பாடல் எண் : 11
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன்மணி மலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே.
பொருளுரை:
தீவினையேனது மனத்தின்கண் சுரக்கின்ற தேனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! திருவெண்ணீறு பூசப்பட்டு ஒளியைச் செய்கின்ற பொன்போலும் திருமேனியையுடைய பெருந்தன்மையனே! ஐம்பொறிகள் பகைத்து என்னை வஞ்சித்தலால் நான் உனது வீரக் கழலணிந்த தாமரை மலரை ஒத்த திருவடியை நீங்கினேன்; அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 12
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடுந்தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
கடுந்தகையேன் உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே.
பொருளுரை:
பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே! நீ, என்னை அடிமை கொள்ளவும்; நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 13
கடலினுள் நாய் நக்கியாங்கு உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடலில் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே.
பொருளுரை:
உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டின் கண்ணே நிலைபெறுகின்ற, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 14
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே.
பொருளுரை:
விரும்புகின்ற அடியாருடைய உள்ளத்தில் நிலைத்து இருப்பவனே! நிலைபெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நீர்ப்பெருக்கின் நடுவில் இருந்தே ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நா உலர்ந்து போனாற்போல, உன்னருள் பெற்றிருந்தே, துன்பத்தினின்றும் இப்பொழுதும் நீங்குவதற்கு ஆற்றல் இல்லாது இருக்கின்ற என்னை விட்டு விடுவாயோ? வஞ்சகச் செயலுடையேனாகிய எனக்கு இதுகாறும் கண்டறியாத பேரின்பத்தைத் தந்தருள்க.
பாடல் எண் : 15
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே.
பொருளுரை:
உண்மையான ஒளிகட்கெல்லாம், ஒளியைத் தந்த பொலிவாகிய திருவடியையுடைய திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்கு எளிதில் கிடைத்த எனக்குத் தந்தையும், தலைவனும் ஆகியவனே! என்னை அடிமையாகவுடைய என் ஞானத் தந்தையே! மகிழ்வோடு கூடிய மனத்தோடு, உன் திருவடியைக் காணப்பெற்றும், நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு உலகப் பற்றிலிருந்தும் வெளிவாராத என்னை, விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 16
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே.
பொருளுரை:
உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகராவாய், நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய். எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய். அடியேனை, "அப்பா! பயப்படாதே" என்று சொல்லுவாரில்லாமல் நின்று இளைத்துத் திரிந்தேன்; ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?.
பாடல் எண் : 17
பொருளே தமியேன் புகலிடமே நின்புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இகபரமாகி இருந்தவனே.
பொருளுரை:
உண்மை அன்பர் விழுங்கும் அருட்கனியே! அழகிய சோலை சூழ்ந்த, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! இருளாய் இருப்பவனே! ஒளியாய் இருப்பவனே! இம்மை மறுமைகளாகி இருந்தவனே! உண்மைப் பொருளானவனே! தனியனாகிய எனக்குச் சரண் புகும் இடமே! உன் புகழை நிந்திப்பவர்கட்கு அச்சத் துக்கும் காரணமாய் இருப்பவனே! என்னை விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 18
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.
பொருளுரை:
மிகுதியாக நஞ்சை அமுதமாக உண்டவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பிறவியாகிய நோயிற் சிக்கி முடங்கிக் கிடந்தவர்க்கு மருந்தாய் இருப்பவனே! எழுந்தருளியிருந்து அடியேனை ஆண்டு கொள்வாய்; விற்றுக் கொள்வாய்; ஒற்றி வைப்பாய்; என்ற இவை போன்ற செயல்களில் என்னை உனக்கு உரியவனாகக் கொள்வதல்லது, புதிய அடியேனாகிய என்னை விட்டு விடுவாயோ?.
பாடல் எண் : 19
மடங்க என் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக்கொளுவும்
விடங்க என்தன்னை விடுதி கண்டாய் என் பிறவியைவே
ரொடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே.
பொருளுரை:
திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கொடிய யானையாகிய மலையினை உரித்து வஞ்சிக்கொடி போன்ற உமையம்மையை அஞ்சுவித்தவனே! எனது கொடிய வினையாகிய காட்டினை அழியும்படி உனது நிலைபெற்ற அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! என்னை விட்டு விடுவாயோ? எனது பிறவியாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட்கொண்டருள்வாயாக.
பாடல் எண் : 20
கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே.
பொருளுரை:
தேவர்களும் அணுகக் கூடாத மேலிடத்து இருப்பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஆகாயமே! பூமியே! நெருப்பு, காற்று என்பவைகளோடு நீரும் ஆனவனே! இளமை நலமுடையோனே! கொழு கொம்பில்லாத கொடியைப்போலச் சுழன்றேன்; இவ்வாறு வருந்துகின்ற என்னை விட்டு விடுவாயோ?.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||