சனி, 26 நவம்பர், 2016

பிரதோஷம் உருவான வரலாறு


ஒரு காலத்தில் சாதாரண மானுடர்களைப் போலவே தேவர்களும், அசுரர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் நொந்து நூலாகிப் போனார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் அடிதடி, சண்டை சச்சரவுகளில் பெருத்த சேதாரம் வேறு. எனவே இவை நீங்குவதற்கு ஒரு வழியைத் தேடி, நேராக நான்முகனிடம் சென்றனர்.

அவர் சொல்லி விட்டார், ''இதையெல்லாம் சேர்த்து வைத்துத்தான் உங்களை படைத்திருக்கின்றேன்!.. தனியாகப் பிரிப்பது சாத்தியமே இல்லை!....''. தலை குனிந்தபடி திரும்பினால் அன்னை சரஸ்வதியின் வீணையிலிருந்து ''இசையிருந்தால் மரணமில்லை...!'' என்று அமுதம் வழிந்து கொண்டிருந்தது. தேவேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

இதற்கிடையில் துர்வாச முனிவர் ஆகாய வழியில் வந்து கொண்டிருந்தார். இன்றைக்கு இதுவரை ஒன்றும் நடைபெறவில்லையே!... என்று. ஏனென்றால் துர்வாச முனிவர் யாருக்காவது சாபம் கொடுக்காவிட்டால் அவருடைய தவ வலிமை குன்றிவிடும். அவருக்கு அப்படி ஒரு சாபம்! அப்போது, எதிரில் தேவகன்னி ஒருத்தி வந்து வணங்கி நின்றாள். 

கனிவுடன் நோக்கிய முனிவர் - ''மங்களம் உண்டாகட்டும்'' என்றார். அந்த தேவகன்னி சொன்னாள் ''ஸ்வாமி... நான் இந்திர சபையின் ஆடல் மங்கை. அன்னை ஆதிபராசக்தியின் கொலு மண்டபத்தில் அன்னையை சேவித்து விட்டு வருகின்றேன். அன்னை மனமுவந்து எனக்களித்த பரிசு இந்தப் பூமாலை. இது என்னிடம் இருப்பதை விட சர்வலோக சஞ்சாரியாகிய தங்களிடம் இருப்பதே பெருமை. எனவே இதனைத் தாங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்".

துர்வாசருக்கு மிக்க மகிழ்ச்சி. ''ஏதடா.. இன்று பொழுது நல்லபடியாக விடிந்திருக்கின்றதே!..'' என்று. அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மாலையும் கையுமாக தேவலோகம் நோக்கிச்சென்றார். ஆனால் - விதி வகுத்த வழியாக வெள்ளை யானையின் மேல் இந்திரனே எதிரில் வந்து கொண்டிருந்தான். அவனை நிறுத்தி விவரம் கூறி, கையில் இருந்த மாலையைக் கொடுத்தார். 

அவனுக்கோ அன்று போதாத காலம்!.. ஆணவத்துடன் வெள்ளை யானையின் மேலிருந்தபடியே அங்குசத்தை நீட்டி துர்வாசர் கொடுத்த மாலையை வாங்கி யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். அவ்வளவுதான்... யானைக்கு வந்ததே எரிச்சல்.. காரணம்.... அன்னை ஆதிபராசக்தி சூடியிருந்த மாலை தேன் ததும்பும் மலர்களால் ஆனது. அதனால்... மாலையினுள் சின்னச் சின்ன தேனீக்கள் மயங்கிக் கிடந்தன. 

முனிவர் மாலையை அலுங்காமல் ஏந்தி வந்து இவனிடம் கொடுத்ததை, இந்திரன் வாங்கி ''தளுக்'' என்று யானையின் தலையில் வைத்தானே - அதனால் தேனீக்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்து மாலையைச் சுற்றி ரீங்கரிக்க - ஐராவதம் மண்டை காய்ந்து போய் - பெரிதாகப் பிளிறிக் கொண்டே தலை மேலிருந்த மாலையை இழுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது. 

அப்பாடா!.... துர்வாசரின் தவம் குறையாதிருக்க வழி பிறந்து விட்டது. கோபம் கொதித்துத் தலைக்கேற - சாபமிட்டார். ''நான் கொடுத்த மாலையின் அருமை தெரியாமல் அதை அலட்சியப்படுத்தி அழித்த உன் கர்வம் அழிந்து ஐஸ்வர்யம் தொலையக் கடவது. அடாததைச் செய்த ஐராவதம் காட்டு யானையாய் அலையக் கடவது!''

துர்வாசர் போய் விட்டார். வெள்ளி மலை மாதிரி இருந்த ஐராவதம் - கன்னங்கரேலென்று ஆகி - கதறிக் கண்ணீர் வடித்தபடியே காட்டுக்குள் ஓட, பட்டத்துக் குதிரை உச்சைசிரவஸ் - ஊரை விட்டே ஓடி விட்டது. பொங்கும் இளமை பொலிந்து ததும்பும் தேவலோகம் புகை மண்டலமாகிப் போனது. சோகத்திலும் பெரிய சோகம் அரம்பையரும் மற்ற தேவகன்னியரும் கடுங் கிழவிகளாகிப் போனது தான்!...


தாங்க முடியாத துயரத்துடன் பிரசன்னம், மாந்திரீகம், ஜோதிடம், கைரேகை, எண்கணிதம், உன்கணிதம் - என எல்லாவற்றிலும் தோண்டிப் பார்த்தாகி விட்டது. வெற்றிலையில் மை தடவி, உடுக்கை அடித்து ராத்திரி முழுவதும் முழித்திருந்து குட்டிச்சாத்தான் குறியும் கேட்டாகி விட்டது. தேவேந்திரனின் துக்கமும் துயரமும் எப்போது தீரும் என்று!.... துர்வாசர் விட்ட சாபத்தைத் தொலைப்பதற்கு துணை ஒன்றும் கிடைத்தபாடில்லை!....

''பிள்ளையாரைப் பிடியுங்கள்..'' என்று யாரோ சொன்னதைக் கேட்டு, அங்கே ஓடினால் அவர் வியாசருடன் இருந்து ஒற்றைக் கொம்பை ஒடித்து ஊருக்காக கதை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவரைப் பார்க்க இப்போது யாருக்கும் அனுமதி இல்லை - என்று கூறி விரட்டியடித்து விட்டார்கள். விக்கித்துப் போனான் தேவேந்திரன். 

''எல்லாம் இந்த யானையால் வந்தது...'' என்று நினைத்து - ஒரு சாத்து சாத்தலாம் என்று பக்கத்தில் பார்த்தால் - யானை ஓடிப்போய் எத்தனையோ நாளாகியிருந்தது. இந்த நேரத்தில் தான் - போகிற போக்கில் நாரதர், ''பாற்கடலைக் கடைந்து எடுக்கும் அமுதம் ஒன்றே உன் துயர் தீர்வதற்கு மருந்து'' - என்று தன் ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லி விட்டுப் போக, உடனடியாக தேவர்கள் அசுரர்களைத் தேடிச் சென்றனர். உட்கார்ந்து பேசினர். 

எல்லாவற்றுக்கும் முட்டு கொடுக்கும் சுக்ராச்சார்யார் கூட சும்மா இருந்தார். இருதரப்பிலும் உள்ள பெரியவர்கள், அமுதத்துக்காக சமரசமாகி கூடிப் பேசி கூட்டணியாக - ஒரு கொள்கை உடன்பாட்டுக்கு வந்தார்கள். அதன்படி - மந்தர மலையைக் கைப்பற்றி மத்தாக பயன்படுத்திக்கொள்ள முடிவாயிற்று. இழுத்துக் கட்டிக் கடையக் கயிறு வேண்டுமே!... நல்ல காலம்!... நாகங்களுள் ஒன்றான வாசுகி அந்தப் பக்கம் ஒரு ஓரமாகப் போகவும், அதை விரட்டி மடக்கிப் பிடித்தாகி விட்டது.

வாசுகிக்கு கெட்ட காலம்!... விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அதற்கு அப்பொழுதே வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது. ''ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து இழுத்தால் அறுந்து போவேனே!..'' என்று பரிதாபமாக முனகியது. இருந்தாலும் நம்மவர்கள் விடவில்லை. உனக்கும் ஒரு பங்கு என்று சொல்லி ஓரமாக ஓலைப் பெட்டிக்குள் அடைத்து - சுற்றி வைத்து விட்டார்கள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் மந்தர மலையைத் தூக்கிக் கடலில் போட்டாகி விட்டது. கொஞ்சம் யோசனையாகவே இருந்தது வாசுகிக்கு... ஓரக்கண்ணால் பார்த்தால் - தேவேந்திரன் வஜ்ராயுதத்தை வைத்துக் கொண்டு நிற்கின்றான். வாயடைத்துப் போன வாசுகி தானாகவே சென்று மந்தர மலையைச் சுற்றிக் கொண்டது. இப்போதும் அதற்கு பெருங்குழப்பம் தான்!....

தேவேந்திரன் தன்னுடைய சகாக்களை எல்லாம் அழைத்து மெல்லிய குரலில் எதையோ பேசினான். அந்தப் பக்கம் குதுகலத்துடன் அசுரர்கள்!... அமுதம் அப்போதே கிடைத்து விட்ட மாதிரி.. அசுரர்களும் கூட்டங்கூடிப் பேசினார்கள்... அமுதம் கிடைத்ததும் முதல் கை அமுதத்தில ... அடுத்த கை தேவேந்திரன் தலையில்.... என்று!... ஒரே ஆரவாரக் கூச்சல்!... கைதட்டல்கள்!...

கயிலாயம் வரை போயிற்று சத்தம்!... தவத்திலிருந்த சிவம் விழித்தது. ''...நந்தி...'' ''...ஸ்வாமி!... இந்த இரண்டு பேருக்கும்.... வேற வேலை எதுவும் இல்லையா!... அதனால சும்மா இருக்க முடியாம கடலை வறுக்க.. இல்ல... இல்ல... கடலைக் கடையப் போறாங்களாம்!...'' பணிவிலும் பணிவாக பதில் சொன்னார் - நந்தி.. சிவம் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தது.


''..அப்பா..'' - குறு குறு எனத் தவழ்ந்து ஓடிய சின்னக்குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டாள் - அன்னை சிவகாமசுந்தரி. ''அவர் தவம் கலைந்து விட்டால்... மறுபடியும் நான் மயிலாகப் பிறக்கவேண்டுமே!.. '' என்று.... மகத்தான தவமிருந்து சித்தி அடைந்த மகாமுனிவர்களும் யோகியர்களும் சிறுபிள்ளைகளைப் போல ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

''...சரி!... நாங்கள் எல்லோரும் வால் பக்கம்!...''. - தேவர்கள். ''...இல்லை... இல்லை... எங்களுக்குத் தான் வால்!...'' - அசுரர்கள். தேவேந்திரன் அசுரர்களிடம் வந்தான். ''..தலை என்றும் சிறப்புடையது. நீங்கள் இந்த நல்ல காரியத்துக்கு தலைமை அல்லவா!...'' என்றான். அசுரர்களுக்கு ஆனந்தம்... இந்திரன் தலையே கைக்கு வந்துவிட்ட மாதிரி... ஆனால்,

தேவேந்திரனின் திட்டம் என்ன?. - '' வாசுகி ஏகக் கடுப்பில் இருக்கிறது. விழுந்து கடித்தால் அவர்களையே கடிக்கட்டும்...'' என்பது தான்!... ஆயிற்று. தலைவிதியை நொந்து கொண்டிருந்த வாசுகியின் தலையை அசுரர்களும், வாலை தேவர்களும் பிடித்து - இப்படியும் அப்படியுமாக இரண்டு இழுப்பு இழுத்தார்கள்.. மந்தர மலை சுழன்றது. கடல் நுரைத்துக் கலங்கி - பொங்கியது. அவ்வளவுதான்!..

மத்தாக நின்ற மந்தர மலை ஒருபுறமாகச் சாய்ந்து விழுந்து கடலுக்குள் போய் விட்டது. வாசுகிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!... கடைவதைக் கைவிட்டு விடுவார்கள் என்று!.... "என்ன ஆச்சு... என்ன ஆச்சு..'' அங்குமிங்கும் கூக்குரல்கள்.. யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை. தேவேந்திரன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.. நாரதர் வருகிறாரா!...என்று.

அப்போது, இளம் முனிவர் ஒருவர் சொன்னார்...''அடே!... மூடர்களே... மத்து நின்று சுழல ஒரு அச்சு வேண்டாமா?...'' என்று. பழுத்த முனிவர்கள் எல்லாம் பல் தெரியச் சிரித்தார்கள். தேவேந்திரனுக்கு வெட்கமாகிவிட்டது. இந்த முனிவர்களிடமும் போய் ''இளமையாய் இருப்பது எப்படி?..'' என்று யோசனை கேட்டவன் தான் இந்திரன். 

முனிவர்கள் சொன்னார்கள் ''அதெல்லாம் பெருந்தவமிருந்து பெற்ற யோக சித்தியினால் விளைந்தது...'' என்று. அத்தோடு அந்தப் பக்கமே போகவில்லை - போகியான தேவேந்திரன். யோசித்த தேவேந்திரன் வாசுகியைக் கையில் பிடித்துக் கொண்டு - விட்டால் தான் ஓடிப் போகுமே - வைகுந்தம் நோக்கிப் போனான். அவன் பின்னாலேயே எல்லாரும் கூட்டமாக ஓடினார்கள்.

''...நாராயணா!... கோவிந்தா!.... கோவிந்தா!....'' வைகுந்தத்தின் வைரமணிக் கதவுகள் திறந்தன... ''வாருங்கள்... வாருங்கள்...'' - வரவேற்றனர் வாசுதேவன் தம்பதியினர். ''...கோவிந்தா!.. கோவிந்தா!..'' - மறுபடியும் - தேவாசுரர்களின் கோஷ்டி கானம். ''...அதுதான் தெரியுமே!... அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?...'' - என்றார் கள்ளழகர், திருமகளை நோக்கியபடி.. அன்னையும் புன்னகைத்தாள்.

தேவேந்திரனுக்கு சொல்ல வார்த்தை வரவில்லை. தொண்டைக்குள் நிற்கிறது அழுகை. ''அஞ்சேல்... யாம் மந்தர மலைக்கு அச்சாக இருப்போம்'' என அபயம் அளித்த அச்சுதன் - தன் மனதில் நினைத்துக் கொண்டார் - ''அப்போதே வந்திருந்தால் தொல்லையே இருந்திருக்காது'' - என்று. ஏனெனில் அபயம் என அடைந்தோர்க்கு எல்லாம் அமுதன் ஆராஅமுதன் - அல்லவா!...


கிடைத்த ஒரு கணத்தில், கண்ணீருடன் வாசுகி தலையை உயர்த்தி ஆயிரந் தலை ஆதிசேஷனைப் பார்த்து - '' செளக்கியமா!...'' என்றது. அந்த வார்த்தைக்கு - ''.. என் கதியைப் பார்த்தாயா!... '' என்று அர்த்தம்! எம்பெருமான் திருவுளங்கொண்டபடி - பொன்னொளி மின்னும் ஆமையாகி பாற்கடலுள் விரைந்தார். கடலுள் வீழ்ந்து கிடந்த மந்தர மலை மெல்ல மெல்ல நிமிர்ந்து - நேராக நின்றது. எங்கும் ஜயகோஷம். உற்சாகம். தேவேந்திரனுக்கு அமிர்தம் கிடைத்து விட்டதாகவே சந்தோஷம். 

அவனுக்குத் தெரியாது நாடகத்தில் நடைபெறவேண்டிய காட்சிகள் இன்னும் இருப்பது!..... மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக - தேவர்களும் அசுரர்களும் விறுவிறுப்பாக - இப்படியும் அப்படியுமாக பாவப்பட்ட வாசுகியை சுற்றிப் பிடித்து இழுக்க, மலையின் கீழ் அச்சாக - அச்சுதன் பொருந்திய சூட்சுமத்தில் மந்தரமலை படுவேகமாகச் சுழன்றது. அதுவரைக்கும் கடலின் அடியில் படிந்து கிடந்த தொல்பொருட்கள் எல்லாம் மேலே வருவதும் கீழே போவதுமாக - பாற்கடல், தயிர்க் கடலாகிக் கொண்டிக்க - வாசுகியோ நொந்து நூலாகிக் கொண்டிருந்தது...

என்னதான் நாகம் என்றாலும் பெண்ணல்லவா!... ''என்ன இது... கொஞ்சங்கூட இரக்கம் இல்லாமல் இரண்டு பக்கமும் இப்படிப் பிடித்து இழுக்கின்றீர்களே!... சிறிது நேரம் ஓய்வு கொடுங்கப்பா!...'' - என்று தனக்குத்தானே இரக்கப்பட்டுக் கொண்டது. மூளை கலங்கிய - தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரே நோக்கம் தான் - ஒன்று அமுதம் கிடைக்கவேண்டும்!... இல்லையேல் மந்தரமலை தூளாக வேண்டும்... அதுவும் இல்லையென்றால் வந்த வரைக்கும் லாபம் என்று வாசுகி ஆளுக்கு ஒருபாதியாக வேண்டும். என்ன கொடுமை... இது!...

இவர்கள் விருப்பத்திற்கு எதையாவது செய்வார்களாம்! அதற்கு அடுத்தவர்கள் அல்லற்படவேண்டுமாம்!.... திருப்பாற்கடலில் - உறங்காமல் உறங்கிக் கிடக்கும் அழகனிடம் அமுதம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம்!... அல்லது, ''தானே தவமாய் வீற்றிருக்கும் தவமே!. எங்கள் சிவமே!.'' என்று திருக்கயிலை அடிவாரத்தில் நின்று நினைத்திருந்தாலும் - மலை மேலிருந்து ஆனந்தம் மழையாய்ப் பொழிந்து - அமுத வெள்ளமாய், அமுதக் கடலாய் - இந்நேரம் நிறைந்திருக்குமே!.. 

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா!... எம்பெருமான்!... என்ன செய்வது!... விதி ஓடியாடி விளையாடும் போது அதன் குறுக்கே யார் தான் போகமுடியும்!.... கவனிங்க!.. கவனிங்க!.. ''..தளுக்..முளுக்..'' என்று ஏதோ சத்தம்... கேட்கிறதா!... கடலைக் கடைகின்ற பேரிரைச்சலிலும், நன்றாகத் தெளிவாகக் கேட்கிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கூட கேட்டது. அவ்வளவுதான் ... பெருத்த உற்சாகத்துடன் இன்னும் வேகமாக இழுத்தனர்... இன்னும் நாலே நாலு இழுப்பு...

''...மாப்ளே!... அமுதம் பொங்கிடுச்சுடா....'' - யார் இப்படிச் சத்தம் போட்டது?... பெருங்கூட்டத்தில் யாரென்று தெரியவில்லை!... வாசுகிக்கு தாங்க முடியாத நரகவேதனை. பற்களைக் கடித்துக் கொண்டது.. சூரியன் பணி முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பாற்கடலிலிருந்து ஏதோ கருப்பாகத் திரண்டு மேலே வருவதை எல்லோரும் கண்டனர். அது... திடப்பொருளா.. திரவப்பொருளா.. சரியாகத் தெரியவில்லை.

திரண்டு வருவது விஷம் என்று புரியாமல் - ''...ஆஹா...'' என்று ஆனந்தக் கூச்சல். யாருக்குச் சந்தோஷமோ... இல்லையோ - வாசுகிக்கு மிக்க மகிழ்ச்சி...'' நமக்கு விட்டது... ஏழரை!...' என்று... தலையை நிமிர்த்திப் பார்த்து, ''இதுதான் அமுதமா!.. ஆ..'' என்றதுதான் தாமதம்.. அதுவரையிலும் வாசுகியின் வாயினுள் பல்லிடுக்கினுள் அடங்கிக் கிடந்த விஷம் - பீறிட்டு வழிந்தது.

''தலைக்கு மேல் என்ன... அமுத மழையா...'' என்று அசுரர்கள் மேலே பார்க்க - அனற்திரளாக - விஷத்துளிகள்!... ''ஐயோ!... ஓடுங்கடா!.. ஓடுங்க!...'' அசுரர்கள் வாசுகியை கை விட்டார்கள். தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார்கள்!. அந்தப் பக்கம் - தேவர்கள் - '' திரண்டு வருவது அமுதமில்லை...'' என்று உணர்ந்து கொண்டு, அந்தக் கணமே, அசுரர்கள் செய்த அதே வேலையை செய்தார்கள்.... இவர்களும் வாசுகியை கை விட்டார்கள்..


''...என்ன நடக்கின்றது மேலே ...'' என்றபடி கடலினுள்ளிருந்து கருணைக்கடல் வெளிப்பட்டது. அந்த நொடியே - நெடியவனின் பொன் போன்ற திருமேனி விஷத்தின் வேகத்தினால் கரிய திருமேனியானது. மின்னல் வேகம் - மாலவனையும் அங்கே காணவில்லை. இருதரப்பினராலும் கைவிடப்பட்டு கடலினுள் ஆழ்ந்த வாசுகி - இற்றுப்போன உடம்புடன் மெல்ல ஊர்ந்து வெளியே வந்தது. சுற்றிலும் பார்த்தது. யாரையும் காணவில்லை. இதுதான்... காரியம் ஆனதும் கழற்றி விடுவான் என்பது!....

ஆறடி உயரத்தில் - பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட கரிய நிற ''ஆலம்'' எனும் விஷமும், வாசுகியின் பல்லிடுக்கிலிருந்து பீறிட்ட நீலநிற ''காலம்'' எனும் விஷமும் - தங்களுக்குள் ராசியாகி ஒன்று கலந்து - திரண்டெழுந்து ''ஆலகால'' விஷமாக உருக்கொண்டு, தேவர்களும், அசுரர்களும் - பாற்கடலைக் கலக்கியடித்துக் கடைந்த கடமைக்குப் பரிசாக - எங்கும் பரவி எல்லோரையும் கதி கலங்கடித்துக் கொண்டிருந்தது.

அங்கும் இங்குமாக தேவர்களும் அசுரர்களும் பரிதவித்து ஓட , ஆலகாலமும் அவர்கள் பின்னாலேயே வந்து நிற்க விடாமல் துரத்தியடித்தது. ஓட ஓட - விரட்டியது. ''ஆலகாலம்'' எங்கே துரத்தும்?... எங்கே விரட்டும்?....புரியவில்லையா!... மந்தையில் பசுக்களை மேய்ப்பவன் மாலையானதும் அவற்றை எங்கே துரத்துவான்?.. எதை நோக்கி விரட்டுவான்!... பட்டியை - தொழுவத்தை நோக்கி அல்லவா!... அது தாங்க... விஷயம்!....

சிந்தனை அற்றுப் போனதால் - அந்த நேரத்தில் என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. தேவகுரு - பிரகஸ்பதி. அசுரகுரு சுக்ராச்சார்யார். இருந்தும் யாரும் நல்ல வழி நடத்தவில்லை. வழி நடத்தினாலும் - இவர்கள் நடப்பதாக இல்லை. திரண்டு எழுந்த கொடிய ஆலகாலம் விரிந்து பரந்து தேவ - அசுரர்களை விரட்டிக் கொண்டு வந்தது.

ஒன்றும் புரியாமல் ஓட்டம் பிடித்த அனைவரும் ஓடிச் சென்று நின்ற இடம் - திருக்கயிலை. திருக்கயிலை மாமலையின் அடிவாரம்.... அதிகார நந்தி திருக்கரத்தில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். தூரத்தில் பெரும் புழுதி மண்டலம்!.. அவருக்கு ஆச்சர்யம்!.. என்ன நடக்கின்றது?.... அவருக்கு அவரே கேள்வி கேட்டு முடிப்பதற்குள், கண்ணீர் விட்டுக் கதறியபடி தேவர்களும் அசுரர்களும்.. ''என்ன ஆயிற்று?.. ஏன் இப்படி ஓடி வருகின்றீர்கள்?...''

''ஸ்வாமி....அபயம்... அபயம்... எம்பெருமானை உடனே தரிசிக்க வேண்டும்!...'' ''...அதெல்லாம் முடியாது!... இது சந்தியாநேரம்....கொஞ்ச நேரம்...ஆகும்!..'' ''பேச நேரமில்லை ஐயா!... அது எங்களை துரத்திக் கொண்டு வருகிறது!..'' ''வழக்கமா... நீங்க #தானே_எல்லாரையும்_துரத்துவீங்க!...'' ''ஸ்வாமி!... நாங்கள் செய்த வினைப்பயன் விஷமாகி எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது!.. கயிலாயநாதனைத் தவிர எங்களைக் காத்தருள யாரும் இல்லை.. தாமதிக்காமல் எம்பெருமானைத் தரிசிக்க அனுமதியுங்கள்!.''


கண்ணீருடன் கதறினார்கள் - தேவர்களும் அசுரர்களும்.. ''..ம்... எல்லாரையும் போல உங்களுக்கும் கடைசியில் தான் கயிலாயம்!...'' மனதில் சிவபெருமானைத் தியானித்துக் கொண்டு அவர்களை அனுமதித்தார். திடு...திடு... என எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஓட... வாசுகி - உடல் வேதனையுடன் மெதுவாக ஊர்ந்து வந்தது.

''வாசுகி.. என்ன ஆயிற்று?...'' நந்தியம்பெருமானின் திருப்பாதங்களைப் பணிந்து வணங்கிய வாசுகி, ''...எல்லாம் அறிந்த தாங்கள் இப்படிக் கேட்கலாமா...ஸ்வாமி!...'' என்றது. ''வருத்தப்படாதே வாசுகி... கயிலை நாதன் காப்பாற்றுவார்!....'' அதற்குள் - விரிந்து பரந்து - தேவர்களை விரட்டிக் கொண்டு வந்த ஆலகால விஷத்தினை நோக்கி - பொற்பிரம்பினை ஊன்றியவாறு ஹுங்காரமிட்டார் - நந்தியம்பெருமான்.

தன் வேலை முடிந்தது என்பதைப் போல அடங்கி ஒடுங்கியது. அங்கே - பொற்சபையில் - எம்பெருமானின் முன்னிலையில் - அடிக்கமலங்களில் விழுந்து வணங்கிய - அசுரர்கள், தேவர்கள், நான்முகன், திருமால் என எல்லோரையும் மெலிதாக நோக்கினார் எம்பெருமான். ஐயனும் அம்பிகையும் - ''அஞ்சேல்...'' என அபயமளித்தனர்.

கண்களைத் துடைத்துக் கொண்டு - நடந்ததை தேவேந்திரன் விவரிக்கும் முன், எம்பெருமான் - ''சுந்தரா!..'' என்றார். பெருமானின் சாயலாக அழகு நிறைந்த இளைஞன், திருக்கரத்தில் திருநீற்று மடலுடன் வந்து - இறைவனின் திருக்குறிப்பினை உணர்ந்து எல்லோருக்கும் திருநீறு வழங்கி சாந்தப்படுத்தினார். அப்போது தான் உண்மை அனைவருக்கும் புரிந்தது.

''ஒருவேளை அமுதம் கிடைத்து, அதை ஒருவேளை உண்டாலும் அடுத்து நாம் ஆகப்போவது இப்படித்தானே!.. மந்திரமாவதும் சுந்தரமாவதும் நீறல்லவா!.. வேதத்தில் உள்ளதும் வெந்துயர் தீர்ப்பதும் நீறல்லவா!.. முத்தி தருவதும் முனிவர் அணிவதும் நீறல்லவா!... மாணந்தகைவதும் மதியைத் தருவதும் நீறல்லவா!.. ஆசையைக் கெடுப்பதும், அந்தமாக முடிவதும் நீறல்லவா!.. உடம்பின் இடர் தீர்த்து இன்பந்தருவது நீறல்லவா!.. கையில் வெண்ணெய் இருந்தும் நெய் தேடி அலைந்த அறிவிலி என ஆயினோமே!...''

கடலைக் கடைந்தவர்கள் கண்களில் கண்ணீர் திரண்டது. கருணாசாகரனாகிய ஈசன் திருவாய் மலர்ந்தார். ''.. சுந்தரா... அவ்விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக!...." ''...உத்தரவு!...'' - விரைந்து சென்ற சுந்தரர், ஒரு நொடிக்குள் - கடு விஷத்தைக் கருநாவற்பழம் போல கையில் ஏந்தியவாறு வந்தார். பின்னாலேயே நந்தியும் வந்தார். இதை என்ன செய்யலாம் - என்பது போல ஐயன் அனைவரையும் கூர்ந்து நோக்கினார்.

பாகம் பிரியாத பராபரை, பர்வதராஜனின் புத்ரி - ஐயனை விட்டு அகலாத அம்பிகை, அன்பெனும் அமுதூட்டும் அங்கயற்கண்ணி , கருணை மழை பொழியும் கருந்தடங்கண்ணி - நிகழ்வனவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்களும் அசுரர்களும் கைகூப்பி வணங்கினர்.

''ஆலகாலம் அணுகாதபடி, எங்களைக் காத்து அருள வேண்டும் பெருமானே!..'' சுந்தரர் கரத்தினில் இருந்த ஆலகாலம், ஐயனின் திருக்கரத்திற்கு மாறியது. யாரும் நினைக்காத வகையில் ஆலகாலத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடந்ததைக் கண்டு அதிர்ந்தாள் அம்பிகை. அச்சத்துடன் ஓடிவந்து ஈசனின் கண்டத்தில் திருக்கரத்தினை வைத்தாள்.


அண்ட பகிரண்டங்களும் அதிர்ந்தன. பார்த்துக் கொண்டிருந்த வாசுகி மயங்கி விழுந்தது. ''...என்னங்க... இப்படி செய்து விட்டீர்களே!....'' உமையம்மை பரிதவித்தாள்.. மெல்லிய புன்முறுவலுடன் பெருமான் அம்பிகையின் முகத்தை நோக்கினார். '' நம் பிள்ளைகளைக் காக்க இதை விட்டால் வேறுவழி இல்லை..காமாட்சி!..'' ஐயன் புன்னகைத்தார். பெருமிதம் பொங்கி வழிந்தது அம்பிகைக்கு.

பெருமானின் திருமுகத்தைத் - தோள் மீது சாய்த்துக் கொண்டாள். திருக்கரத்தினால் ஐயனின் கண்டத்தினை வாஞ்சையுடன் மெல்ல வருடினாள். ஈசன் களைப்பாக இருப்பதைப் போல உணர்ந்த அம்பிகை - ''மடியில் சாய்ந்து கொள்கின்றீர்களா!...'' என்றாள்.. ஈசன் தானும், '' வெகு நாளாயிற்று '' என்று அம்பிகையின் மடியில் நிம்மதியாக பள்ளிகொண்டார்.

''என்ன இப்படி ஆகி விட்டதே'' - என தேவர்களும் அசுரர்களும் பதைபதைத்து - ''...எல்லாம் உன்னால் தான்...'' என்கிற மாதிரி ஒருவரை ஒருவர் உக்ரத்துடன் பார்த்துக் கொண்டனர். மயங்கிக் கிடந்த வாசுகியின் மயக்கத்தினை தெளிவித்தான் திருமுருகன். மனம் நெகிழ்ந்த வாசுகி - ''முருகா!.. நான் என்றும் உனக்கு அடிமை..'' என்றது.

நான்முகனும் பெருமாளும் ஓடிவந்து ஆதரவாக அருகில் நின்று கொண்டனர். மற்றவர்கள் ஈசனின் திருமுகத்தைக் காண்பதற்கு முயற்சித்தனர். நந்தியம்பெருமான் - முன்வந்து - '' எல்லோரும் விலகி நில்லுங்கள்!....'' என்று சொல்லி விட்டு , ஈசனைக் கை கூப்பி வணங்கினார். விஷயம் அறிந்து விநாயகர் விரைந்து வந்தார்.

''..அப்பா.. ஏதோ திருவிளையாடல் நடத்துகின்றார்....'' எனப் புரிந்து கொண்ட விநாயகர் தம்பியுடன் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அப்போது கூட தேவேந்திரன் - அவரைக் கண்டு கொண்டு ஏதும் விசாரிக்கவில்லை. யோகியரும் மகரிஷிகளும் திரண்டனர். கின்னரரும் கிம்புருடரும் ஐயனைத் துதி செய்து யாழ் மீட்டினர். 

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையிலேயே இருந்தார். பொழுது விடிந்தது. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியின் மங்கல முகத்தில் பிரகாசம்... பெருமான் திருவிழி மலர்ந்தார் என்று எங்கெங்கும் சந்தோஷம்.. ஈசனின் கழுத்திலேயே விஷம் தோய்ந்து நின்று நீலமணியாகப் பொலிந்தது. அம்பிகை ''..திருநீலகண்டனே.. நலமா!..'' என விளித்தாள். துதித்தாள்.

நந்திதேவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. ''...தாயே!... வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகையே!... நின் பாதம் என் சென்னியதே!... என்று அன்னையின் பாதங்களில் விழுந்து வணங்கினார். காலடியில் காத்துக் கிடந்த அனைவரையும் கருணையுடன் நோக்கிய பரம்பொருள் - தேவேந்திரனை நோக்கி, ''..மீண்டும் முயற்சி செய்...'' என்றார்.

''... பிழை பொறுத்து அருள வேண்டும்...'' - என்று தொழுது வணங்கினான். அனைவரும் ஐயனை பணிந்து வணங்கினர். வாசுகியும் வந்தது கண்ணீருடன். ''அஞ்சவேண்டாம்... உனக்கு அடைக்கலம் தந்தோம்..'' என்றனர் - அம்மையும் அப்பனும். ஆயிற்று. மறுபடியும் ஆரம்பித்தனர் வேலையை.... திரயோதசி மாலையில் பாற்கடலில் இருந்து மங்கலப் பொருட்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின.

அமுத கலைகளுடன் சந்திரன் தோன்றினான். ஐஸ்வர்ய நாயகியாக அன்னை மஹாலக்ஷ்மியும் சகல மருந்துகளுடன் தன்வந்திரியும் தோன்றினர். காணாமற் போன பட்டத்து குதிரையும் உள்ளிருந்து ஓடி வந்தது. யானையைக் காணோமே என்று திகைத்தான் இந்திரன்.. திருவெண்காட்டில் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்ற ஐராவதம் பெரும் பிளிறலுடன் உற்சாகமாக வந்து சேர்ந்தது.

நிறைவாக அமுதம் நிறைந்த பொற்கலசம் பேரொளியுடன் தோன்றியது. தேவர்களும் அசுரர்களும் ஆனந்தக் கூத்தாடினர்.. தேவகன்னியர் திரும்பவும் பேரெழில் பெற்றதில் தேவேந்திரனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ''எனக்கு.. எனக்கு..'' என ஒரே கூச்சல்.. பெருஞ்சத்தம். நான்முகன் அனைவரையும் கடிந்து கொண்டார். ''துயரப்பட்டு அழுதபோது கண்ணீரைத் துடைத்து, அருள் புரிந்த ஈஸ்வரனை மறந்தீர்களே?... மீண்டும் மீண்டும் பிழை செய்யாதீர்கள்...'' என்றார்.

பிழை உணர்ந்த அனைவரும் ஒன்று கூடி ஆரவாரத்துடன் திருக்கயிலை மலைக்குச் சென்று - ஈசனையும் அம்பிகையையும் நன்றியுடன் பணிந்தனர். ''வலம்புரத்தில் எமை வணங்கி வளம் பெறுவாயாக!...'' என்று வாசுகிக்கு அருளினர் - ஐயனும் அம்பிகையும். மனங்கனிந்த பெருமான் டமருகத்தை ஒலித்தார். அம்பிகை அகமகிழ்ந்தாள். 

தலை தாழ்ந்து பணிந்து வணங்கிய நந்தியம்பெருமானின் சிரசில் இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தருளினார். உமையவளை ஒருபுறம் கொண்டு ''சந்தியா நிருத்தம்'' எனும் நடனம் ஆடினார். மலைமகளும் பெருமானுடன் ஆடி மகிழ்ந்தாள். கணபதியும், கந்தனும், திருமாலும் அலைமகளும், நான்முகனும் கலைமகளும், வியாக்ரபாதரும் பதஞ்சலியும், கணங்களும் தேவ கன்னியரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும், யோகியரும் மகரிஷிகளும், நாரதாதி முனிவர்களும், கின்னரர்களும் கிம்புருடர்களும், நாகர்களும் யட்சர்களும், விச்சாதரர்களும் வேதியர்களும் கண்டு களித்து அம்மை அப்பனை வணங்கி இன்புற்றனர்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் என - இருமுறை பிரதோஷம் நிகழும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான். திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.


அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு - தேவர்களும் அசுரர்களும் செய்த பிழையினால் விளைந்த - ஆலகால நஞ்சினை உண்டார் சிவபெருமான். ஈசன் நஞ்சினை உண்ட பொழுது, மேலிட்ட அன்பினால் அம்பிகை தன் வளைக்கரத்தினால் வருடி விட, நஞ்சு கண்டத்திலேயே பொலிந்து நின்றது. பிரதோஷ காலத்தில் தான் நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனமாடி அருள் புரிந்தார்.

இப்படியாக, எம்பெருமான் நஞ்சுண்டு அண்டங்களைக் காத்தருளி - ''சந்தியா நிருத்தம்''- நிகழ்த்திய புண்ணிய வரலாற்றினைக் கேட்டவர்களும் படித்தவர்களும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் நிறையப்பெற்று நோயும் பிணியும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

நன்றி: திரு துரை செல்வராஜூ அவர்களுக்கு 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


வெள்ளி, 25 நவம்பர், 2016

போற்றி திருத்தாண்டகம் - திருவதிகை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 05 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி 
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி 
கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி 
வீரட்டம் காதல் விமலா போற்றி.

பொருளுரை:
அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அனைத்து உயிர்களுடன் இணைந்தும் நிற்கும் சிவபெருமானே போற்றி, சூரிய சந்திரர்கள் ஆகிய இரண்டு சுடர்களாக உள்ளவனே போற்றி, கொலைத் தொழிலைச் செய்யும் சக்தி வாய்ந்த மழுப்படையை உடையவனே போற்றி, உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதையே தொழிலாகக் கொண்ட கூற்றுவனை உதைத்தவனே போற்றி, ஐந்தெழுத்தினை கல்லாத மூடர்கள் காண்பதற்கு அரியவனாகத் திகழ்பவனே போற்றி, ஐந்தெழுத்தினை கற்று, அதனை எப்போதும் உச்சரிக்கும் அடியார்களின் துன்பங்களை களைபவனே போற்றி, அகன்று காணப்பட்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் வில்லினைக் கொண்டு அழித்தவனே போற்றி. அதிகை வீரட்டத் திருக்கோயிலின் மீது காதல் கொண்டு அங்கே உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 02
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி 
பல்லூழியாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி 
உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி 
கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
பாடுதலையும், கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே! உன்னை வணங்குகிறேன்.


பாடல் எண் : 03
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி 
முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி 
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி 
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி   
தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி 
திருவீரட்டானத்து எம் செல்வா போற்றி.

பொருளுரை:
முல்லை மாலையினை முடியில் சூடியவனே போற்றி, உடல் முழுவதும் திருநீறு பூசியவனே போற்றி, எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே போற்றி, யாழ் எனப்படும் இசைக் கருவியில் எழும் ஏழு விதமான ஓசைகளை படைத்தவனே போற்றி, மயிர் நீக்கப்பட்டதும் உருண்டை வடிவத்தில் அமைந்ததும் ஆகிய பிரம கபாலத்தில் உணவு பெறுபவனே போற்றி, உன்னை வந்து வழிபடும் அடியார்களின் தீவினைகளைத் தீர்க்கும் தேவனே போற்றி, தில்லைச் சிற்றம்பலத்தில் உறைபவனே போற்றி. அதிகை வீரட்டானத் திருக்கோயிலில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 04
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி 
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார் தம் குற்றேவலைக்  
குறிக்கொண்டிருக்கும் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலும் தம்மில் 
பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
மார்பினில் திருநீறு அணிந்தவனே போற்றி, அடியார்கள் மேற்கொள்ளும் தவங்களுக்குத் துணையாக நின்று, தவங்களை முற்றுவித்த பின்னர், தவங்களுக்கு உரிய பலன்களை அளிப்பவனே போற்றி, மனம் ஒன்றித் தொழும் அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளை கணக்கில் கொண்டு, அவர்களுக்கு அருள்புரியும் அழகனே போற்றி, பாம்பு, சந்திரன் மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றும் தங்களுக்குளே உள்ள பகை உணர்ச்சியை மறந்து ஒரே இடத்தில், உனது சடையில் இருக்கும் நிலை வைத்த பண்பனே போற்றி, ஆம்பல் பூக்களை அணிந்தவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 05
நீறேறு நீல மிடற்றாய் போற்றி 
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறேறு உமையொருபால் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டும் குழகா போற்றி
ஆறேறு சென்னி உடையாய் போற்றி 
அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி 
இருங்கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி.

பொருளுரை:
நீல நிறத்தில் காணப்படும் கழுத்தில் திருநீறு அணிந்தவனே போற்றி, ஒளி மிளிரும் வெண் மழுப் படையை ஏந்தியவனே போற்றி, உனது உடலில் ஒரு கூறாக பொருந்துமாறு உமை அம்மையை வைத்தவனே போற்றி, கொடிய விடம் கொண்ட பாம்புகளை ஆட்டுவிக்கும் குழகனே போற்றி, கங்கை ஆறு தங்கிய சடையனே போற்றி, அடியார்களுக்கு கிடைத்தற்கு அரிய அமுதமாகத் திகழ்பவனே போற்றி, காளையை வாகனமாக விரும்பி ஏற்பவனே போற்றி, பெரிய கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 06
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி 
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி 
வேழத்துரி வெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி 
நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி
ஆடும் ஆனைந்தும் உகப்பாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
உன்னை விரும்பிப்பாடும் அடியார்களின் பாடல்களை விரும்பி கேட்பவனே போற்றி, பழையாறு, பட்டீச்சுரம் ஆகிய தலங்களில் உறையும் இறைவனே போற்றி, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றினை அறவே நீக்கிய அடியார்களுக்கு வீடுபேறு அருளும் பெருமானே போற்றி, உமையம்மை அஞ்சுமாறு மதயானையின் தோலை உரித்து, அந்த தோலினை போர்வையாக போர்த்தவனே போற்றி, தங்களது முயற்சியால் உன்னை அடையலாம் என்று எண்ணி உன்னை அடைய நினைப்பவர்கள் ஆராய்ந்து அறிவதற்கு அரியவனே போற்றி, பாம்பினை இடையில் சுற்றியவனே போற்றி, பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் ஐந்து பொருட்களின் (பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம்) அபிடேகத்தை மிகவும் விரும்புவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 07
மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி 
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய் போற்றி
விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி 
வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி 
பார் முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி 
கார்க்கெடிலம் கொண்ட கபாலி போற்றி.

பொருளுரை:
மண்ணுலகம் அசையுமாறு கூத்தாடுவதை மகிழ்பவனே போற்றி, பெரிய கடலாகவும் பரந்த ஆகாயமாகவும் இருப்பவனே போற்றி, விண்ணுலகம் நடுங்கும்படி பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவனே போற்றி, யானையின் பசுந்தோலை அச்சம் ஏதுமின்றி உடலில் போர்த்த விகிர்தனே போற்றி, பண்கள் பொருந்துமாறு பாடல்கள் பாடுபவனே போற்றி, உலகம் முழுதும் பரவி இருக்கும் பரமனே போற்றி, நெற்றிக் கண் அசைந்து திறந்த மாத்திரத்தில் காமனை எரித்தவனே போற்றி, நீரின் ஆழத்தால் கருமை நிறம் கொண்ட கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 08
வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி 
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேரும் தோன்றால் போற்றி 
தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி   
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி 
நான்மறையோடு ஆறங்கம் ஆனாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
மிகுந்த கோபத்தினை உடைய எருதினை வாகனமாக ஏற்றவனே போற்றி, விரிந்து கிடக்கும் சடையினில் கங்கை நதியைத் தாங்கியவனே போற்றி, என்றும் இடைவிடாது பலி ஏற்பவனே போற்றி. தங்களது கைகளால் உன்னைத் தொழும் அடியார்களின் துன்பங்களைத் துடைப்பவனே போற்றி, நஞ்சினை ஒடுக்கிய கழுத்தினை உடையவனே போற்றி, நான்மறைகளாகவும் மறைகளின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே போற்றி, அழகிய சொற்களை உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றவனே போற்றி.  அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 09
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி 
சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய் புண்டரீகத்து உள்ளாய் போற்றி 
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி 
தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
அடியார்களின் சிந்தனையுள் உறையும் சிவபெருமானே போற்றி, ஸ்ரீ சைலம் என்று அழைக்கப்படும் சீபர்ப்பதத்தை உறைவிடமாக கொண்ட சிவபெருமானே போற்றி, உயிர்களின் இதயத்தில் ஞான வடிவாக இருப்பவனே போற்றி, புண்ணியமே வடிவாக உள்ளவனே போற்றி, தூய்மையானவனே போற்றி, காலை நண்பகல் மற்றும் மாலை எனப்படும் மூன்று சந்தி காலங்களாக இருப்பவனே போற்றி, அளவில்லாத சாமர்த்தியம் வாய்த்தவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, அனைத்துப் பொருட்களுக்கும் முடிவாக அமைந்த அரனே போற்றி, அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 10
முக்கணா போற்றி முதல்வா போற்றி 
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி 
தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
தொக்கணா என்று இருவர் தோள் கை கூப்பத்
துளங்காது எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத்து ஈசா போற்றி.

பொருளுரை:
மூன்று கண்களை உடைய பெருமானே போற்றி, பல வகைகளிலும் அனைவர்க்கும் முதல்வனாகத் திகழ்பவனே போற்றி, முருகப் பெருமானை மகனாகப் பெற்று தேவர்களின் இடர் களைந்தவனே போற்றி, தென்திசைக் கடவுளே போற்றி, தருமத்தின் வடிவாக உள்ளவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் கூடி நின்று எமது அண்ணலே என்று உன்னை, தங்களது கைகளைத் தங்களது தலையின் மேல் உயர்த்தி துதிக்க, அசையாது நீண்ட ஒளிப் பிழம்பாக நின்ற இறைவனே போற்றி, எனது தலைவனே போற்றி, அலைகள் வீசும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை வீரட்டத்து இறைவனே போற்றி,  உன்னை அல்லால் வேறு பற்றுக்கோடு எதுவும் எனக்கில்லை, எனவே நீ தான் என்னை காக்க வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

போற்றி திருத்தாண்டகம் - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்

திருமுறை : ஆறாம் திருமுறை 32 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


சுவாமிகள் பெருவேளூர், திருவிளமர் வணங்கித் திருவாரூரில் தொண்டர்கள் எதிர்கொள்ளத் திருவீதி வலம் வந்து தேவாசிரியனை வணங்கிப் புற்றிடங்கொண்டாரைக் கண்டு தொழுது பாடியருளிய திருப்பதிகம் இது

அப்பர் பிரான் திருவாரூர் வருகின்றார் என்பதை அறிந்துகொண்ட தொண்டர்கள், அந்த ஊர் எல்லையில் ஒன்றாகத் திரண்டு, சமண மதத்தின் மாயையைக் கடந்து, சிவபிரானின் அருளால் தான் பிணைத்துக் கட்டப்பட்டு இருந்த கல்லே மிதப்பாக மாற அதன் உதவியுடன்  கரையேறிய அப்பர் பிரான் வந்தார் என்று கொண்டாடி அவரை வரவேற்றனர். மேலும் தங்களது வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்து அப்பர் பிரானின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டியதை தெரிவித்தனர், சிவபிரானின் நிறைந்த அருள் பெற்ற தொண்டர், தங்கள் ஊருக்கு வந்தார் என்று மிகவும் மகிழ்ந்தார்கள்.

பாடல் எண் : 01
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி 
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுக்களையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 02
வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆலமரம் நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டவனே, மத யானையின் ஈரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தவனே, தேன் நிறைந்த கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனே, கொல்லும் குணமுடைய புலித்தோலை ஆடையாக உடுத்த அழகனே, அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே, தேவர்களின் இறைவனே, ஆலமரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவனே, அழகிய பொன் குன்றினை ஒத்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 03
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி 
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலை வேல் ஏந்தீ போற்றி 
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
மலையரசனாகிய இமவானின் மகள் பார்வதியின் கணவனே, இளைய காளையினை வாகனமாக உடையவனே, எனது நெஞ்சத்தில் நிலையாக நிற்பவனே, நெற்றியில் ஒற்றைக் கண் உடையவனே, இலை வடிவாக அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே, ஏழு உலகங்களாகவும் ஏழு கடல்களாகவும் உள்ளவனே, மூன்று புரங்களையும் ஒரு வில்லால் எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 04
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை உடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
பொன் போல் ஒளிரும் திருமேனியை உடையவனே, பூத கணங்களைப் படையாகக் கொண்டவனே, சிறப்பாக நிலை பெற்ற நான்கு வேதங்களாய் இருப்பவனே, மான் கன்றினை கையில் ஏந்தியவனே, உன்னை நினைத்து தியானிப்பவர் மெய்ப்பொருளாக உன்னை உணரும் வண்ணம் செய்பவனே, உலகுக்கு ஒப்பற்ற ஒரே தலைவனே, தலையில் வெண்பிறையை சூடியவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 05
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி 
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி 
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி 
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
நஞ்சு ஒடுக்கப்பட்ட கழுத்தினை உடையானே, தவத்தில் ஆழ்ந்து யோக வடிவாக விளங்குபவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை உடைத்தவனே, வெண் பிறையை, தலையில் மாலையாகச் சூடியவனே, ஊழிமுடிவில் உலகெங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்து இருக்கும் சமயத்தில் விருப்பமுடன் ஆடல் புரிபவனே, தூய திருநீற்றினை உடலில் பூசியவனே, சிவந்த சடையை உடையவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 06
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி 
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி 
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத்து அயனோடு மாலும் காணா 
அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி 
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
எல்லோர்க்கும் நலத்தினை அளிப்பவனே, அருவுருவ இலிங்க வடிவாக இருப்பவனே, படம் எடுக்கும் பாம்பினை அணியாக அணிந்தவனே, புண்ணியத்தின் வடிவாக உள்ளவனே, அழகிய தாமரை மலரில் உறையும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண முடியாதவாறு தழல் உருவாக எழுந்தவனே, உனது திருப்பாதங்களை போற்றுகின்றேன், தாமரை மலர் போன்று மென்மையான உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன். திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 07
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி 
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி 
குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி 
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
நறுமணம் உடைய கொன்றை மலரை சடையில் அணிந்தவனே, வானில் உலவும் நிலவையும் ஒளி வீசும் பாம்பினையும் சடையில் வைத்தவனே, பூங்கொம்பு போன்று நுண்ணிய இடையை உடைய பார்வதி தேவியினைத்  தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனே, ஒலிக்கும் தன்மை வாய்ந்த கழல் அணிந்த காலினால் கூற்றுவனை உதைத்தவனே, உன்னை நம்பி வழிபடும் அடியார்களுக்கு மிகவும் எளிதாக கிட்டும் செல்வமே, நான்கு வேதங்களாகவும் அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே, செம்பொன், மாணிக்கமணி மரகதம் முதலான அரிய பொருள் போன்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 08
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி 
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி 
வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி 
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி.
தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி 
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
உலகில் உள்ள அனைத்து உயிர்களோடும் உயிராக கலந்து இருப்பவனே, உன்னை விரும்பும் அடியார்கள் மனதிலிருந்து என்றும் நீங்காமல் இருப்பவனே, வள்ளலே, மணவாளனே, வானவர் கோனாகிய இந்திரனின் தோளை நெரித்த வல்லவனே, வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்ட விகிர்தனே, மேலோர்க்கும் மேலாக விளங்குபவனே, தெளிந்த கங்கை நீரினைத் தனது சடையில் ஏற்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 09
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி 
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி 
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
கொன்றை முதலிய பூக்கள் நிறைந்த சடைமுடியை உடைய தூயவனே, தேவர்கள் போற்றும் பரம்பொருளே, தெய்வத்தன்மை பொருந்திய தேவர்களுக்குத் தலைவனாய் விளங்குபவனே, திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருளியவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து என்னைக் காத்து நான் இனிப் பிறவாதவாறும் சாவாதவாறும் காத்தவனே, வெண்சங்கு நிறத்தினை ஒத்த திருநீற்றினை அணிந்த திறமையாளனே, இடபத்தினை சித்திரமாக உள்ள கொடியைக் கொண்டவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 10
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி 
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி 
அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொருளுரை:
பிரமனின் ஐந்தாவது தலையை நீக்கிய பெரியோனே, உமையம்மைக்கு உடலில் இடம் கொடுத்ததால் பெண்ணுருவமும் ஆணுருவமும் கலந்து நிற்பவனே, நான்கு கரங்களையும் மூன்று கண்களையும் கொண்ட தோற்றத்தை உடையவனே, அன்பு கொண்டு உன்னைத் தொழும் அன்பர்களுக்கு மிகவும் எளியவனே, அமுதத்தை உட்கொண்ட தேவர்களுக்கு அரசனாக விளங்குபவனே, இராவணனது இருபது தோள்களையும், கால்களையும், பத்து தலைகளையும் தனது பாதத்தின் விரலால் நெரித்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||