வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

விநாயகர் அகவல் - ஔவையார் அருளிச் செய்தவை

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரும், சிவபெருமானின் தோழராகவும் விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்று, "அயிராவணம்" என்னும் யானையை ஈசன் அனுப்பி வைத்தார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார். இதை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோழரான சேரமான் பெருமான், தானும் கயிலையை அடைய வேண்டும் என்று எண்ணினார். இதையடுத்து தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரரின் அயிராவண யானையைச் சுற்றி வலம் வந்து தானும் கயிலாயம் புறப்பட்டார். இருவரும் வானில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழே பார்க்கையில், திருக்கோவிலூர் சிவதலத்தில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சுந்தரரும், சேரமானும் "அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?" எனக் கேட்டனர். திருக்கயிலாய ஈசனை தரிசிக்கும் வாய்ப்புக்காக பலரும் தவமாய் தவமிருக்கும் நிலையில், வாய்ப்பை தவற விட யாருக்குத்தான் மனம் வரும்? ஆனாலும் உடனடியாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை என்பதும் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.


அவ்வை பாட்டி "நானும் வருகிறேன்" என்று கூறிவிட்டு விநாயகர் பூஜையை பதற்றத்துடன் விரைவாக பண்ணி முடிக்கத் திட்டமிட்டு விரைவாக பூஜைகளை செய்தார். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. அது வேறு யாருடையதும் அல்ல.. பெரிய யானை கணபதியே அசரீரியாக தன் பக்தையான அவ்வையிடம் பேசினார்.

"அவ்வையே! நீ எனது பூஜையை சற்று மெதுவாகச் செய். கவலை வேண்டாம். பூஜை முடிந்ததும் சுந்தரரும், சேரமானும் திருக்கயிலை மலை சென்றடைவதற்குள்ளாகவே, உன்னை அவ்விடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்" என்று கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வையார், "சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட..." எனத் தொடங்கும் "விநாயகர் அகவல்" பாடி திருக்கோவிலூர் பெரிய யானை கணபதியை நிதானமாக பூஜித்தார்.

என்ன ஆச்சரியம்! அவ்வையார் "விநாயகர் அகவல்" பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வை பாட்டியை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிற்பாடு தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், "பெரிய யானை கணபதி" என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர். இவர் பைரவ சொரூபமெடுத்து அந்தகாசூரனை வதைத்த தலம் இதுவாகும். அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. ஈசன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ஈசனின் உடனுறை சக்தியாக பெரியநாயகி அம்மன் அருள்புரிந்து வருகிறாள்.

கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும். ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது. இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும். பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. "துர்க்கா சப்த ஸ்லோகி" என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் பலவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்கள் அருள் நிறைந்தவையாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சன்னிதியில், அவ்வையார் பாடிய "விநாயகர் அகவல்" பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும். திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

விநாயகர் அகவல்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் 

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் 

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன், நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயகா"

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||