செவ்வாய், 25 செப்டம்பர், 2018

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று போற்றப்படும் முருகப் பெருமான் தீராத வினைகளைத் தீர்ப்பவன். துன்பங்கள், துயரங்களைப் போக்குபவன். பாம்பன் சுவாமிகள் இயற்றிய அவன் மீதான ஷண்முக கவசமும், பகை கடிதல் ஸ்லோகமும் தீராத வினைகளைத் தீர்க்கவல்லது.


"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது

பாடல் எண் : 01
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே 
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே 
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே 
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!! 


பாடல் எண் : 02
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே 
பொறைமலி உலகுருவே புனநடை தரும் உருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!


பாடல் எண் : 03
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே 
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை அசைவுறவே
குதிதரும் ஒரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!


பாடல் எண் : 04
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே 
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 05
அழகுறு மலர் முகனே அமரர்கள் பணி குகனே 
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே 
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே 
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!


பாடல் எண் : 06
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே 
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 07
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே 
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் 
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 08
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே 
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கல எனமா கவினொடுவருமயிலே 
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 09
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே 
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே 
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே 
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 10
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே 
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே 
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

சகல வினைகளையும் போக்கும் பிரதோஷ வழிபாடு


01 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்று தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. 

02 பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

03 பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

04 பிரதோஷ வேளையில் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். 

05 பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர் விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.  

06 நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

07 சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

08 சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

09 நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10 சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம். 

11 பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. 

12 மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13 பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது. 

14 பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15 சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16 அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை  வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.

17 ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.  நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

திருமாலின் தச(பத்து) அவதாரங்கள்

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக ஒன்பது முறை அவதரித்துள்ளார். 10-வது அவதாரமாக கல்கி என்ற அவதாரத்தை அவர் எடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த தசாவதாரங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

01 மச்ச அவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் இது. மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் தோன்றி மகாவிஷ்ணு, வேதங்களை அபகரித்துக் கொண்டு போய், கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றார்.


02 கூர்ம அவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரமே கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து, பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக புராணங்கள் கூறுகிறது.


03 வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால், வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பின்னர் பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


04 நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் இருந்து சிங்க முகத்துடன் வெளிப்பட்ட திருமால், இரண்யகசிபுவை வதம் செய்தார். இந்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.


05 வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க, பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


06 பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக பிறந்ததே பரசுராம அவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம்.


07 ராம அவதாரம்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். மனிதனின் இன்ப துன்பங்களை அனுபவித்து, மனிதர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவதாரம் இது.


08 பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகவும் கூறுவர்.


09 கிருஷ்ண அவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில், கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக திருமால் விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.


10 கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் இந்த கல்கி அவதாரத்தை எடுத்து, உலக உயிர்களை முக்தி பெறச் செய்வார் என்று புராணங்கள் கூறுகின்றன.


தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| -----  ஓம் நமோ பகவதே வாசுதேவாய  ----- ||

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

எண்ணிரு கணபதி துதி

பிள்ளையாரின் பதினாறு வடிவங்கள் மிகச் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அந்த எண்ணிரு கணபதிகளையும் போற்றிடும் இந்தத் துதியை சதுர்த்தியன்று அவசியம் சொல்லுங்கள். நீங்கள் எண்ணிய எல்லாம் ஈடேறும்.

01 பால கணபதி 
மா, பலா, வாழை ஆகிய மூவகைப் பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தியவரும், சூரியோதயகால செவ்வண்ண மேனியுடன் பிரகாசிப்பவரும், பாலகனைப் போன்ற உருவம் உள்ளவருமான இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.


வேழ முகத்து விநாயகனே பால வடிவப் பரம்பொருளே
பலாவுடன் முக்கனியும் கரும்பும் தரித்த மெய்ப்பொருளே
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் படைத்தோம்
பால கணபதியே பல வளங்கள் தந்தருள்வாயே.

02 தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றைத் தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தியவரும், சூரியோதயகால ஆகாயத்தின் செந்நிற மேனி உடையவரும், இளைஞனாகக் காட்சிதருபவருமான இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.


தருண சூரியப் பிரகாசனே தங்க வடிவானவனே 
ஒரு கொம்பு நெற்கதிர் பாசக்கயிறு கையில் தரித்தோனே
பருப்புப் பூரண மோதகம் முக்கனி படைத்தோம்
தருண கணபதியே தக்க நிதி தந்தருள்வாயே.

03 பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினால் செய்த பாயசம் நிரம்பிய சிறு குடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தியவரும், நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.


பக்த ஜன ப்ரியனே பார்வதி புத்ரனே
பாயசம் நிறை கலயத்தை கரந்தனில் கொண்டோனே
பாயசம் மட்டுமின்றி பலவகை மோதகம் படைத்தோம்
பக்த கணபதியே... பக்க பலமாய் என்றுமிருப்பாயே.

04 வீர கணபதி
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களை ஏந்தியவரும்; ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.


மூல முதற்பொருளே மூஷிக வாகனனே
வேல் வில் சக்ராயுதமென பதினாறு கரத்தோனே 
பொரி கடலை அப்பம் அவல் பாயசம் படைத்தோம்
வீர கணபதியே வீரம் என் நெஞ்சில் விதைத்தருள்வாயே.

05 சக்தி கணபதி
பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சி அளிப்பவரும்; பாசம், அங்குசம் ஏந்தி பயத்தை நீக்குபவரும்; செந்தூர வண்ணம் கொண்டவருமான இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.


சக்தியைத் தழுவிய வித்தகனே சங்கரன் மகனே
சிந்தூர வர்ண சிங்கார விநாயகனே
செந்தாமரைப் பூ தங்க அரளி அருகம்புல் சாற்றினோம்
சக்தி கணபதியே சங்கடங்கள் தீர்த்தருள்வாயே.

06 துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் கையில் சுவடி, அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவரும், வெண்ணிற மேனி கொண்டவருமான இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.


வேழ முகம் நாலுகொண்ட வேத விழுப் பொருளே 
புத்தகம் ருத்ராட்சம் தண்டம் கமண்டலம் தரித்தவனே
பவித்ரமாய் பலகாரங்கள் பலவும் படைத்தோம்
துவிஜ கணபதியே நவநிதியும் தந்தருள்வாயே.

07 சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியவரும், ஆற்றலைக் குறிக்கும் சித்தி சமேதராக விளங்குபவரும், பசும்பொன் நிற மேனியரானவரும், பிங்கள கணபதி என்றும் பெயர் பெற்றவருமான இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.


ஸித்தி புத்தி விநாயகனே சித்தத்தினுள் உறைபவனே
ஸம்ருத்தி தேவியுடனுறை தத்துவ உட்பொருளே
ஸம்பங்கி பூ மணக்க சாம்பிராணி தூபமிட்டோம்
ஸித்தி கணபதியே புத்தி தந்து காத்தருள்வாயே.

08 உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம்பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றை ஏந்தியவரும், கருநீலவண்ண மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் உயர் பதவிகளைப் பெறலாம்.


உச்சிப் பிள்ளையாரே உயிரினுள் உறைநாதமே
உவப்புடன் ஆறுகரத்தினில் வீணை குவளை மாதுளம் தரித்தவனே 
உப்புக் கொழுக்கட்டையுடன் உண்ண தீங்கனிகள் படைத்தோம்
உச்சிஷ்ட கணபதியே உயர்வான வாழ்வளிப்பாயே.

09 விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தியவரும், தங்க நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவருமான இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.


வினாயகப் பெருமானே விமல விக்னேஸ்வரனே
வில்லுடன் பாணம் கோடரி சக்ரம் தரித்த பரம்பொருளே
விருந்தாக மோதகம் விளாம்பழம் படைத்தோம்
விக்ன கணபதியே வினையாவும் தீர்த்தருள்வாயே.

10 க்ஷிப்ர கணபதி
கற்பகக் கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவரும், ரத்தினங்கள் பதித்த கும்பத்தை தனது துதிக்கையில் கொண்டவரும், செம்பருத்தி மலர் போன்ற சிவந்த மேனியுடையவருமான இவர் சீக்கிரம் அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.


ஐந்து கரத்தோனே ஐம்புலன்கள் ஆள்பவனே
ஐந்தாவது கரத்தில் தங்கக்குடம் தரித்தவனே !
செம்பருத்தி மலருடன் செங்கமலமும் சூட்டினோம்
க்ஷிப்ர கணபதியே பத்திரமான வாழ்வளிப்பாயே.

11 ஹேரம்ப கணபதி
அபய, வரத ஹஸ்தங்களுடன் (கரங்கள்) பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பிலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்திய பத்து கைகளும் ஐந்து முகங்களும் கொண்டு, வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சிதருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ்பெறுவார்கள்.


ஏகதந்த வினாயகனே ஏழ்பிறப்பிற்கும் ஆதாரமே
வரமுத்திரை அபய முத்திரை இருகையில் தரித்தவனே
எருக்கம் பூ மாலை சூட்டி எள் மோதகம் படைத்தோம்
ஹேரம்ப கணபதியே மனபாரங்கள் குறைப்பாயே.

12 லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக் கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி, தன் இருபுறமும் இரு தேவியரை அணைத்துக்கொண்டு வெள்ளை மேனியராய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.


பேழை வயிறு பெருமானே வேழமுக வேந்தனே
லட்சுமி தேவியர் இருபுறமும் உறைய அருள்வோனே
லட்டுடன் பால் தேன் பழ பாயசம் படைத்தோம்
லட்சுமி கணபதியே அஷ்ட ஐஸ்வர்யம் அருள்வாயே.

13 மகா கணபதி
பிறைசூடி, மூன்று கண்கள் கொண்டு, தாமரை மலர் ஏந்தி, தன் சக்தி நாயகியராகிய வல்லபையை அணைத்த வண்ணம் காட்சிதருபவரும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல் புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கலசத்தையும் ஏந்தியவரும், சிவப்பு நிற மேனியராய் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.


மாயாப்பிறவி மயக்கம் அறுத்த மாமணியே
மாமலராளுடன் உறை மாதவன் மருகனே
மலர் மாலை சூட்டி மத்தளம் முழங்க வழிபட்டோம்
மஹா கணபதியே மங்களங்கள் சேர்ப்பாயே.

14 விஜய கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் கஜமுகாசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன்மீது பாய்ந்தேறி தன் வாகனமாக்கிக்கொண்ட இவர், செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின்கீழ் காட்சிதருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.


கரும்பு விரும்பு விநாயகனே கரிமுக கணபதியே
ஏறு மயிலோன் தமையனே ரத்னவர்ண நிறத்தோனே
விருப்புடனே பொறுப்பாக பூஜைகள் புரிந்தோம்
விஜய கணபதியே விண் எட்டும் புகழ் தருவாயே.

15 நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்தி, மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி, ஒற்றைக் காலில் நிருத்த கணபதியாய் காட்சிதருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.


நவசக்தி விநாயகனே சிவசக்தி மைந்தனே
நர்த்தன தோற்றமுடன் பொன்னிறமாய் மிளிர்வோனே
நவமணிகள் மின்ன பட்டாடை சாற்றினோம்
நிருத்த கணபதியே நிம்மதி வாழ்வு அருள்வாயே.

16 ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடப்புறம் அணைத்துக்கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.


ஒங்காரரூபனே ஒளவைபாடிய அரும்பொருளே
ஒதும் வேதத்தின் உட்பொருள் ஆனோனே
ஊதா மலரான நீலோற்பலம் சாற்றினோம்
ஊர்த்துவ கணபதியே. ஊழ்வினைகள் தீர்த்தருள்வாயே.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||