செவ்வாய், 14 ஜூன், 2016

‪பரமன் நடனம்‬ காண பாற்கடலை விட்டு வந்த ‪பதஞ்சலி‬


நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப் பெற்றவர் பதஞ்சலி முனிவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன் தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் என்று புராணம் கூறும். 

ஒருசமயம் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அவரது முகத்தைப் பார்த்தார். ஆதிசேஷனின் ஐந்து திருமுகங்களும் மகாவிஷ்ணுவின் திருமுக மண்டலத்தைப் பார்த்தவண்ணமிருந்தன.

மகாவிஷ்ணு முகம் மலர்ந்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தார். "துயில் கொண்டிருக்கும் வேளையிலும் புன்னகைப்பதேன்?" என்னும் அடுத்த சந்தேகமும் ஆதிசேஷனுக்கு ஏற்பட்டது. "இதை எப்படி பகவானிடம் கேட்பது?" என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, "ஆதிசேஷா! என்ன என் முகத்தைப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். 

அதிசயித்த ஆதிசேஷன், "பகவான் துயில் கொண்டிருந்தாலும், எல்லாருடைய நிலையையும் அறிந்து அருள்பாலிப்பவரல்லவா" என்று தெளிந்து, "சுவாமி, என்மீது துயில் கொண்டிருக்கும் தாங்கள், திடீரென்று கனப்பதற்குக் காரணமென்ன? மேலும், தாங்கள் முகம் மலர்ந்து புன்னகை புரிந்ததன் காரணத்தையும் இந்த அடியேனுக்கு அருள வேண்டும். தங்களுக்கு இடையூறு செய்ததற்கு பொறுத்தருள்க சுவாமி'' என்று பணிவுடன் வேண்டினார்.

அதற்கு மகாவிஷ்ணு, "ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது. அது இப்போது சமநிலை அடைந்திருக்குமே'' என்றார்.

"ஆம் சுவாமி. தாங்கள் அருளியதன் பொருளறிந்தேன் சுவாமி. தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்'' என்று ஆதிசேஷன் இறைஞ்சினார்.

"ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்'' என்றார் திருமால். "தங்களை விட்டு என்றும் பிரியாமலிருக்கும் என்னால் எப்படி சுவாமி தவம் மேற்கொள்ள முடியும்?''

"கவலைப்படாதே. நீ மாயஉருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்'' என்றார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் அருளாசி பெற்ற ஆதிசேஷன் மாயத்திருவுரு கொண்டு தவமியற்றினார். பலகாலம் தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், "ஆதிசேஷா, எது குறித்து இத்தகைய கடுந்தவம்?'' என்று கேட்டார்.

சிவபெருமானை நேரில் கண்டதில் பேருவகை கொண்ட ஆதிசேஷன், "ஐயனே, தங்களின் திருநடனத்தை இந்த அடியவன் காண அருள்புரிய வேண்டும்'' என்று பணிந்தார்.

"உன் எண்ணம் நிறைவேறும். நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. காசிப முனிவரும் கத்ருதேவியும் என்னை நோக்கித் தவமிருந்து, ஆதிசேஷனாகிய நீயே அவர்களுக்கு மகனாக அவதரிக்க வேண்டுமென்று வரம் கேட்டுள்ளார்கள். எனவே, பாம்பாக கங்கை வழியாகச் சென்று அவர்களுக்கு மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய். 

யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்குப் பல வியாக்கியானங்களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவதரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்கிரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்'' என்று அருளினார்.

ஆதிசேஷன், சிவனின் பாதம் வணங்கி ஆசிபெற்றார். பிறகு வியாக்ரபுரத்தில் காசிப முனிவருக்கும் கத்ருதேவிக்கும் மகனாக அவதரித்தார். அந்த நாள் பங்குனி மாத மூல நட்சத்திரம் என்று புராணம் கூறுகிறது.

வியாக்ரபுரத்தில் அவதரித்த ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன் விளங்கினார். அவருக்கு வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து தில்லை வந்தார்கள். அங்கே, அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக்கண்டு மெய்ம்மறந்து நின்றார்கள்.

"ஐயனே, உம் ஆனந்த நர்த்தனத்தைக் காணும் பேறு பெற்றோம். தங்களின் திருநடனத்தை என்றென்றும் தரிசிக்கும் பாக்கியம் கிட்ட அருளவேண்டும். மேலும், தங்களின் திருவடி தரிசனத்தை பக்தர்கள் யாவரும் காண வகை செய்யவேண்டும்'' என்று பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வேண்டினார்கள்.

"உங்கள் பரந்த மனப்பான்மையை அறிந்து மகிழ்கிறோம். நீவிர் இருவரும் ஸ்ரீபுரம் செல்லுங்கள். (ஸ்ரீபுரம் என்பது திருவாரூர்). அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்'' என்று அருளினார் இறைவன்.

இறைவன் அருளியதுபோல் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகவே இருக்கவே, பதஞ்சலி தன் இடுப்புக்குக்கீழே பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் இடுப்புக்குக்கீழே புலிக்கால்கள் மற்றும் புலிவால் தோற்றத்துடன் சென்று அன்னை கமலாம்பாளை வழிபட்டார்கள்.

அம்பாள், அவர்கள் பக்தியைப் போற்றி, மண்ணால் லிங்கத்தை அமைத்து வழிபட அருளாசி வழங்கினாள். விமலாக்க வைரம் என்கிற அந்த தேவலோக மண்ணால் விளமல் என்ற இடத்தில் பதஞ்சலி லிங்கத்தை அமைக்க, இருவரும் வழிபட்டார்கள். அப்போது, சிவபெருமான் அங்கே காட்சி கொடுத்தார். இறைவன் அஜபா நர்த்தனம் ஆடும் போது தன் ருத்ர பாதத்தைக் காட்டினார். இந்தக் காட்சியை மகாவிஷ்ணு, பிரம்மன், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் என அனைவரும் கண்டு ரசித்தார்கள். 

பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்திரத் திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர்.

பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்றார். அதன் விளைவாக யோக சூத்திரங்களையும், பாணினி சூத்திரத்திற்கு "பாஷ்யம்' என்ற இலக்கண விவரங்களையும் மற்றும் பல நூல்களையும் இயற்றினார்.

விளமல் திருத்தலத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் பாத தரிசனம் கண்டதுபோல, பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு பேறுபெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீ நடராஜரின் தாண்டவத்தின் போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவதுமாகக் கலந்தார்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்ததாக சில திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவில். இவ்வாலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு அருகில் பதஞ்சலி சமாதி உள்ளது. தவிர, ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் கோவிலில் மூன்றாவது பிராகாரத்தில் பதஞ்சலி முனிவர் சமாதியும் தனிச்சந்நிதியும் உள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலிலும் பதஞ்சலி சமாதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்திரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் கலைத்து மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாகச் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது.

‪‎நன்றி‬: பொன்மலை பரிமளம்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

தேவாரம் காட்டும் ஐம்புல வழிபாடு‬

சமய வாழ்க்கை என்பது முன்பெல்லாம் சமூகத்தினர் அனைவராலும் பின்பற்றமுடியாத ஒன்றாக இருந்தது. ஆங்காங்கே ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றாலும் மந்திரம், யாகம் போன்றவையே வழிபாட்டு முறையாக இருந்தன.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள், பக்தி என்பது இறைவன் மீது ஏற்படும் அன்பே என்பதையும், அந்த அன்புணர்வை வெளிப்படுத்தும் முறையே வழிபாடு என்பதையும் மக்கள் மனதில் தோற்றுவித்தனர்.

தேவார மூவர் எனப்படும் சுந்தரர், சம்பந்தர், அப்பர் போன்ற அடியார்கள் இறைவனின் பெருமைகளை நமக்கு சுட்டிக்காட்டி, அவனை வழிபடும் முறையையும் கற்றுத்தந்திருக்கிறார்கள். இறைவனை தரிசித்து இனிய தமிழில் துதிப்பதைவிட சிறந்த வழிபாடு இருக்க முடியாது என்பதை தலம் தலமாகச் சென்று பதிகம் பாடி நமக்கு உணர்த்தியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கும் ஆன்மிக ஒளியைக் காட்டி, அவர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வதே தேவாரப் பாடல்களின் நோக்கம் எனலாம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வ தோடு, வாழ்க்கை முடிந்தபின் வீடுபேறு அடைதலையும் மக்கள் விரும்பினார்கள்.

தமது புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வதால் வீடுபேறு அடையலாம் என்பது நம் முன்னோர்கள் காட்டிய வழி. "புலன்களையும் மனதையும் அடக்கவேண்டும் என்பதில்லை; அவற்றைப் பயன்படுத்தியே முக்தி பெறலாம்" என்பதை சம்பந்தர் தன் தேவாரப் பதிகங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐம்புலன் நுகர்ச்சியால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறும் தேவாரப் பதிகங்கள், ஐம்புலன்களையும் பயன்படுத்தி அன்பு வழியில் நடந்து பக்தி செய்வது பற்றிக் கூறுகின்றன. இது எப்படி சாத்தியம் என்ற ஐயம் நமக்குள் எழுகிறது.

திருநாவுக்கரசர் தமது திருவங்க மாலையில் "மனமானது கடவுளை தியானிக்கவேண்டும்; கைகள் கடவுளை அர்ச்சிக்கவேண்டும்; கால்கள் கோவிலை வலம் வரவேண்டும்; காதுகள் பகவத் விஷயங்களைக் கேட்கவேண்டும்; கண்கள் கடவுளை தரிசிக்கவேண்டும்; மூக்கு வில்வம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை நுகரவேண்டும்; தலை இறைவனை மட்டுமே வணங்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களுமே அவற்றிற்குரிய செயல்களைச் செய்கின்றன. அவற்றின் செயல்கள் வழிதடு மாறிச் செல்லும்போது, நமக்குத் துன்பங்கள் விளைகின்றன. புலன்களின் செயல்பாடுகளை அடக்கி நெறிப்படுத்தினால் நன்மை பயக்கும் என்பது ஒரு நிலை. புலன்களை அடக்குவதைவிட, அவற்றின் செயல்பாடுகளை திசை திருப்பி இறைவழி பாட்டில் ஈடுபடச் செய்வதே அன்பு வழியாக இருக்கும் என்பதே சம்பந்தர் கூறும் மற்றொரு நெறி.

முதலாவது கண்களின் செயல்பாடு. முற்காலத்தில் நம் முன்னோர்களும் மன்னர்களும் அமைத்துள்ள உயர்ந்த கோபுரங்கள், கோவில்கள், அவற்றைச் சுற்றி அமைந்துள்ள நீர்நிலைகளுடன் கூடிய நந்தவனங்கள், கோவில்களில் காணப்படும் சிற்ப வேலைப் பாடுகள் ஆகியவை கண்ணைக் கவர்வனவாக உள்ளன.

இறை மூர்த்தங்களுக்கு செய்யப்படும் அழகிய அலங்காரங்கள் நம் கண்களை ஈர்ப்பன. கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த தெய்வீக அழகு, மனதை இறைவனை நோக்கி இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. இவற்றைக் காண்பதாலேயே மனதில் அன்பு பெருகி வளர்வதை நம் அனுபவத்தில் உணரலாம்.

அடுத்ததாக செவிப்புலன். இறைவனைப் பற்றிய புராணங்கள், கதைகள், இசையுடன் கூடிய துதிப்பாடல்கள் ஆகியவற்றைக் கேட்பதே ஒரு சிறந்த வழிபாட்டு முறையாகக் கூறப் பட்டுள்ளது. தேவாரம் பாடிய மூவரும் முறையாக இசைக்கத்தக்க பாடல்களை, கேட்போர் மனதில் இறையுணர்வு ஊட்டும் வகையில் பண் அமைத்துப் பாடியுள்ளனர். இறைவனைப் பற்றிய இன்னிசைப் பாடல்களைக் கேட்பதே, இதயத்தை உருக்கி மனதுக்கு விருந்தாக அமையும். 

நல்லிசையின் வாயிலாக மக்களின் மனதைக் கவர்ந்து இறை சிந்தனையில் ஈடுபடுத்த முடியும் என்பதை தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. இசையில் தேர்ச்சி பெறாதவர்களும் இறைவனைப் பற்றிய பாடல்களைக் கேட்கும் போது உலகியலை மறந்து இறை அனுபவத்தில் ஈடுபடுகின்றனர். செவிப்புலனை இறைவழிபாட்டை நோக்கி ஈர்க்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.

நாசியின் மூலம் நறுமணங்களை நுகர்கிறோம். மனதில் இனிமையான உணர்வைத் தூண்டி மனதைத் தூய்மைப்படுத்தும் தன்மையுடையது நறுமணம். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் தூபம், ஊதுவத்தி, பன்னீர், சந்தனம், மலர்கள், வில்வம் போன்றவற்றின் இனிய மணம், இறையன்பினைத் தூண்டி நம்மை இறைவனை நோக்கி இட்டுச்செல்கிறது.

நாவுக்கு இன்பமளிப்பது இறைவன் நாமத்தை நவில்வதே. இறைவனின் உயர்வு, பெருமை, கருணைத் திறம், வடிவழகு ஆகியவற்றைப் போற்றிப் பாடுவதே நாவிற்கு இன்பம் பயப்ப தாக அமையும். எண் சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம். தலையாய உறுப்பாகிய தலை இறைவனை மட்டுமே வணங்கவேண்டும்.

ஐம்புலன்களையும் அடக்கி செயல்பட முடியாமல் செய்வதைவிட, அவற்றை இறைவனின் வடிவம், புகழ், பூசனைக்குரிய பொருட்களின் தன்மை ஆகியவற்றில் முழுமையாக ஈடுபடுத்தவும், வேறு வழிகளில் இப்புலன்கள் செல்லாதவாறு செயல்படப் பழகுதலும் பக்தி மார்க்கத்தின் முதற்படியாகும். மனம், புலன்கள் ஆகியவற்றின் வழியே வழிபடுவதால், இன்பப்பயனும் அதன் வழியே கிடைக்கிறது. இன்பப்பயனை அருள்வதோடு இறைவன் வீடுபேறும் அளித்தருள்கிறார்.

"நீ நாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே 
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே."

‪‎பாடல் விளக்கம்‬: 
நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர் வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

என்ற தேவாரப் பதிகம், புலன் வழிபாட்டின் சிறப்பையும் பலனையும் விளக்குகிறது.

‪‎நன்றி‬ : கே சுவர்ணா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 12 ஜூன், 2016

நலம் தரும் திருப்பதிகம் 05 திருக்கழிப்பாலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பால்வண்ணநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வேதநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 12 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் மீது திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் இவை. கணவர், பிள்ளைகள் தீய நண்பர்களால் வழி தவறி நடந்தால், அவர்கள் திருந்த இந்த திருப்பதிகத்தினை ஓதலாம்.


தில்லை நகரில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து மகிழ்ந்து பதிகங்கள் பல பாடிய அப்பர் பிரான், அருகிலிருந்த வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களுக்கும் சென்று பதிகங்கள் பாடி அருளினார். கழிப்பாலையில் பாடிய ஐந்து பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகத்தின் பாடல் தோறும், பிறவிப் பெருங்கடலைக் கடந்து செல்வதற்கு வழி வைத்த பெருமான் என்று இறைவனைப் புகழ்ந்து பாடி, அந்த வழியே சென்று உய்வினை அடையுமாறு நம்மைத் தூண்டுகின்றார். இவ்வாறு நாம் உய்வதற்கு வழி வகுத்த பெருமானுக்கு நாம் செய்யக் கூடிய கைம்மாறு, அந்த வழியில் செல்வது தான் என்றும் குறிப்பிடுகின்றார்.

பாடல் எண் : 01
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து 
வொள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார் 
தயக்கம் பல படைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று, தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார். தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டையோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது. அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை.


பாடல் எண் : 02
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறையார்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கை
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சுக் 
கறையார்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர். கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர். கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர், எம்பெருமானார். கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால், இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம்.


பாடல் எண் : 03
நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும் நேரிழையாளாய
ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை
ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த
களி வண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான நெகிழ்வும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 04
பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூணநூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி 
ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
மணம் மிகுந்த திருநீற்றினைத் தனது உடலில் பூசியவராகவும், திருநீற்றுப் பையினை உடையவராகவும், புலித் தோலை உடையவராகவும், கோபத்தால் பொங்கி படமெடுக்கும் பாம்பினை உடலில் அணிந்தவராகவும், பூணூல் அணிந்தவராகவும், உள்ள பெருமானை அவரது அடியார்கள் நறுமணம் மிகுந்த தாமரை மலர்களைக் கொண்டு அவரது திருவடிகளில் சாத்தி வழிபடுகின்றார்கள். திருவாரூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், ஆதிரை நட்சத்திர நாளினை மிகவும் விரும்புவரும். பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுபவரும், ஆகிய இறைவன் கழிப்பாலைத் தலத்தில் விருப்பத்துடன் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய அவர், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அழியும் தன்மை கொண்ட உடல்களுடன் இணைந்து வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, என்றும் நிலையான இன்பத்தினை அளிக்கும் முக்தி நிலைக்குத்   செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 05
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் 
எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய்
இறையானாய் எம் இறையே என்று நிற்கும் 
கண்ணானாய் காரானாய் பாருமானாய்
கழிப்பாலையுள் உறையும் கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
விருப்பத்துடன் பெருமானை வழிபாட்டு நிற்கும் தேவர்கள், எங்களது உலகமாக இருப்பவனே, வேதங்களாகவும் கீதங்களாகவும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பவனே, எண்ணானாவனே, எழுத்தானவனே, ஏழு கடல்களாக உள்ளவனே, எங்களுக்குத் தலைவனாக இருப்பவனே, எங்களுக்கு பற்றுக்கோடாக உள்ளவனே, மழை பொழியும் மேகம் போன்று கருணை உள்ளம் கொண்டவனே, எல்லா உலகங்களாக இருப்பவனே என்று சிவபெருமானை வாழ்த்துகின்றார்கள். இவ்வாறு வாழ்த்தப்படும் பெருமான் கழிப்பாலைத் தலத்தில் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய பெருமானாகிய அவர், மண்ணோடு மண்ணாக கலந்து அழியக்கூடிய நிலையில்லாத உடலினில் சிக்காமல் பிறப்பிறப்பு என்ற சங்கிலியிலிருந்து விடுபட்டு முக்தி உலகத்திற்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 06
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த 
விரி கதிரோன் எரி சுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும் 
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
கழிப்பாலை மேவிய கபாலப்பனார், வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்கினி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார். அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர். பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர். கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர். அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.


பாடல் எண் : 07
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதை மீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் 
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தினாலே 
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சியுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
என்றேனும் பிணத்தின் நிலையினை அடையப் போகும் நிலையற்ற உடலினை, ஓட்டைகள் நிறைந்த குடிசையாகிய உடலினை, நிலையானது என்று தவறாக கருதும் பேதை மாந்தர்களே, தசைப் பகுதிகள் தங்கும் மூவிலை சூலத்தினை உடையவரும், நீலகண்டராக விளங்குபவரும், எட்டு தோள்களைக் கொண்டவரும், எண்ணற்ற நற்குணங்களை உடையவரும் ஆகிய சிவபெருமான், தனது முடியினைக் கொண்டு திருவிளக்கு ஏற்றிய கணம்புல்லனின் செய்கையினை மிகவும் விரும்பி ஏற்று மகிழ்ந்தார். எனவே நீங்களும் உள்ளன்புடன் அவருக்குத் தொண்டுகள் செய்து அவருக்கு விருப்பமானவர்களாக மாறுவீர்களாக; அவர் காஞ்சித் தலத்திலும் கழிப்பாலைத் தலத்திலும் உறைகின்றார். நாற்றத்தினை மறைப்பதற்காக நறுமணப் பொருட்கள் பூசப்படும் உடலினை விட்டு ஆன்மாக்கள் நீங்கி முக்தி நிலை அடைவதற்கான வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 08
இயல்பாய ஈசனை எந்தை தந்தை 
என் சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான
தியம்பகன் திரிசூலத்து அன்ன கையன்
கயல் பாயும் கண்டல் சூழ் உண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
தனது இயல்பு பற்றி அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான் ஆவார்; பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்திற்குத் தலைவனாக விளங்கும் அவன், எனது சிந்தையில் விரும்பி உறைகின்றான்; மூன்று மூர்த்திகளாகத் திகழ்ந்து இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்யும் பெருமான், தூயவன், மூன்று கண்களை உடையவன், முத்தலை சூலத்தைத் தனது கையில் ஏந்தியவன். தாழை மரங்கள் வேலிகளாக அமைந்த கயல்கள் பாயும் நீர்நிலைகளை அதிகமாக உடைய  கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான், புலன்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்வதும் நிலையற்றதும் ஆகிய உடலினை விட்டு ஆன்மா முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 09
செற்றதோர் மனம் ஒழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் 
உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகம் எல்லாம் 
காட்டுவான் உத்தமன் தான் ஓதாது எல்லாம் 
கற்றதோர் நூலினன் களிறு செற்றான் 
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
தங்களது மனதினில் உள்ள பகைமை உணர்ச்சியினை அறவே நீக்கி, அன்போடு சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் உள்ளத்தில் உள்ள, காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய நோய்களை நீக்குபவன் சிவபெருமான்; மேலும் அத்தகைய அடியார்களை உலகம் போற்றும் உத்தமர்களாக மாற்றுவான்; அவன் தான் எதுவும் ஓதாமலே அனைத்து நூல்களையும் கற்றவனாக விளங்குகின்றான். அவன், யானை போன்று வலிமை கொண்டு நம்மை பல துன்பங்களிலும் ஆழ்த்தும் பாசங்களிலிருந்து இயல்பாகவே நீங்கியவன் ஆவான். கழிப்பாலைத் தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான்  நிலையில்லாத இந்த மாய உடலை விடுத்து முக்தி நெறி செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.


பாடல் எண் : 10
பொருது அலங்கல் நீண்முடியான் போர் அரக்கன்
புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாதாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக் 
கரதலங்கள் கதிர்முடி ஆறு அஞ்சினோடு
கால் விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பொருளுரை:
பல போர்களில் பங்கு கொண்டு வெற்றி மாலை சூடிய அரக்கன் இராவணன், தனது புட்பக விமானம் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், கயிலை மலை குறுக்கிட்டதைக் கண்டு கோபம் அடைந்தான்; நிலவுலகம் நடுங்குமாறு மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையின் அருகே சென்று, அதனை பெயர்த்து எடுக்க அவன் முயற்சி செய்த போது, சிறந்த அணிகலன்களை அணிந்தவளாகிய பார்வதி அன்னை அச்சம் கொண்டாள்; அன்னை அச்சம் அடைந்ததைக் கண்ட பெருமான், அரக்கனது பத்து தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு தனது கால் விரலை மலையில் ஊன்றினார். இத்தகைய வல்லமை பொருந்தியவராக விளங்குபவரும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமான் மீண்டும் மீண்டும் பிறந்து மாயமான உடலில் நமது ஆன்மா புகும் தன்மையை விடுத்து, முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 11 ஜூன், 2016

நலம் தரும் திருப்பதிகம் 04 திருக்காளத்தி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, ஸ்ரீ காளத்திநாதர், ஸ்ரீ குடுமித்தேவர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஞானப்பிரசுன்னாம்பிகை, ஸ்ரீ ஞானப்பூங்கோதை

திருமுறை : ஆறாம் திருமுறை 18 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


நாகதோஷம் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம் 


திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் காளஹஸ்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி திருமண யோகம் கைகூட இதைப் பாடலாம். இங்குள்ள அம்பிகை கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் ஒன்பதாம் பாடலில் உள்ளது. 

பாடல் எண் : 01
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்
வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்
மயானத்து மைந்தன் காண் மாசொன்று இல்லாப்
பொன் தூண் காண் மாமணி நல்குன்று ஒப்பான் காண்
பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.


பாடல் எண் : 02
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் 
எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே
முடிப்பான் காண் மூவுலகும் ஆயினான் காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசுபதன் காண்
பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்
கடித்தார் கமழ் கொன்றைக் கண்ணியான் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
என் வினைகளை அழிப்பவனாய், ஏகம்பத்தில் உறைபவனாய், அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய், எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய், மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய், பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய், பராய்த்துறை. பழனம், பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை, முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 03
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண் 
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் 
புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் 
தன்மைக் கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட 
கண நாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
நாராயணனாய், பிரமனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய், முறுக்குண்ட சடைமீது கங்கையை ஏற்ற தூயோனாய், எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய், நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய், மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 04
செற்றான் காண் என் வினையை தீயாடி காண்
திருவொற்றியூரான் காண் சிந்தை செய்வார்க்கு
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண்
உமையாள் நற்கொழுநன் காண் இமையோர் ஏத்தும்
சொற்றான் காண் சோற்றுத்துறை உளான் காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட 
கணநாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய், உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன்மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறைபவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 05
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் 
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழ் அண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய், மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய். தேவர்கள் தலை மேலானாய், ஏழுலகங்களையும் கடந்தவனாய், இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய், நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய், மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 06
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்
ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கினான் காண்
புரிசடைமேல் பாய் கங்கை பூரித்தான் காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு 
நளிர் சிரமொன்று ஏந்தியோர் நாணாய் அற்ற
கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய், ஏகம்பத்து விரும்பி உறைபவனாய், தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய், பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டையோட்டை ஏந்தி, நாணத்தைக் காப்பதொரு பொருளாகத் துறந்தார் அணியும் காவியாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான்.


பாடல் எண் : 07
கரியுருவு கண்டத்து எம் கண்ணுளான் காண் 
கண்டன் காண் வண்டுண்ட கொன்றையான் காண்
எரிபவள வண்ணன் காண் ஏகம்பன் காண்
எண்திசையும் தானாய குணத்தினான் காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண் 
தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்
கரியுரிவை போர்த்து உகந்த காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
நீலகண்டனாய், எமக்குக் காட்சி வழங்குபவனாய், அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய், ஒளிவீசும் பவள வண்ணனாய், ஏகம்பனாய், எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய், முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய். நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய், என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய், யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான்.


பாடல் எண் : 08
இல்லாடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண் 
இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்
வில்லாடி வேடனாய் ஓடினான் காண் 
வெண்ணூலும் சேர்ந்த அகலத்தான் காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவாளன் காண் 
மலைமகள் தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலி காண் 
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய், தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய், வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய். பூணூலும் பூண்ட மார்பினனாய், வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய், பார்வதி கணவனாய், மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென்முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 09
தேனப் பூ வண்டுண்ட கொன்றையான் காண்
திரு ஏகம்பத்தான் காண் தேனார்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்
நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண்
வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
நின்றான் காண் வண்டார் சோலைக்
கானப்பேரூரான் காண் கறைக் கண்டன் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திருஏகம்பத்தனாய், தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய், நமக்கு இனியவனாய், ஞானப் பிரகாசனாய், ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய், வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 10
இறையவன் காண் ஏழ் உலகும் ஆயினான் காண்
ஏழ் கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்
குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்
மறையுடைய வானோர் பெருமான் தான் காண்
மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்
கறையுடைய கண்டத்து எம் காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
யாவருக்கும் முதல்வனாய், ஏழுலகும், ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி, வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக்காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 11
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண் 
ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடினான் காண் 
பயின்ற நால்வேதத்தின் பண்பினான் காண்
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் 
அடியிணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்
கண்ணாரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய், தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய், அண்ணாமலையானாய், அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய், தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 1 ஜூன், 2016

திருஆதிரை திருப்பதிகம் - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்

திருமுறை : நான்காம் திருமுறை 21 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.


மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.

"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே"
- சம்பந்தர் தேவாரம்

"ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய 
சோதியன் சொல்பொருளாய்ச் சுருங்கா மறை நான்கினையும் 
ஓதியன் உம்பர் தம்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் 
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே."
- சுந்தரர் தேவாரம்

என இப்படி ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்கள்.....!

தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!. இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பாடல் எண் : 01
முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.


பாடல் எண் : 02
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.


பாடல் எண் : 03
வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.


பாடல் எண் : 04
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும் படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.


பாடல் எண் : 05
நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.


பாடல் எண் : 06
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.


பாடல் எண் : 07
செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.


பாடல் எண் : 08
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்லப்
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.


பாடல் எண் : 09
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும்.


பாடல் எண் : 10
பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பொருளுரை:
உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||