செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை

நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" என போற்றப்படுகிறது. "அட்சயம்" என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பயனை தரும் என்பது வேத வாக்கு.


அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில் தான் பெற்றான். 

மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம் பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. ஸ்ரீ லட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர் பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்.

கவுரவர்களுடன் சூதாடியதன் காரணமாக தனது நாடு, சொத்து, தம்பிகள் அனைவரையும் தர்மர் இழந்தார். பின்னர் தனது மனைவி திரவுபதியையும் பந்தயப் பொருளாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து திரவுபதியை சபைக்கு இழுத்து வரச் சொன்ன துரியோதனன், அவளை துகிலுரிக்க உத்தரவிட்டான். அதன்படி துச்சாதனன் துகிலுரிக்க முற்பட்டான். திரவுபதி அபயம் வேண்டி சபையோரிடம் வேண்டினாள். ஆனால் அந்த சபையில் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் இருந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கண்ணனை நினைத்து கைகூப்பி வேண்டினாள். 

அப்போது கிருஷ்ணர் தன் கையை உயர்த்தி, "அட்சய" என்றார். அவரது கையில் இருந்து புறப்பட்ட ஆடை, திரவுபதியின் உடலை சுற்றி வளர்ந்து கொண்டே இருந்தது. துச்சாதனன், திரவுபதியின் புடவையை இழுத்து, இழுத்து கைசோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான். திரவுபதியின் மானத்தை கிருஷ்ண பகவான் காப்பாற்றிய தினம், "அட்சய திருதியை" ஆகும்.

கிருஷ்ணனின் பால்ய நண்பர் குசேலன். இவர் வறுமையில் வாடிய நிலையில், கிருஷ்ணரை சந்திப்பதற்காகச் சென்றார். அவரை கண்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொண்டு சென்ற அவலில் ஒருபிடியை எடுத்து வாயில் போட்டு கொண்டு "அட்சயம்" என உச்சரித்தார். மறுவினாடி குசேலன் வீட்டில் செல்வம் குவிந்தது. குழந்தைகளுக்கு நல்ல உணவு, ஆடைகள், ஆபரணங்கள் கிடைத்தன. குடிசை வீடு, பெரிய பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாள் "அட்சய திருதியை" தினமாகும்.

நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசத்தின்போது சூரியனை வேண்டி அட்சய பாத்திரம் ஒன்றை பெற்றனர். அந்தப் பாத்திரத்தில் இருந்து உணவைப் பெற்று பாத்திரத்தை கழுவி விட்டால் மீண்டும் உணவு பெற முடியாது. மறுநாள் தான் அதில் இருந்து உணவைப் பெற முடியும்.

இந்த நிலையில் பாண்டவர்களை துன்புறுத்த துரியோதனன் திட்டமிட்டான். இதற்காக அடிக்கடி கோபம் கொள்ளும் துர்வாச முனிவரை அழைத்து உபசரித்து பணிவிடைகள் செய்தான். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, "காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் அருள்புரிய வேண்டும்'" என கேட்டுக்கொண்டான். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார்.

அப்போது பாண்டவர்கள் உணவருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டிருந்தனர். இதனால் கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரிடம், "ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்" எனக் கூறினர். தங்கள் தர்ம சங்கடமான நிலையை நினைத்து திரவுபதி, கண்ணனை வேண்டினாள். பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி கூற, அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை "அட்சய" எனக்கூறி தடவினார். அந்த நேரத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது. அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு கண்ணன், பாண்டவர்களுக்கு அருள்புரிந்த தினமும் அட்சய திருதியை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. 

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். "மகிழ்வித்து மகிழ்" என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||