திருமுறை : ஐந்தாம் திருமுறை 90 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
"எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும்." பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான்.
திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் வினைகளுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார்.
இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்.
பாடல் எண் : 01
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
பாடல் விளக்கம்:
எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது.
பாடல் எண் : 02
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
பாடல் விளக்கம்:
நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.
பாடல் எண் : 03
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.
பாடல் விளக்கம்:
சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்; அவர்கள் சிவபிரானுக்கு மீளா அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகள் உட்குழி இல்லாத காரணத்தால் அவர்கள் சிவபிரானின் நாமத்தை கேட்டிலர் போலும்; அவர்களின் வாழ்க்கை .எந்த பயனையும் அடையாமல் வீணாக கழிகின்றது.
பாடல் எண் : 04
நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவன் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனி பண்டமே.
பாடல் விளக்கம்:
நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத் தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சி செய்யவேண்டும்.
பாடல் எண் : 05
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே.
பாடல் விளக்கம்:
சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.
பாடல் எண் : 06
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீலீர் மனம் என்கொல் புகாததே.
பாடல் விளக்கம்:
சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும் சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை), அவனை வழிபடுவதற்கு உரிய சைவநெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்.
பாடல் எண் : 07
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.
பாடல் விளக்கம்:
தன்னை வாழ்த்துவதற்காக வாயினையும், தன்னை நினைப்பதற்காக நெஞ்சத்தினையும், வணங்கி வழிபட தலையையும் தந்த தலைவனான சிவபிரானை, நல்ல நறுமணம் மிக்க சிறந்த மலர்கள் கொண்டு வழிபடாமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து விட்டேனே.
பாடல் எண் : 08
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே.
பாடல் விளக்கம்:
சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்.
பாடல் எண் : 09
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.
பாடல் விளக்கம்:
உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில் புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான், பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நாணி அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான்.
பாடல் எண் : 10
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.
பாடல் விளக்கம்:
சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.
ஏழு நாட்கள் சென்ற பின்னர் சமணர்களை அழைத்த மன்னவன், நீற்றறையைத் திறந்து பார்க்குமாறு உரைத்தான், சிவானந்தப் பெருக்கினால் திளைத்து பதிகம் பாடிக் கொண்டு இருந்த நாவுக்கரசு அடிகள், நீற்றறையில் இருந்தாலும் தனது உடலுக்கு எந்த குறையுமின்றி, மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்ட சமணர்கள், என்ன அதிசயம் என்று முதலில் வியப்படைந்து கூறினார்கள். பின்னர் தங்களது எதிரியான நாவுக்கரசர் இறவாது பிழைத்து இருந்தது அவர் சமண சமயத்தைத் சார்ந்து இருந்தபோது கற்ற மந்திர சாதகமாகும் என்று தங்களை சமாதானம் செய்து கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஆராயத் தொடங்கினார்கள்.
கடம்பூர் கரக்கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப. சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு, இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது.
இந்தப் பதிகத்தின் பல பாடல்களில் அப்பர் பிரான், சிவபிரானை வழிபடாதவர்களை சாடியும் இழித்தும் கூறுவதை நாம் உணரலாம். சமணர்களின் வஞ்சனையால் நீற்றறையில் இடப்பட்டார் என்பதால் அவர்கள் மீது அவருக்கு ஏற்பட்ட கோபம் மிகவும் இயற்கையே.. எனவே அத்தகைய குறிப்புகள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பின்னர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்ட போது இத்தகைய குறிப்புகள் (சுண்ண வெண் சந்தனச் சாந்தும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகங்கள்) காணப்படுவதில்லை என்பதும் நாம் அறியத் தக்கது. சிவபிரான் தன்னை எப்படியும் மீட்பார் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்ததால், சமணர்கள் மீது அவருக்கு கோபம் ஏற்படவில்லை போலும். தனக்கு வரும் துன்பங்களையும் இன்பங்களையும் ஒரு சேர நோக்கும் கண்ணோட்டம் கொண்டவராக அவர் திகழ்வதை நாம் உணரலாம்.
நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||