ஞாயிறு, 12 ஜூன், 2016

நலம் தரும் திருப்பதிகம் 05 திருக்கழிப்பாலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பால்வண்ணநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வேதநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 12 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் மீது திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் இவை. கணவர், பிள்ளைகள் தீய நண்பர்களால் வழி தவறி நடந்தால், அவர்கள் திருந்த இந்த திருப்பதிகத்தினை ஓதலாம்.


தில்லை நகரில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து மகிழ்ந்து பதிகங்கள் பல பாடிய அப்பர் பிரான், அருகிலிருந்த வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களுக்கும் சென்று பதிகங்கள் பாடி அருளினார். கழிப்பாலையில் பாடிய ஐந்து பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகத்தின் பாடல் தோறும், பிறவிப் பெருங்கடலைக் கடந்து செல்வதற்கு வழி வைத்த பெருமான் என்று இறைவனைப் புகழ்ந்து பாடி, அந்த வழியே சென்று உய்வினை அடையுமாறு நம்மைத் தூண்டுகின்றார். இவ்வாறு நாம் உய்வதற்கு வழி வகுத்த பெருமானுக்கு நாம் செய்யக் கூடிய கைம்மாறு, அந்த வழியில் செல்வது தான் என்றும் குறிப்பிடுகின்றார்.

பாடல் எண் : 01
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து 
வொள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார் 
தயக்கம் பல படைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று, தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார். தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டையோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது. அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை.


பாடல் எண் : 02
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறையார்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கை
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சுக் 
கறையார்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர். கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர். கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர், எம்பெருமானார். கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால், இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம்.


பாடல் எண் : 03
நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும் நேரிழையாளாய
ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை
ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த
களி வண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான நெகிழ்வும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 04
பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூணநூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி 
ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
மணம் மிகுந்த திருநீற்றினைத் தனது உடலில் பூசியவராகவும், திருநீற்றுப் பையினை உடையவராகவும், புலித் தோலை உடையவராகவும், கோபத்தால் பொங்கி படமெடுக்கும் பாம்பினை உடலில் அணிந்தவராகவும், பூணூல் அணிந்தவராகவும், உள்ள பெருமானை அவரது அடியார்கள் நறுமணம் மிகுந்த தாமரை மலர்களைக் கொண்டு அவரது திருவடிகளில் சாத்தி வழிபடுகின்றார்கள். திருவாரூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், ஆதிரை நட்சத்திர நாளினை மிகவும் விரும்புவரும். பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுபவரும், ஆகிய இறைவன் கழிப்பாலைத் தலத்தில் விருப்பத்துடன் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய அவர், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அழியும் தன்மை கொண்ட உடல்களுடன் இணைந்து வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, என்றும் நிலையான இன்பத்தினை அளிக்கும் முக்தி நிலைக்குத்   செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 05
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் 
எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய்
இறையானாய் எம் இறையே என்று நிற்கும் 
கண்ணானாய் காரானாய் பாருமானாய்
கழிப்பாலையுள் உறையும் கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
விருப்பத்துடன் பெருமானை வழிபாட்டு நிற்கும் தேவர்கள், எங்களது உலகமாக இருப்பவனே, வேதங்களாகவும் கீதங்களாகவும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பவனே, எண்ணானாவனே, எழுத்தானவனே, ஏழு கடல்களாக உள்ளவனே, எங்களுக்குத் தலைவனாக இருப்பவனே, எங்களுக்கு பற்றுக்கோடாக உள்ளவனே, மழை பொழியும் மேகம் போன்று கருணை உள்ளம் கொண்டவனே, எல்லா உலகங்களாக இருப்பவனே என்று சிவபெருமானை வாழ்த்துகின்றார்கள். இவ்வாறு வாழ்த்தப்படும் பெருமான் கழிப்பாலைத் தலத்தில் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய பெருமானாகிய அவர், மண்ணோடு மண்ணாக கலந்து அழியக்கூடிய நிலையில்லாத உடலினில் சிக்காமல் பிறப்பிறப்பு என்ற சங்கிலியிலிருந்து விடுபட்டு முக்தி உலகத்திற்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 06
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த 
விரி கதிரோன் எரி சுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும் 
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
கழிப்பாலை மேவிய கபாலப்பனார், வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்கினி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார். அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர். பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர். கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர். அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.


பாடல் எண் : 07
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதை மீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் 
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தினாலே 
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சியுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
என்றேனும் பிணத்தின் நிலையினை அடையப் போகும் நிலையற்ற உடலினை, ஓட்டைகள் நிறைந்த குடிசையாகிய உடலினை, நிலையானது என்று தவறாக கருதும் பேதை மாந்தர்களே, தசைப் பகுதிகள் தங்கும் மூவிலை சூலத்தினை உடையவரும், நீலகண்டராக விளங்குபவரும், எட்டு தோள்களைக் கொண்டவரும், எண்ணற்ற நற்குணங்களை உடையவரும் ஆகிய சிவபெருமான், தனது முடியினைக் கொண்டு திருவிளக்கு ஏற்றிய கணம்புல்லனின் செய்கையினை மிகவும் விரும்பி ஏற்று மகிழ்ந்தார். எனவே நீங்களும் உள்ளன்புடன் அவருக்குத் தொண்டுகள் செய்து அவருக்கு விருப்பமானவர்களாக மாறுவீர்களாக; அவர் காஞ்சித் தலத்திலும் கழிப்பாலைத் தலத்திலும் உறைகின்றார். நாற்றத்தினை மறைப்பதற்காக நறுமணப் பொருட்கள் பூசப்படும் உடலினை விட்டு ஆன்மாக்கள் நீங்கி முக்தி நிலை அடைவதற்கான வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 08
இயல்பாய ஈசனை எந்தை தந்தை 
என் சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான
தியம்பகன் திரிசூலத்து அன்ன கையன்
கயல் பாயும் கண்டல் சூழ் உண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
தனது இயல்பு பற்றி அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான் ஆவார்; பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்திற்குத் தலைவனாக விளங்கும் அவன், எனது சிந்தையில் விரும்பி உறைகின்றான்; மூன்று மூர்த்திகளாகத் திகழ்ந்து இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்யும் பெருமான், தூயவன், மூன்று கண்களை உடையவன், முத்தலை சூலத்தைத் தனது கையில் ஏந்தியவன். தாழை மரங்கள் வேலிகளாக அமைந்த கயல்கள் பாயும் நீர்நிலைகளை அதிகமாக உடைய  கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான், புலன்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்வதும் நிலையற்றதும் ஆகிய உடலினை விட்டு ஆன்மா முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 09
செற்றதோர் மனம் ஒழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் 
உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகம் எல்லாம் 
காட்டுவான் உத்தமன் தான் ஓதாது எல்லாம் 
கற்றதோர் நூலினன் களிறு செற்றான் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
தங்களது மனதினில் உள்ள பகைமை உணர்ச்சியினை அறவே நீக்கி, அன்போடு சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் உள்ளத்தில் உள்ள, காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய நோய்களை நீக்குபவன் சிவபெருமான்; மேலும் அத்தகைய அடியார்களை உலகம் போற்றும் உத்தமர்களாக மாற்றுவான்; அவன் தான் எதுவும் ஓதாமலே அனைத்து நூல்களையும் கற்றவனாக விளங்குகின்றான். அவன், யானை போன்று வலிமை கொண்டு நம்மை பல துன்பங்களிலும் ஆழ்த்தும் பாசங்களிலிருந்து இயல்பாகவே நீங்கியவன் ஆவான். கழிப்பாலைத் தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான்  நிலையில்லாத இந்த மாய உடலை விடுத்து முக்தி நெறி செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 10
பொருது அலங்கல் நீண்முடியான் போர் அரக்கன்
புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாதாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக் 
கரதலங்கள் கதிர்முடி ஆறு அஞ்சினோடு
கால் விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
பல போர்களில் பங்கு கொண்டு வெற்றி மாலை சூடிய அரக்கன் இராவணன், தனது புட்பக விமானம் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், கயிலை மலை குறுக்கிட்டதைக் கண்டு கோபம் அடைந்தான்; நிலவுலகம் நடுங்குமாறு மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையின் அருகே சென்று, அதனை பெயர்த்து எடுக்க அவன் முயற்சி செய்த போது, சிறந்த அணிகலன்களை அணிந்தவளாகிய பார்வதி அன்னை அச்சம் கொண்டாள்; அன்னை அச்சம் அடைந்ததைக் கண்ட பெருமான், அரக்கனது பத்து தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு தனது கால் விரலை மலையில் ஊன்றினார். இத்தகைய வல்லமை பொருந்தியவராக விளங்குபவரும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமான் மீண்டும் மீண்டும் பிறந்து மாயமான உடலில் நமது ஆன்மா புகும் தன்மையை விடுத்து, முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக