வியாழன், 20 அக்டோபர், 2016

பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள்

தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் "கேதார கௌரி விரதம்" அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது. அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.


ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் "கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).

ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள். 

01 ஸ்ரீ ஞான கௌரி
"உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே" என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.

02 ஸ்ரீ அமிர்த கௌரி
உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி "அமிர்த கௌரி" என்று போற்றப்படுகிறாள்.

03 ஸ்ரீ சுமித்ரா கௌரி
இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு  "சினேகவல்லி" என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.

04 ஸ்ரீ சம்பத் கௌரி
வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை "சம்பத்" என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.

05 ஸ்ரீ யோக கௌரி
யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.

06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி
உறுதியான, ஆரோக்கியமான உடலை "வஜ்ரதேகம்" என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். ("ச்ருங்கலம்" என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும். 

07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி
மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.

08 ஸ்ரீ சுயம்வர கௌரி
சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரி என்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.

09 ஸ்ரீ கஜ கௌரி
காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.

10 ஸ்ரீ விஜய கௌரி
நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் - ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.

11 ஸ்ரீ சத்யவீர கௌரி
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.

12 ஸ்ரீ வரதான கௌரி
வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.

13 ஸ்ரீ சுவர்ண கௌரி
ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.

14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி
அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.

15 ஸ்ரீ அசோக கௌரி
துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம், பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள். மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.

16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி
தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.

"ஓம் ஸுபதாயை வித்மஹே 
காம மாலின்யை தீமஹி
தன்னோ கெளரீ ப்ரசோதயாத்"

அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்.

நன்றி : டி ஆர் பரிமளரங்கன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஆறுபடை வீடும் ஒரு படை வீடாய்

சூரபத்மனின் வதத்திற்கென்றே தோன்றியவன் முருகப் பெருமான். எனினும் அவன் அரங்கேற்றிய ஞானத் திருவிளையாடல்கள் எண்ணற்றவை. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து, அவனை சேவலாகவும் மயிலாகவும் ஏற்று என்றென்றும் தன்னுடனேயே வைத்துக்கொண்ட அளப்பரிய கருணையை என் சொல்வது?.


பிரணவப் பொருளறியான் படைப்புக் கடவுளா என வெகுண்டு, பிரம்மனை சிறையிலடைத்து, "உமக்கு பொருள் தெரியுமா?" என கேட்ட தந்தைக்கே குருவான சுவாமி நாதனைப் புகழ சொற்களேது! அகத்தியர் தமிழ் தந்தாரென்பர். அவருக்குத் தமிழ் தந்தவன் முருகன். பொதிகை மலையில் அகத்தியர் தவம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில் தெய்வீக மணம் வீசியது. எதிலிருந்து அந்த மணம் வருகிறதென்று அறியாத அகத்தியர் முருகப்பெருமானை பிரார்த்திக்க, அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்தார். ஆறுமுகனையே ஆசானாகக் கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணம் செய்து தமிழை வளர்த்தார். முருகப்பெருமான் செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுத்தான் என்றும்; அதை அகத்தியர் பாண்டியனுக்கு வழங்கினாரென்றும் திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது.

சிவபூஜை செய்யும்போது சித்தத்தை வேறிடம் செல்ல விட்டார் நக்கீரர். அதனால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருளால் விடுபட்டார். ஔவைக்கும் முருகனுக்கும் நடந்த தமிழ் விளையாட்டு நாடறிந்த ஒன்று. "சும்மா இரு" என்று அருணகிரிக்கு உபதேசித்து, அவரை திருப்புகழ் அருளச் செய்து நீடுபுகழ் வழங்கியவன் முருகன்.

கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "திகடச் சக்கர" என அடியெடுத்துக் கொடுத்து, அதற்கு விளக்கம் சொல்ல தானே புலவனாக வந்து கந்தபுராணத்தை அரங்கேறச் செய்ய அருளியவன் முருகன். குமரகுருபரர், தேவராய சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் என பலருக்கு அருளி தரிசனம் தந்தவன் முருகன்.

இவ்வாறு பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன், வேண்டுவோர் வினை தீர்த்து வாழ வைக்கும் வள்ளலாகவும் திகழ்கிறான். அவன் கோவில் கொண்டுள்ள இடங்ளெல்லாம் அருள் மன்றங்களே! அத்தகைய சிறப்புமிக்க முருகன் தலங்களில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ஆகிய ஆறு படைவீடுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக சிறப்பிக்கப்படுகின்றன. இந்த தலங்களைச் சென்று ஒருமுறையேனும் தரிசித்து வரவேண்டியது முருக பக்தர்களின் கடமையாகும்.

அந்த ஆறுபடைவீடு முருகப் பெருமான்களையும் ஒரே இடத்தில் காணும் ஆவல் எல்லாருக்குமே இருக்குமல்லவா? அந்த ஆவலைப் பூர்த்தி செய்து ஆத்ம சுகம் தருகிறது - சென்னை பெசன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோவில். மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் செந்தூரைப்போலவே கடற்கரையையொட்டி அமைந்துள்ள விதம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

கானாடுகாத்தான் என்னும் ஊரைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், அருணாச்சல செட்டியார் என்னும் சகோதரர்களின் அரிய முயற்சி யால் 1983-ஆம் ஆண்டு இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முதலில் அமைக்கப்பட்டது சுவாமிமலை முருகன் சந்நிதியாகும். பின்னர் மற்ற படைவீட்டு சந்நிதிகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பெற்றன.

ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்? ஒரு மனிதன் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறக்கிறான். பின்னர் உடன் பிறந்தோருக்கு அண்ணனாகிறான்; தம்பியாகிறான். அவனே ஒரு பெண்ணுக்கு கணவனாகிறான். பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். உறவுகளுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமன், மைத்துனன் என பல உறவுகளாகிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவனே. அதுபோலவே நம் ஆத்ம திருப்திக்கு இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். மனநிம்மதி பெறுகிறோம். இத்தகைய நிம்மதியை - மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது இந்த அறுபடை முருகன் ஆலயம்.

ட்ரஸ்ட் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்படும் இவ்வாலயம், அறங்காவலரான திருமதி அலமேலு ஆச்சி அவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுபடை முருகன் திருவுருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் அற்புதமாக விளங்குகின்றன. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் வேலை வாய்ப்பிற்கும் வரம் நல்குபவர்.

தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த மன அமைதியைத் தருவதாய் விளங்குகிறது இவ்வாலயம். பக்தர்களுக்கு முதலில் சோதனைகள் வரலாம்; துன்பங்கள் தொடரலாம். ஆனால், "நீயே சகலமும், உன் பாதமே அடைக்கலம்" என்று சரணடைந்துவிட்டால், நம்மைப் பற்றியுள்ள இடர்களனைத்தும் இல்லாமல் போய்விடும். துயரங்கள் தொலைதூரம் ஓடும். நோயற்ற வாழ்வு, சகல சௌபாக்கியங்கள், மணப்பேறு, மகப்பேறு என எல்லாம் அள்ளித்தரும்- ஓரிடத்தில் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டு முருகனை வணங்கி திருவருள் பெறுவோம்!.

நன்றி : சித்ரலேகா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


திங்கள், 17 அக்டோபர், 2016

ஐஸ்வரியம் தரும் ஐப்பசி

இம்மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.


ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின் தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீ து வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன்படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத்தும் தங்கமயமானதாக இருக்கும். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்திருப்பார்கள். மேலும், பலநூறு ஆண்டுகளுக்கு முன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள். முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசியில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமென்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. காவேரிக் கரையோரத் திருத்தலங்களில், காவேரி உற்சவத்திற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் மயிலாடுதுறை. இங்குள்ள மயூரநாதர் கோவிலில் துலா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். 


ஒருசமயம் சிவபெருமான் வேதங்களின் உட்பொருளை உபதேசித்துக்கொண்டிருக்கையில், பார்வதி தேவியானவள் அழகாக தோகை விரித்தாடிய மயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதனால் கோபமுற்ற சிவபெருமான், "நீ மயிலாக பூலோகத்தில் அவதரிக்கக் கடவாய்" என்று சபித்தார். அதன்படி மண்ணுலகில் மயிலாக அவதரித்த பார்வதி, சிவபெருமானை ஒவ்வொரு தலமாக வழிபட்டு வந்தாள். இறுதியாக காவேரி நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டாள். 

பார்வதியின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் ஆண் மயிலாக வந்து, அவளது சாபத்திற்கு விமோசனம் அளித்தார். அதனால் இத்தலம் மாயூரம் என்று பெயர் பெற்றது. மயிலாக இருந்த பார்வதி சாப விமோசனம் பெற்றதால் இத்தலத்து இறைவன் மயூரநாதர் என்று பெயர் பெற்றார். பார்வதி அஞ்சல் நாயகி என்று பெயர் பெற்றாள். சாப விமோசனம் பெற்ற பார்வதி, பிரம்மன் நிறுவிய தீர்த்தத்தில் நீராடினாள். அந்த மாதம் துலா மாதமென்று புராணம் கூறுகிறது. இங்குள்ள தீர்த்தக் கட்டத்தை இடப தீர்த்தக்கட்டம் என்றும் சொல்வர்.

பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப் பின்தொடர்ந்தார்கள். அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், "சிவபெருமானைச் சுமக்கும் நான் தான் பெரிய வாகனம்" என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்தது. இதை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது. உடனே ரிஷபம் பரமனிடம்  மன்னிப்புக் கேட்க, "நீ காவேரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்"  என்று ஆசி தந்து ரிஷபம் மேலே வர அருளினார். இதனால் மயிலாடுதுறையிலுள்ள இத்துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்டார்கள். அந்த மூவரும் கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்தார்கள். அந்தத் தோற்றம் நீங்க பிரம்மனிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர், "உங்கள் மீது மக்கள் திணித்த பாவ மூட்டைகளின் விளைவால், நீங்கள் உருமாறி இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை என்ற தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில் நீராடுங்கள். அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது" என்று அருளினார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரியில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது.


தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல் இத்தலத்தில் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள். ஐப்பசி அமாவாசையன்று இங்குள்ள காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள். மேலும் மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடை பெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி, மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால் காவேரியில் மூன்று முறை நீராடிய பலனும், யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

முடவன் முழுக்கு: ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான்.
-
அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.

பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக்கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவேரியானவள் தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத்தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!. ''தண்ணீரும் காவிரியே!..'' என்ற திருவாக்கின் படி - எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!. பரந்து விரிந்த பூவுலகில் - எங்கிருந்த போதும் சரி!. நீராடும் போது ஒரு சொம்பு நீரை எடுத்து,

"ஸ்ரீ காவேரி நமஸ்துப்யம் நமோ நம" என்று சிந்தித்து வணங்கி நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!..

நன்றி : பொற்குன்றம் சுகந்தன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தாண்டவத்தில் தோன்றிய நவதேவியர்

சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில் - குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் நவராத்திரி காலங்களில் வழிபடுகிறார்கள்.


இறைவனின் ஆனந்த தாண்டவத்தின் போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக - அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். அன்னையின் முதல் வடிவமான சைலபுத்ரி இமவான் மகளாகப் பிறந்து, கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை மணந்தாள். இந்த தேவியானவள் கையில் சூலத்துடன் காளை மாட்டின் மீது அமர்ந்து காட்சி தருவாள். இவளை வழிபட மங்களகரமான வாழ்வு கிட்டும் திருமணத்தடை நீங்கும். இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத் தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.


பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின் போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சிதருவாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இரண்டாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் "துர்க்காகாட்" படித்துறையில் கோவில் உள்ளது.

திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். இந்த ஆட்டத்தின் போது கால் விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சித்திரகாண்டா. இவள் பத்து கரங்கள் கொண்டவள். புலி மீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும், மனதிற்கு சாந்தி கிட்டும். மூன்றாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது. 

சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக்கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா. எட்டுக்கரங்கள் கொண்ட இவள் வேங்கை மீது அமர்ந்திருப்பாள். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள். நான்காம் நாள் வழிபடப்படும் இந்த அன்னைக்கு காசியில் சௌக் கடைத்தெரு பகுதியில் ஆலயம் உள்ளது.

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் உண்டார். அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தின் போது வரையப் பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையை "வாகீஸ்வரி" என்றும் சொல்வர். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் மடியில் ஆறுமுகப் பெருமான் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பார். இந்த தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள் இவள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்கு கோவில் உள்ளது.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின் போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. நான்கு கரங்கள் கொண்டவள். சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். "சிம்மவாஹினி" என்றும் சொல்வர். ஆறாம் நாள் வழிபடப்படும் இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூத தாண்டவம். இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள். இவள் புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத் தோற்றத்தில் காட்சிதருவாள். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். இவளது வாகனம் கழுதை. இவளை வழிபட தீயவர்கள் அழிவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது. ஏழாம் நாள் வழிபடப்படும் தெய்வம் இவள்.

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்ட, இறைவன் அந்த அசுரர்களை அழித்த பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து "மகாகௌரி" என்ற அன்னை தோன்றினாள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ரிஷபத்தின் மீது அமர்ந்து திரிசூலம் ஏந்தி காட்சி தரும் இந்த தேவியை வழிபட பசிப்பிணி நீங்கும், உடல் வளம் பெறும். இவளுக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது. இந்த தெய்வத்தை எட்டாம் நாள் வழிபடுகிறார்கள்.

கயிலைநாதன் சிருங்கார தாண்டவம் ஆடியபோது நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது தன் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்திதாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஆதிசக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள். தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் இவளை வழிபட முக்தி கிட்டும். ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் "சித்திதாத்ரி சங்கடா" என்னும் கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.

மேற்கண்ட தகவல்களை காசி புராணம் விவரிக்கிறது. தென்னகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் வரிசையில் நவராத்திரி கொண்டாடுகிறோம். காசியில் உள்ளவர்கள், சிவபெருமான் ஆடிய தாண்டவத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்பது தேவியரின் சுதை விக்ரகங்களை வாங்கி வந்து கொலு வைப்பார்கள்.

பத்தாம் நாளை, பார்வதிதேவி மீண்டும் தாய் வீடான இமயத்திற்குச் செல்லும் நாளாகக் கொண்டாடுவர். அன்று சுதையினாலான அம்பாள் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்வர். கைகளில் வளையல்கள் அணிவித்து, கால்களுக்கு சிவப்பு சாந்து பூசி, மலர்களால் அலங்கரிப்பர். வேதவிற்பன்னரை வரவழைத்து சிறப்புப்பூஜை செய்வதும் உண்டு. பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு, தங்கள் சக்திக்கு ஏற்ப புடவை மற்றும் ரவிக்கைத் துணிகளை மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய், பழங்கள், இனிப்புப் பண்டங்களை அதற்குரிய வாழை மட்டைத் தட்டுகளில் வைத்து வழங்குவர்.

அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவம் கொலுவில் நடுநாயகியாகக் காட்சி தருவதால், அனைவரும் பக்திப் பாடல்களைப் பாடி மீண்டும் பூஜிப்பார்கள். பிறகு, பத்து நாட்களும் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் உருவச்சிலைகளை கங்கை நதியில் கரைத்து விழா கொண்டாடுவர். காசி வருண்காட் அருகில் துர்க்கா கோவிலிலுள்ள இந்தப் பத்து தேவியரின் பளிங்குச் சிலைகளுக்குப் பூஜைகள் செய்து நவராத்திரி விழாவினை பூர்த்தி செய்கிறார்கள்.

நன்றி : பொன்மலை பரிமளம்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


விநாயகரின் பதினாறு வடிவங்கள்

விநாயகரை பதினாறு வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் பல்வேறு நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும்.


01 பால கணபதி 
மா, பலா, வாழை ஆகிய மூவகைப் பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தியவரும், சூரியோதயகால செவ்வண்ண மேனியுடன் பிரகாசிப்பவரும், பாலகனைப் போன்ற உருவம் உள்ளவருமான இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

02 தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றைத் தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தியவரும், சூரியோதயகால ஆகாயத்தின் செந்நிற மேனி உடையவரும், இளைஞனாகக் காட்சிதருபவருமான இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

03 பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினால் செய்த பாயசம் நிரம்பிய சிறு குடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தியவரும், நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.

04 வீர கணபதி
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களை ஏந்தியவரும்; ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

05 சக்தி கணபதி
பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சி அளிப்பவரும்; பாசம், அங்குசம் ஏந்தி பயத்தை நீக்குபவரும்; செந்தூர வண்ணம் கொண்டவருமான இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

06 துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் கையில் சுவடி, அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவரும், வெண்ணிற மேனி கொண்டவருமான இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

07 சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியவரும், ஆற்றலைக் குறிக்கும் சித்தி சமேதராக விளங்குபவரும், பசும்பொன் நிற மேனியரானவரும், பிங்கள கணபதி என்றும் பெயர் பெற்றவருமான இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

08 உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம்பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றை ஏந்தியவரும், கருநீலவண்ண மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் உயர்பதவிகளைப் பெறலாம்.

09 விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தியவரும், தங்க நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவருமான இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10 க்ஷிப்ர கணபதி
கற்பகக் கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவரும், ரத்தினங்கள் பதித்த கும்பத்தை தனது துதிக்கையில் கொண்டவரும், செம்பருத்தி மலர் போன்ற சிவந்த மேனியுடையவருமான இவர் சீக்கிரம் அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11 ஹேரம்ப கணபதி
அபய, வரத ஹஸ்தங்களுடன் (கரங்கள்) பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பிலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்திய பத்து கைகளும் ஐந்து முகங்களும் கொண்டு, வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சிதருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ்பெறுவார்கள்.

12 லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக் கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி, தன் இருபுறமும் இரு தேவியரை அணைத்துக்கொண்டு வெள்ளை மேனியராய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13 மகா கணபதி
பிறைசூடி, மூன்று கண்கள் கொண்டு, தாமரை மலர் ஏந்தி, தன் சக்தி நாயகியராகிய வல்லபையை அணைத்த வண்ணம் காட்சிதருபவரும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல் புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கலசத்தையும் ஏந்தியவரும், சிவப்பு நிற மேனியராய் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14 புவனேச கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் கஜமுகாசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன்மீது பாய்ந்தேறி தன் வாகனமாக்கிக்கொண்ட இவர், செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின்கீழ் காட்சிதருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15 நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்தி, மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி, ஒற்றைக் காலில் நிருத்த கணபதியாய் காட்சிதருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16 ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடப்புறம் அணைத்துக்கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை வணங்கி வளம் பெறுவோம்.....

நன்றி : எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


வெள்ளி, 14 அக்டோபர், 2016

நவகிரக (கணபதி) துதி

கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.


ஞாயிறு - சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள் - சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் - அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன் - புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன் - குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி - சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி - சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

ராகு - ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது - கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்
"நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ
ஸ்வரூபகம் கணபதயே நம."

திருஞானசம்பந்தர் "சிவனிருக்க என்னை நாள் என் செய்யும் கோள் என் செய்யும்" என்று "கோளறு பதிகம்" பாடினார். அருணாகிரியார் முருகனையே வணங்கி, "நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்" என்று கந்தரலங்காரத்தில் கூறினார்.

எல்லாருக்கும் அந்த தகுதி இருக்குமா? எளியோரான நாம், கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.


01. சூரிய பகவான்
உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
ஓய்விலா வலம் வரும் செங்கதிரே
சூரியனே நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.


02. சந்திர பகவான்
தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.


03. செவ்வாய் பகவான்
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறை நீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே.


04. புத பகவான்
வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு.


05. வியாழ பகவான்
அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.


06. சுக்கிர பகவான்
வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக.


07. சனி பகவான்
வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே.


08. இராகு பகவான்
வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே.


09. கேது பகவான்
கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண் திறப்பாய் கனிந்து.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


துர்க்கையின் ஒன்பது வடிவங்கள்

சக்தியின் கோலமான துர்கா தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தைரியம், துணிச்சல், நம்பிக்கை, அமைதி, சந்தோசம் போன்ற சகல சௌபாக்கியங்களும் கொடுத்து அருள் பொழிகிறாள். துர்கா தேவி தர்மத்தைக் காப்பதற்கும், தீமைகளை ஒழிப்பதற்கும் அந்தந்த காலகட்டத்தில் நவதுர்க்கைகளாக அவதாரம் எடுத்து அருள்புரிகிறாள்.


01 மாதா ஷைலபுத்ரி தேவி 
தக்ஷனின் மகள் சதிதேவி சிவபெருமானின் முதல் மனைவி தன்னுடைய கணவனைப் பற்றி இழிவாகப் பேசிய தந்தையின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அவர் நடத்திய யாக குண்ட அக்னியில் குதித்து சாம்பலானாள். சதிதேவி மீண்டும் இமயத்தின் மகள் ஷைலபுத்ரி தேவியாகப் பிறந்தாள். சக்தியின் மூலதாரத்தை அடக்கி ஆளும் ஷைலபுத்ரி தேவி சூலத்தை ஒரு கரத்திலும், தாமரையை இன்னொரு கரத்திலும், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் மூவரின் சக்திகளை இணைத்து உருவாகிய காளையை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறாள். ஷைலபுத்ரி தேவியை நவதுர்க்கையின் முதல் வடிவமென்று சொல்லாம். இவள் பார்வதி ஹேமாவதி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள் .


02 மாதா பிரம்மசரணி தேவி
பொறுமைக்கும், தவத்திற்கும் உரியவளான பிரம்மசரணி தேவி நவதுர்க்கையின் இரண்டாவது வடிவமாகும். பிரம்மசரணி தேவியைத் தவறாமல் பிரார்த்தனை செய்பவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள். தன்னை பூஜிப்பவருக்கு பிரம்மசரணி தேவி மன அமைதி, வளமான வாழ்க்கை, நிரந்தரமான சந்தோசம் ஆகியவைகளை அள்ளிக் கொடுக்கிறாள். இமயத்தின் மகளான இந்த தேவி மீண்டும் சிவபெருமானை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள். இதற்காக பிரம்மசரணி தேவி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு காய்களையும் கனிகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தாள். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலைகளையும், தழைகளையும் உண்டு தவம் செய்தாள். மூவாயிரம் ஆண்டுகள் பில்வ மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவள் மீது விழுந்த பில்வ இலையை உணவாகக் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். அதன் பின் பல ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல், தண்ணீர் கூட அருந்தாமல் சிவபெருமானையே நினைத்து மனமுருகி பொறுமையோடு தவம் செய்தாள். அவள் செய்த கடுந்தவத்தைப் போற்றி பிரம்மா அவளுக்குக் காட்சி கொடுத்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து அருள் செய்தார். பொறுமையும் , தவவலிமையும் பெற்ற பிரம்மசரணி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பைப் பொழிகிறாள்.


03 மாதா சந்திரகண்டா தேவி 
பத்து கரங்களில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம், மூன்று கண்களோடு காட்சி கொடுக்கும் சந்திரகண்டா தேவி நவதுர்க்கையின் மூன்றாவது வடிவம். இந்த தேவி துணிச்சலோடும், தைரியத்தோடும் தீயவர்களை அழித்து, மணியைப் போன்ற தோற்றத்தையுடைய நெற்றியில் பாதி சந்திரனை வைத்துக் கொண்டு அவதாரம் எடுத்ததால் சந்திரகண்டா என்ற பெயரைப் பெற்றாள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கும், பாவங்களைப் போக்குவதற்கும் மக்கள் இந்த தேவியை நாடிச் செல்கிறார்கள்.


04 மாதா குஷமந்தா தேவி 
பிரபஞ்சத்திற்கு வெப்பத்தைக் கொடுக்கும் குஷமந்தா தேவி நவதுர்க்கையின் நான்காவது வடிவம். இவள் சூர்யலோகத்தில் வாசம் புரிகிறாள். கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள்.


05 மாதா ஸ்கந்தமாதா தேவி 
அசுரர்களை அழிப்பதற்கு அவதாரம் கொண்ட குமரன் அதாவது ஸகந்தனைப் பெற்றெடுத்த ஸ்கந்தமாதா தேவி நவதுர்க்கையின் ஐந்தாவது வடிவம். இவள் நான்கு கரங்களோடு சிம்மத்தை வாகனமாகக் கொண்டு தாமரையின் மேல் பத்மாசன கோலத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கிறாள். ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .


06 மாதா காத்யாயனி தேவி
ஒரு காலத்தில் காதா என்ற முனிவர் தனக்கு சக்திதேவி பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தவம் செய்தார். அவருடைய விருப்பப்படியே துர்கா தேவி காத்யாயனி தேவியாக ஜனனம் எடுத்தாள். ஆறாவது வடிவமான இவள், யோகத்திற்கும், ஞானத்திற்கும் அதிதேவதை. தன்னை முழுமனதோடு பிரார்த்தனை செய்பவருக்கு விரும்பியதெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள். காத்யாயினிதேவியை தினமும் வழிபடுபவர் பாவங்கள் விலகி மோக்ஷமடைகிறார்.


07 மாதா காலதாத்ரி தேவி
அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஏழாவது வடிவமாக அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி , கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் .


08 மாதா மகாகௌரி தேவி
தூய உள்ளம், பொன்னிற மேனி, வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் நவ துர்க்கையின் எட்டாவது வடிவமான மகா கௌரியாகும். காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் தவமிருந்தபோது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிறமேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன. பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள்.


09 மாதா சித்திதாத்ரி தேவி
தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


செவ்வாய், 11 அக்டோபர், 2016

ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம்

ஸ்ரீ துர்கை சித்தர் அருளியது


துர்க்கையை மனதில் நினைத்து, "ரோக நிவாரண அஷ்டகம்" எனப்படும் இந்தப் பாடலைப் தினமும் பாராயணம் செய்து வந்தால் நோயற்ற சுகமான வாழ்வு அமையும் என்பது திண்ணம்.


பகவதி தேவி பர்வத தேவி 
பலமிகு தேவி துர்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே 
சங்கரி உன்னைப் பாடிடுமே 
ஹநஹந  தகதக பசபச வெனவே 
தளிர்த்திடு ஜோதியானவளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (01) 

தண்டினி_தேவி தக்ஷினி தேவி
கட்கினி தேவி துர்கையளே
தந்தன தான தனதன தான 
தாண்டவ நடன ஈஸ்வரியே 
முந்தினி தேவி முனையோலி சூலி
முனிவர்கள் தேவி மணித்தேவி
ரோக நிவாரிணி சோக நிவாரிணி
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (02) 

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்கையளே 
நீலினி நீயே நீதினி நீயே 
நீர்நிதி நீயே நீர் ஒளியே 
மாலினி நீயே மாதினி நீயே 
மாதவி நீயே மான் விழியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (03)  

நாரணி மாயே நான்முகன் தாயே 
நாகினி யாயே துர்கையளே 
ஊரணி மாயே ஊர்ருத்தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே 
காரணி மாயே காருணி தாயே 
காணக யாயே காசினியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (04)  

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
பெருவலி வானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா. ....... (05)

வேதமும் நீயே வேதியள் நீயே 
வேகமும் நீயே துர்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே 
நாணமும் நீயே நாயகியே 
மாதமும் நீயே மாதவம் நீயே 
மானமும் நீயே மாயவளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (06)  

கோவுரை ஜோதி கோமள ஜோதி 
கோமதி ஜோதி துர்கையளே
நாவுரை ஜோதி நாற்றிசை ஜோதி 
நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுரை ஜோதி பூரண ஜோதி 
பூத்தனர் ஜோதி பூரணியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (07) 

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம 
சாரிணி சந்திர கண்டினியே 
ஜய ஜய கூஷ்மா மனதினி ஸ்கந்த 
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி 
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (08)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்தின மாலை

அகத்தியர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, லலிதா அன்னையை போற்றி புகழும் அற்புதமான பாட்டு.அம்மனை 9 நவரத்தினங்களாக வர்ணித்து, பிறகு இந்த பாடலின் பயனையும் குறிக்கிறது.


|| ----- ----- ----- விநாயகர் காப்பு ----- ----- ----- ||


ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே.

|| ----- ----- ----- 01 வைரம் ----- ----- ----- ||


கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

|| ----- ----- ----- 02 நீலம் ----- ----- ----- ||


மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- 03 முத்து ----- ----- ----- ||


முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே. 


|| ----- ----- ----- 04 பவளம் ----- ----- ----- ||


அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- 05 மாணிக்கம் ----- ----- ----- ||


காணக் கிடையா கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- 06 மரகதம் ----- ----- ----- ||


மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- 07 கோமேதகம் ----- ----- ----- ||


பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


|| ----- ----- ----- 08 புஷ்பராகம் ----- ----- ----- ||


ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- 09 வைடூர்யம் ----- ----- ----- ||


வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே 
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


|| ----- ----- ----- நூற்பயன் ----- ----- ----- ||


எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||