சனி, 8 அக்டோபர், 2016

சகலகலாவல்லி மாலை

குமர குருபரர் அருளிச் செய்தது 


எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும். குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்புதங்களும் செய்தவர்.

ஸ்ரீ வைகுண்டம் எனும் ஊரில் வாழ்ந்த சண்முக சிகாமணிக்கும். சிவகாமி அம்மாளுக்கும் ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலும் ஊமையாய் விளங்கியது. அதனால் பெற்றோர் பெருந்துன்பம் உற்றனர். முருக பக்தனான அவர்கள் செந்தூர் முருகனிடம் வேண்டினர். முருகன் அருளால் அக்குழந்தை பேசும் ஆற்றலைப் பெற்றது.

பேசும் ஆற்றல் மட்டுமின்றி முருகனைப் புகழ்ந்து "கந்தர் கலிவெண்பா" என்ற நூலையும் பாடியது மழலை. சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அக்குழந்தைதான் குமரகுருபரர். அது முதலாக இறை சிந்தனையோடு பல தலங்கள் சென்று மனமுருகிப் பாடி வழிபடலானார்.

ஒரு சமயம் குமரகுருபரர் புனிதத்தலமான காசிக்குச் சென்றார். அப்போது காசியை ஆண்ட மன்னன் டில்லி பாதுஷா. அரை ஆடை பூண்ட துறவியாகிய இவரை மன்னன் மதியாது அவமதித்தான். மன்னனின் அன்பைப் பெற இந்துத்தானி மொழிப் புலமைத் தேவைப்பட்டது. அதற்காகக் குமரகுருபரர் காசி கங்கைக் கரைக்குச் சென்று சரஸ்வதி தேவியைத் துதித்தார். அவள் அருளால் "வெண்டாமரைக்கன்றி" எனத் தொடங்கும் பத்துப் பாடல் கொண்ட "சகலகலாவல்லி மாலை" என்ற சிறு நூலை அருளினார். குமரகுருபரரின் அறிவுத் திறனை உணர்ந்த மன்னன் வியந்து, காசி நகர் முழுவதையும் அவருக்குக் கொடுத்துவிட்டுக் காசியை விட்டுச் சென்றார். குமரகுருபரர் தான், கல்வி அறிவில் மேம்பட வேண்டும் என்பதற்காகவே வளமார்ந்த கருத்துச் செறிவுடன் கலைமகளைப் போற்றிப் பாடியுள்ளார். கலைநயங்கள் அனைத்தும் வழங்கக்கூடியவள் கலைமகள் அல்லவோ? அதனால் தான் அவளிடம் குமரகுருபரர்,

"பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்தல் நல்காய்....." என்று கேட்கிறார். 

மேலும் "கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்..." என்றும் வேண்டுகிறார். 

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார். மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.

சகலகலாவல்லி மாலையிலுள்ள பாடல்கள் பத்தும் மானிடர்களுக்குக் கல்வியை வழங்கும் அமுத சுரபியாகும்.


வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம் 
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே. ..... 01

நாடும் பொருட்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்து அருள்வாய் பங்கய ஆசனத்தில் 
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே. ..... 02

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் 
குளிக்கும்படிக்கு என்று கூடுங்கொலோ உளங்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே. ..... 03

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் 
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று 
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே. ..... 04

பஞ்சப்பு இதம் தரும் செய்ய பொற்பாத பங்கேருகம் என் 
நெஞ்சத்தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து 
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் 
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலா வல்லியே. ..... 05

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் 
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் 
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே. ..... 06

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் 
கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர் 
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் 
காட்டும் வெள் ஓதிமப்பேடே சகலகலா வல்லியே. ..... 07

சொற்விற் பனமும் அவதானமும் கல்வி சொல்லவல்ல 
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர் 
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் 
கல்விப் பெறுஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே. ..... 08

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை 
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை 
கற்கும் பதாம்புயத்தாளே சகலகலா வல்லியே. ..... 09

மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என் 
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே. ..... 10


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக