செவ்வாய், 18 ஜூலை, 2017

ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம்

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள் தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும். ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!

ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை  மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக் குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்று கின்றனர். இதனால் “ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி" என்பார்கள்.

திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்" என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம் போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

ஆடி மாதப் பழமொழிகள் பல “ஆடிப் பட்டம் தேடி விதை", “ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்", “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி", “ஆடிக் கூழ் அமிர்தமாகும்."

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஔவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும். ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும்  அமைந்துவிடும்

சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள். ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம் முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின் தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

ஆடித் தபசு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகைமலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார். அம்மையும் ஊசி முனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மால் ஒரு பாகனாக காட்சியளித்தார். ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

ஆடிப் பௌர்ணமி அன்று தான் திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

ஆடிப் பௌர்ணமி அன்று தான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மது கைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர். இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத்துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை. அதனால் திருமகள் மடியில் அமர, அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார். இவரின் திருவுருவை புதுவை முத்தியால்பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம். படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர். ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக