வெள்ளி, 8 ஜனவரி, 2016

காசு நல்கும் பதிகம் - திருவீழிமிழலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ விழியழகர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அழகுமுலையம்மை

திருமுறை : முதல் திருமுறை 92 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இந்தப் பதிகத்தை பக்தியும் அன்பும் கொண்டு ஓதி வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு ஏற்படுவதோடு, உலக வாழ்வில் சேர்த்த பொருள் அழியாது வளரும் வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஞானசம்பந்தப்பெருமானும்,திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.நாவுக்கரசர் முதிய பிராயத்தில் 60 வயது அளவில் இருந்தபோது, பிள்ளையாருக்கு பால வயது. பிள்ளையாரின் அருமை பெருமைகளை உணர்ந்த வாகீசர், அவரைத் தேடி வந்து அளவளாவி, இருவரும் சில காலம் பல தலங்களுக்குச் சேர்ந்து சென்று வழிபட்டனர். 

அக்கால கட்டத்தில் திருவிழிமிழலைப் பகுதியில் இருவரும் தங்கியிருந்த போது ஊரில் பஞ்சம் நிலவியதால்,அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு,சிவபெருமான் பிள்ளையாருக்கும் வாகீசருக்கும் தினமும் ஒவ்வொரு பொன் படிக்காசு, கோவிலின் கிழக்கு, மேற்கில் அமைந்த விருட்சப் படியில் வழங்குவதாக கனவில் அருளி, தினமும் காசு வழங்கலானார். 

இதில் பிள்ளையாருக்கு வழங்கிய காசு சிறிது மாற்று குறைவாக இருந்ததால், அவருக்குப் பொற்காசின் மூலம் கிடைத்த பொருள் சிறிது குறைவாகக் கிடைத்தது. பிள்ளையார் இறைவரிடம் வருந்தி வேண்டி,இந்தப் பதிகம் பாட இருவருக்கும் நல்ல மாற்றில் பொற்காசு கிடைக்கப் பெறலானது.


"வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே."

குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ, குற்றமோ, நிந்தனையோ அல்ல; ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு, தாழ்வு நீங்குமாறு, குற்றமற்ற காசை கொடுப்பீராக..


"இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே."

எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.


"செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே."
-
சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.


"நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே."

திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப்பேறும் அருளுவீராக.


"காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே."

காமனை எரிந்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.


"பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே."

கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.


"மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே."

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.


"அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே."

இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.


"அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே."

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.


"பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே."

ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.


"காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே."

இத்திருப்பதிகம் சீகாழிப்பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.


|| --------- திருச்சிற்றம்பலம் --------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக