாகமே நீள்சடைத் திகழ்கின்றது நாகமே
ஆரமாக உகந்ததும் என்பதே ஆலவாய் அரனார் இடம் என்பதே. 

பொருளுரை:
சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும், சமணர்கட்கும் அருள்புரியாதவர். தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை. அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே. திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே. பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே. பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே. இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே. அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே.


பாடல் எண் : 11
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினின் மேய சம்பந்தனே
ஆன வானவர் வாயினு உளத்தனே அன்பரானவர் வாயினு உளத்தனே 
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.

பொருளுரை:
தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே. அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே. பல பொருள்களை அடக்கிய, முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞானசம்பந்தர், திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக