வெள்ளி, 14 அக்டோபர், 2016

நவகிரக (கணபதி) துதி

கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.


ஞாயிறு - சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள் - சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் - அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன் - புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன் - குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி - சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி - சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

ராகு - ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது - கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்
"நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ
ஸ்வரூபகம் கணபதயே நம."

திருஞானசம்பந்தர் "சிவனிருக்க என்னை நாள் என் செய்யும் கோள் என் செய்யும்" என்று "கோளறு பதிகம்" பாடினார். அருணாகிரியார் முருகனையே வணங்கி, "நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்" என்று கந்தரலங்காரத்தில் கூறினார்.

எல்லாருக்கும் அந்த தகுதி இருக்குமா? எளியோரான நாம், கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.


01. சூரிய பகவான்
உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
ஓய்விலா வலம் வரும் செங்கதிரே
சூரியனே நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.


02. சந்திர பகவான்
தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.


03. செவ்வாய் பகவான்
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறை நீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே.


04. புத பகவான்
வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு.


05. வியாழ பகவான்
அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.


06. சுக்கிர பகவான்
வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக.


07. சனி பகவான்
வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே.


08. இராகு பகவான்
வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே.


09. கேது பகவான்
கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண் திறப்பாய் கனிந்து.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக