இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 08 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சிலரது மனதில் காரணமே இல்லாமல், 'இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்து விடுமோ' என்ற பயம் இருக்கும். இதை அடியோடு அழித்து, எதையும் தாங்கும் இதயமும், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் பெற திருவாரூர் தியாகராஜரை மனதில் நினைத்து இந்தப் பாடல்களைப் பாடுங்கள்.
சுந்தரர் சேரர்பெருமானுடன் பாம்பணி மாநகரில் திருப்பாதாளீச்சுரரை வணங்கி அருகில் உள்ள பல பதிகளையும் தொழுது திருவாரூர் வந்தணைந்தார். திருவாரூரில் வாழ்வார்கள் எதிர்கொள்ளத் திருக்கோயில் சென்று பாடியருளிய இத்திருப்பதிகம்
பாடல் எண் : 01
இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு
பறை கிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினேற்குத்
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
தேவர்கள் செம்பொன்னையும், மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து, நினது ஒலிக்கும் கழலையணிந்த திருவடிகளை, மலர் தூவி வணங்குகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பறையைக் கிழித்தாற் போன்ற உடம்பைப் பற்றி நின்று பார்த்தேனாகிய எனக்கு, அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்தி வந்த இன்பத்தையும், அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 02
ஊன்மிசை உதிரக் குப்பை ஒரு பொருளிலாத மாயம்
மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல் வெள்ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே, திருவாரூரில் உள்ள தந்தையே, இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு, பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ஆதலின், அத்தன்மையை அறியாத, மான் மருண்டாற் போலும் பார்வையினையுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப் பிறவி வாழ்வினை, இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன் அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 03
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும்
துறுபறித்தனைய நோக்கிச் சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும் நாள்தொறும் வணங்குவார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
மணம் கமழும் பூவும், நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும், தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும், தாத்துவிகங்கள் அறுபதும், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்னும் ஆகிய எல்லாம் புதராக, வேறாகக் கண்டு சொல்லின். அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார். ஆதலின் தம்மை யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 04
சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தேன் அல்லேன்
மல்லிகை மாட நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம், வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, யான், ஓட்டைக் குடில்களுள் துச்சிலிருந்து வாழ்ந்த, பேதைக்குரித்தாய, துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும், நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் அதனால் அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 05
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக்
குரம்பை வாய்க் குடியிருந்து குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண். யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, அடியேன், எலும்புகளை நரம்பாற் கட்டின, விருப்பத்தோடு சிறிதும் இசை வில்லாத (அருவருப்பைத் தருவதான) குடிசைக்கண் குடியிருத்தலால், நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன் அதனால் அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 06
மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம், பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழா நின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர் தாமே அவர்ளை, "பிணம்" என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ஆதலின் இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன். அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 07
தாழ்வெனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்
ஆழ்குழிப் பட்ட போது அலக்கணில் ஒருவர்க்கு ஆவர்
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு, அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர். துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது, துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 08
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடிக் கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
கருமை நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின் மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 09
பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய்யென்று எண்ணும்
வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
பொருளுரை:
முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
பாடல் எண் : 10
தஞ்சொலார் அருள் பயக்கும் தமியனேன் தடமுலைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் ஆஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே.
பொருளுரை:
பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன், அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய், அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப்பாடல்களை எண்ணிப் பாட வல்லவர், நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக