இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மாணிக்கவண்னர், ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வண்டுவார் குழலி
திருமுறை : இரண்டாம் திருமுறை 18 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம், பாண்டிய நாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல், அவனுடைய பெண்களுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர்.
திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்
"சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்..."
என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.
பாடல் எண் : 01
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே.
பாடல் விளக்கம்:
நீர் நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண், சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?.
பாடல் எண் : 02
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே.
பாடல் விளக்கம்:
பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை நினைந்து, சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே என்றும் புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?.
பாடல் எண் : 03
அறையார் கழலும் அழல் வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வவ்வினையே.
பாடல் விளக்கம்:
ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே! இதுதகுமோ?.
பாடல் எண் : 04
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம்
பலி நீ திரிவாய் பழியில் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே.
பாடல் விளக்கம்:
முழங்கி வந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?.
பாடல் எண் : 05
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே.
பாடல் விளக்கம்:
தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த, நீலவண்டுகளின் தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?.
பாடல் எண் : 06
பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடை போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே.
பாடல் விளக்கம்:
பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறுகிறாள். அடியவளாகிய இவள் மீது பழிமொழி வருவது தக்கதோ?.
பாடல் எண் : 07
வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.
பாடல் விளக்கம்:
மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே! தவறாமல் "பெருமான் திருவடிகள் வாழ்க" என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?.
பாடல் எண் : 08
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலம்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.
பாடல் விளக்கம்:
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலை சூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?.
பாடல் எண் : 09
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.
பாடல் விளக்கம்:
நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்கு வந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?.
பாடல் எண் : 10
அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார்
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே.
பாடல் விளக்கம்:
அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர். மான் கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?.
பாடல் எண் : 11
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.
பாடல் விளக்கம்:
தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||