ஞாயிறு, 1 ஜனவரி, 2017

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 01 - 10

உத்தரகோச மங்கையில் அருளிச் செய்தது. "நீத்து விடாதே" என்று இறைவனிடம் முறையிட்டுக்கொள்வது நீத்தல் விண்ணப்பமாம். இப்பகுதி ஐம்பது பாடல்களால் ஆகியது. அடிகள் தமக்கு இறைவன் தன் ஞானாசிரியக் கோலத்தை மீண்டும் உத்தரகோச மங்கையில் காட்டியருள வேண்டும் என்று கருதியவாறு அவன் காட்டியருளாமையையே தம்மை அவன் கைவிட்டதாகக் கருதி, வருந்தி இவ்விண்ணப்பத்தைச் செய்தருளினார். இதன் பின் இறைவன் அடிகள் விரும்பியவாறே தன் ஞானாசிரியக் கோலத்தை அவருக்கு அங்குக் காட்டியருளினான்.


பாடல் எண் : 01
கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே.

பொருளுரை:
கடையேனைப் பெருங்கருணையால், வலிய வந்தடைந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடியேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின் தோலாகிய ஆடையை உடுத்தவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன் எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.


பாடல் எண் : 02
கொள்ளேர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தரகோச மங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எக்காரணமே.

பொருளுரை:
உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கள்வனாகிய நான், உன்னை நீங்கி நிற்கப் பார்த்தும் என்னை அடிமை கொண்டது, எக்காரணத்தைக் கொண்டோ?. உன்னுடைய மேலாகிய தொண்டில் உள்ளேன்; அடியேன் புறத்தேன் அல்லேன்; மாதரது கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை விடேனாயினும், விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 03
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவா
ஆரூர் உறைவாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
வாருறு பூண் முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே.

பொருளுரை:
புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருப்பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கச்சு அணியப் பெற்ற, ஆபரணங்களோடு கூடிய, கொங்கைகளையுடையவளாகிய உமாதேவியின் பாகனே! என்னைப் பாதுகாப்பவனே! கருமை மிகுந்த கண்களை உடைய மாதரது ஐம்புல இன்பத்தில் ஆற்றங்கரையிலே நிற்கின்ற மரம்போல, வேர் ஊன்றுகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 04
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண்மதிக் கொழுந்தொன்று
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றச் செழுஞ்சுடரே.

பொருளுரை:
வெண்மையாகிய ஓர் இளம் பிறையானது விளங்குகின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! தெளிகின்ற பொன்னையும், மின்னலையும் ஒத்த காட்சியையுடைய செழுமையாகிய சோதியே! வளர்ந்து கொண்டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் விலகி, இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 05
செழிகின்ற தீப்புகு விட்டிலின் சின் மொழியாரில் பன்னாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோச மங்கைக்கு அரசே
வழிநின்று நின்னருள் ஆரமுது ஊட்ட மறுத்தனனே.

பொருளுரை:
தேன் பொருந்திய வாயினையுடைய வண்டுகள், கிண்டுகின்ற மலரை அணிந்த, திருமுடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! வழியில் மறித்து நின்று, உன் அருளாகிய அரிய அமுதத்தை நீ உண்பிக்க, மறுத்தேன். வளர்கின்ற விளக்குத் தீயில் விழுகின்ற விட்டிற் பூச்சியைப் போல, சிலவாகிய மொழிகளை உடைய மகளிரிடத்துப் பலநாளும் விருப்பங்கொள்கின்ற அடியேனை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 06
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்தெனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே.

பொருளுரை:
என் மாணிக்கமே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறியாமல் அதனை வேண்டாவென்று மறுத்தேன்; நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ? மேலோர், சிறிய நாய் போல்வாரது குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டுகொண்டு அருளவேண்டும்.


பாடல் எண் : 07
பொய்யவனேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே.

பொருளுரை:
நஞ்சுண்ட கண்டத்தில் கருமையையுடையவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனியனே! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை நீக்கு வோனே! பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆண்டருளி, என் சிறுமையை மறைத்துக் கொண்ட உண்மைப் பொருளே! என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 08
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீரருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே.

பொருளுரை:
பகைவர் அஞ்சும்படி ஒலிக்கின்ற, கிண்கிணி மாலை அணிந்த காளையையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஐம்புல ஆசைகளும் உன் திருவடியை நீங்குகின்ற அச்சமும், தீவினையுடையேனை இரண்டு பக்கத்திலும், இழுக்கின்றன. ஆதலின் என் குற்றங்களை உன் பேரருளானது நீக்குகின்ற விதம் எவ்வாறு என்று மனம் புழுங்குகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 09
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொருதலை மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே.

பொருளுரை:
பெருமை அமைந்த மூன்று உலகங்களுக்கும், ஒப்பற்ற முதல்வனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவினதாகிய சூலத்தை, வலப்பக்கத்தில் தாங்கி விளங்குபவனே! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 10
பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளரி
ஒலி நின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே.

பொருளுரை:
வண்டுகள், ஆராய்ந்து பாடுகின்ற, விளரி இசையின் ஒலியோசை இடையறாது நிலைபெற்றிருக்கிற, பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பகைத்து முப்புரங்களை வலிமை நிலைத்த உறுதியான வில்லினால் அழித்தவனே! விளங்குகின்ற, உன் திருவடிகளில் புகப்பெற்று, உடம்பை உன்னுடையதாகவே கொடுக்கப் பெற்றும் வருந்துகின்ற அடியேனை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக