திருமுறை : நான்காம் திருமுறை 09 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
சோழ நாட்டில் பல தலங்கள் சென்று உழவாரப் பணி செய்த அப்பர் பிரான் பூந்துருத்தி தலம் வந்தடைந்த போது அங்கே ஒரு மடத்தினை நிறுவி, அதிகமான நாட்கள் அங்கே தங்கி உழவாரப் பணி புரிந்தார். அப்போது பல பதிகங்கள் பாடினார்.
அத்தகைய பாடல்களில் ஒன்று தான், அங்கமாலை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். உடலின் உள்ள உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்ற பெயர் வந்தது.
உயிர் தனது வினைகளைத் தானே கழித்துக் கொள்ள முடியாததால், தான் சார்ந்துள்ள உடலிலுள்ள கருவிகளை இறைப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் வினைகளை கழிக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு வினைகளைக் கழிப்பதன் மூலம் உயிர் நல்வழிக்குச் செல்ல இயலும் என்பதால், உடலிலுள்ள கருவிகள் செய்யவேண்டிய செயல்களை எடுத்துரைக்கும் இந்த பதிகத்தினை சேக்கிழார், நற்கதிக்கு வழிகாட்டும் பதிகம் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
பாடல் எண் : 01
தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் பிச்சைக்கு உலாவும், தலைவனைத் தலையே நீ வணங்குவாயாக.
பாடல் எண் : 02
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.
பாடல் எண் : 03
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.
செவிகளே, எமது தலைவனாகிய சிவபெருமான், செம்பவளம் போன்றும் தீயினைப் போன்றும் சிவந்த நிறம் கொண்டவர். பெருமைக்குரிய அவரது பண்புகளையும், செயல்களையும் எப்போதும் நீங்கள் கேளுங்கள்.
பாடல் எண் : 04
மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
மூக்கே, சுடுகாட்டில் உறைபவனும், வேதங்களின் பொருளை மிகவும் கவனமாக கேட்டு உணர்ந்த பார்வதி தேவியின் மணாளனும், ஆகிய முக்கண்ணனின் பெருமைகளை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.
பாடல் எண் : 05
வாயே வாழ்த்துக் கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்.
வாயே, மதயானையின் தோலினை உரித்து அதன் பசுமையான தோலினை தனது உடலில் போர்த்துக் கொண்டவரும், பேய்கள் வாழும் காட்டில் விருப்பமுடன் நடமாடுபவரும் ஆகிய பெருமானை, நீ எப்போதும் வாழ்த்துவாயாக.
பாடல் எண் : 06
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்.
நெஞ்சமே, மேல் நோக்கிய செஞ்சடை உடைய நின்மலனை, மேகங்கள் தவழும் இமயமலையின் மகளாகிய பார்வதி தேவியின் கணவனை, நீ எப்பொழுதும் நினைப்பாயாக.
பாடல் எண் : 07
கைகாள் கூப்பித் தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.
கைகளே, படம் எடுக்கும் பாம்பினைத் தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தொழுவீர்களாக.
பாடல் எண் : 08
ஆக்கையால் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையால் பயன் என்.
சிவபெருமான் உறையும் கோயிலை வலம் வந்து, பூக்களைக் கையால் இறைவனின் திருமேனி மேல் தூவி அவனை வணங்காத உடம்பினால் நமக்கு பயன் ஏதும் இல்லை.
பாடல் எண் : 09
கால்களால் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயன் என்.
அழகான கோபுரத்தை உடைய, நீலகண்டனாகிய எம்பெருமான் உறையும், கோகர்ணம் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ள திருக்கோயிலை வலம் வராத கால்களால் என்ன பயன்.
பாடல் எண் : 10
உற்றார் ஆர் உளரோ - உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆர் உளரோ.
நாம் இறக்கும் தருவாயில், நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள் எவரும் உதவமுடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் எவரையும் உற்றார்களாக கருதமுடியாது. அந்த சமயத்தில், குற்றாலத்தில் உறையும் கூத்தன் தவிர, வேறு எவரும் நமக்கு உதவி செய்யக்கூடிய உற்றார் இல்லை.
பாடல் எண் : 11
இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் கீழ்ச்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.
தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோபத்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திருவடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவராக, கருதப்படும் நிலையினை அடைந்து, இறுமாப்புடன் இருப்பேன்.
பாடல் எண் : 12
தேடிக் கண்டு கொண்டேன்
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை
என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.
திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
திருக்கோயிலை வலம் வரும் சமயத்தில் சொல்லக்கூடிய பதிகமாக கருதப்படுகின்றது. உயிர்கள் தங்களுடன் பிணைந்த வினைகளைக் கழிப்பதற்காக, இறைவன் உயிரினை உடலுடன் பொருத்தி, வினைகளைக் கழிக்கும் முயற்சியில் உதவுதற்காக கருவி கரணங்களையும் அளிக்கின்றான். அத்தகைய கருவி கரணங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, சிவபெருமான் தான் உண்மையான் மெய்ப்பொருள் என்று அறிந்துகொண்டு உலக மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும்.
அதற்காக நாம் இறை வழிபாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த வழிமுறைகளைச் சொல்லும் பதிகம் என்பதால், முக்திக்கு வழிகாட்டும் பதிகமாக இந்த பதிகம் கருதப்படுகின்றது. தினமும் சொல்ல வேண்டிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் இந்த பதிகம் கருதப்படுகின்றது.
நன்றி : என். வெங்கடேஸ்வரன்
ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக