இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமாகறலீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுவன நாயகி
திருமுறை : மூன்றாம் திருமுறை 72 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
எலும்பு சம்பந்தமான நோய்கள் நீக்கும் திருப்பதிகம்
இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.
பாடல் எண் : 01
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண் விடையண்ணல் அடிசேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
பாடல் விளக்கம்:
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
பாடல் எண் : 02
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி ஆடல் கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள் புனலேந்து பெருமானடியை யேத்தவினை அகலுமிகவே.
பாடல் விளக்கம்:
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.
பாடல் எண் : 03
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர் சுடர் நாகமசையா அழகிதாப்
பாலையன நீறுபுனைவான் அடியையேத்த வினை பறையும் உடனே.
பாடல் விளக்கம்:
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும்.
பாடல் எண் : 04
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனலாடி மகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழிபாடு நுகரா எழுமினே.
பாடல் விளக்கம்:
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.
பாடல் எண் : 05
துஞ்சுநறு நீலம் இருள்னீங்க ஒளிதோன்று மதுவார் கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள் நடமாட மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்து மகிழ்வான் ஓர்மழுவாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன் அடியாரை நலியா வினைகளே.
பாடல் விளக்கம்:
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள் நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா.
பாடல் எண் : 06
மன்னும் மறையோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர் வானுலகம் ஏறல் எளிதே.
பாடல் விளக்கம்:
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ்சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர்.
பாடல் எண் : 07
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலுளான் எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே.
பாடல் விளக்கம்:
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும்.
பாடல் எண் : 08
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில போகும் உடனே.
பாடல் விளக்கம்:
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும்.
பாடல் எண் : 09
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்ற மதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிரல் ஊன்றிய இராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினையாயினவும் அகல்வது எளிதே.
பாடல் விளக்கம்:
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும்.
பாடல் எண் : 10
காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரியாகி உயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும் விடையூர்தி உடையடிகள் அடியாரை அடையா வினைகளே.
பாடல் விளக்கம்:
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.
பாடல் எண் : 11
கடைகொள் நெடுமாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனையடி கூடு சம்பந்தன் உரையால்
மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலுளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே.
பாடல் விளக்கம்:
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக