திங்கள், 2 ஜனவரி, 2017

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 21 - 30


பாடல் எண் : 21
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே.

பொருளுரை:
என் அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண், தேனினையும், பாலினையும், கருப்பஞ்சாற்றையும், அமுதத்தினையும் நிகர்த்து உடம்பையும் உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையோனே! யானையினது கொடிய சண்டையில் அகப்பட்ட சிறுபுதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 22
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே.

பொருளுரை:
ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடியார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே! ஆணாய் இருப்பவனே! அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்முதலே
உற்று அடியேன் மிகத்தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே.

பொருளுரை:
என் வாழ்க்கைக்குக் காரணமான முதற்பொருளே! எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே! உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் இவ்வுலகம் இத்தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன். எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, குற்றத்தையே பெருகச் செய்து, அன்பைச் சுருங்கச் செய்கின்ற, பயனற்ற அடியேனை விட்டு விடுவாயோ? விட்டு விட்டாலோ, அடியேனைத் தாங்குவோர், வேறு ஒருவரும் இல்லை. அதனால் நான் அழிவேன்.


பாடல் எண் : 24
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்து உரியாய் புலன் நின்கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே.

பொருளுரை:
மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், துளையினையுடைய அழகிய யானையின் தோலையுடையானே! ஐம்புலன்களும், உன்பால் செல்ல ஒட்டாமல், நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல, என்னை மெல்லென மொய்க்கின்றன; உண்மையானவை இருக்க, பொய்யாயினவற்றையே செய்கிற, மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயவன் அல்லாதவனாகிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 25
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே.

பொருளுரை:
கொடிய இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிகமேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன்களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனியேனை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 26
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே.

பொருளுரை:
பெரிய கங்கையாகிய பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமையாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 27
கொழு மணியேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய்ம் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து ஆட்கொண்டருளி என்னைக்
கழுமணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருளுரை:
உடல் முழுதும் நடுங்கப்பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண்டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.


பாடல் எண் : 28
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே.

பொருளுரை:
விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், அஞ்சிக் கலக்கமுற்றபோது, கடலில் எழுந்த விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! என்னை ஆளாக உடையவனே! என் வேதியனே! அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன். ஐம்புலன்களும், திகைக்கச் செய்ய, திகைப்பை அடைந்து, இவ்விடத்தில் ஒரு பொய் வழியிலே, உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 29
குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம கொற்றச் சிலையாம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கலந் தாமரை மேனி அப்பா ஒப்பிலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொருமத்து உறவே.

பொருளுரை:
பொன்போல மின்னுகின்ற, கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர்போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்துவேன். என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 30
மத்துறு தண் தயிரின் புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறு வேனை விடுதி கண்டாய் வெண்டலை மிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலை சுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே.

பொருளுரை:
வெண்டலை மாலையை அணிந்து கொத்துக்களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி நெடு மாலையைச் சுற்றிப் பரவின திருவெண்ணீற்றுடன், சந்தனத்தின் செம்மையான சாந்தினை அணிந்த இளமையை உடைய தலைவனே! புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வேருறுவேனை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக