திங்கள், 5 டிசம்பர், 2016

சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். "சோமன்" என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.


சிவ விரதங்களுள் சோமவார விரதமும் மிக மேலானதாகும். சந்திரனுக்குரிய தினம் திங்கள். எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. கிருதயுகம் தோன்றியதும் சந்திரன் சிவபெருமானின் முடியில் அமரும் பேற்றினைப் பெற்றதும் கார்த்திகை சோமவாரத்திலே தான். எனவே இம்மாதத்து திங்கட்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது.*

சிவாலயங்களில் சங்காபிஷேகம் நிகழ்த்தப்படும் நன்னாள். சங்குகளைக் கொண்டு கார்த்திகை மாதத்தின் முதல் அல்லது மூன்றாவது அல்லது கடைசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு நடந்து வரும் வைபவமாகும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.


இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்று தான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.


அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகமும் ஆராதனைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. சோமவாரத்தில் நிகழும் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்கள் தீரும் என்பர் - ஆன்றோர். இல்லறத்தில் கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் விளங்கவும், இல்லத்தில் பிள்ளைகளுடன் சுற்றம் சூழ தீர்க்காயுளுடனும் நல்வாழ்வு வாழவும் இந்த சங்காபிஷேக வழிபாட்டினைச் செய்யலாம்.*

சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே உணவு எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இப்படியாக விரதம் செய்பவர்கள் கயிலை மலையானின் அருள் பெற்று நலம் சேர்ப்பர். சோமவார விரதம் செய்தவர்கள் அடைந்த பலன்களை எடுத்துக் கூறும் விதமான புராணங்களில் சொல்லப்பட்டுள்ள அருட்கதைகளை இந்த விரதம் ஏற்பவர்கள் படித்துவிட்டுச் சிவனை வணங்குதல் நலம் தரும்.


திங்கட் கிழமைக்கு உரிய சந்திரன் மனோகாரகன் எனப்படுபவன். நமக்கு விளையும் நன்மைக்கும் தீமைக்கும் மனமே மூல காரணம். மனம் கொண்டு விளைந்த அவலங்களுக்கு வருந்தி, அவற்றிலிருந்து - நாம் விலகுவதற்கே வழிபாடு, சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை*.

"சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்"


என்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோம்.

இந்த நாளில் மனம் ஒன்றி வழிபடும் எவரும் நல்வழிப்படுவர் என்பதே திருக்குறிப்பு!.. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!..."

நன்றியுடன் உங்கள் ஸ்ரீ தில்லை இளந்தென்றல் 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||