"உதவி செய்தவர்க்குத் திரும்ப உதவி செய்தல் கைம்மாறு கொடுத்தலாகும்."
ஒருவர் செய்த உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்வது கைம்மாறு கொடுப்பதாகும். பிரதி உபகாரம் செய்ய இயலாதவன் பிறர் செய்த நன்றியை மறவாதிருப்பது கைம்மாறு கொடுப்பதற்கு ஒப்பாகும். பரமாத்மனுக்குக் கைம்மாறு கொடுக்க ஜீவாத்மனுக்கு இயலாது.
பாடல் எண் : 01
இருகை யானையை ஒத்து இருந்து என்னுளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.
பொருளுரை:
யானை உடலில் பெரியது எனினும் அது பரஞானத்துக்குத் தகுதியற்றது. என் அறிவுக்கு அறிவாயுள்ள மூலப்பொருளைக் காண எனக்கு இயலவில்லை யாதலால் நான் இரண்டு கைகளையுடைய யானையைப் போன்றவன். இந்திரிய சுகம் என்னும் பெயர் பெற்றுள்ள துன்பத்தையே நான் அனுபவித்து வருகிறேன். தேவாதி தேவா, பேரானந்தத்தைப் பெற வாவென்று ஆக்ஞாபித்தாய். நானோ அதற்குத் தகுதியற்றவனாய்ச் சிற்றின் பத்திலேயே உழல்கின்றேன்.
பாடல் எண் : 02
உண்டொர் ஒண்பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர் ஆண் அலி என்றறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே.
பொருளுரை:
பரம்பொருள் ஒன்று உண்டென்று தங்கள் அந்தக் கரணத்தைக் கொண்டு யூகிப்பவர்கள் உன்னைப் பெண் என்றோ, ஆண் என்றோ, அலி யென்றோ அறிந்து கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர். மற்று உன் தொண்டனாகிய எனக்கு உன்னை உள்ளவாறு காட்டியருளினாய். உன்னைக் கண்ட பின்பும் காணாதவனுடைய நிலையில் இருக்கிறேன். இது என்ன மயக்கம்.
பாடல் எண் : 03
மேலை வானவரும் அறியாததோர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்துபோம்
காலமே உனை என்றுகொல் காண்பதே.
பொருளுரை:
மேன்மையுடைய தேவர்களும் அறிய காட்சிக்கு எட்டாத திருவுருவத்தை உடைய நடராஜப் பெருமானே! நீ என்னை ஆட்கொண்டு உள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் சாட்சியாய் இருக்கும் கால சொரூபம் நீ. உன்னை நான் எப்போது காண்பேன்?.
பாடல் எண் : 04
காணலாம் பரமேகட்கு இறந்ததோர்
வாள் நிலாப் பொருளே இங்கொர் பார்ப்பெனப்
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனைப்
பூணுமாறு அறியேன் புலன் போற்றியே.
பொருளுரை:
இறைவா! ஊனக் கண்ணால் அன்றி, ஞானக் கண்ணாலேயே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்க முடியாது இருப்பது போன்று பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே அதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!
பாடல் எண் : 05
போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரைத் தாளுறும்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே.
பொருளுரை:
இறைவா! உன்னை வாயால் துதித்தும் உடம்பால் அங்கப் பிரதட்சணம் செய்தும் பல விதங்களில் புகழ்ந்துரைத்தும் பக்தியில் நிலை நின்று அந்த உறுதியான பக்தியின் வலிமையைக் கொண்டு உன்னை அழைக்கின்றேன் இல்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடியை அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கிறது.
பாடல் எண் : 06
கொள்ளுங்கில் எனை அன்பரில் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளும் கீழ் உளும் மேல் உளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே.
பொருளுரை:
எள்ளில் எண்ணெய் போல் என் தந்தை எல்லாப் பொருள்களின் நடுவிலும் கீழும் மேலும் எங்கும் வியாபித்துள்ளான். தேனும் அதை நுகரும் வண்டும் நீங்காத கொன்றை மலர் மாலையை அவன் அணிந்திருக்கிறான். மெய்யன்பரைக் கூவி அழைத்து ஆட்கொள்ளுவது போன்ற, ஆற்றல் இல்லாத என்னையும் அவன் அழைத்துக் கொள்வான்.
பாடல் எண் : 07
எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே.
பொருளுரை:
சிவன், எனக்குத் தந்தையும் தாயும் தலைவனும் ஆனவன். அவன் உயிர்கள் அனைத்துக்கும் தந்தையும் தாயும் தலைவனும் ஆகின்றான். மற்றுத் தனக்கு அம்முறை உரிமை ஒன்றும் இல்லாதவன். சொல்லால் மட்டும் அன்றி மனத்தாலும் யாராலும் அறிய முடியாத ஞானநற்செல்வத்தை உடையவன். அவனை நான் அறிதற்கு முன்பே அவன் என் உள்ளத்தில் குடிகொண்டு உள்ளான்.
பாடல் எண் : 08
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழுப்
புல் வரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே.
பொருளுரை:
செல்வர்களுக்கு இடையிலும் வறியோர்களுக்கு இடையிலும் தேவர்களுக்கு இடையிலும் புழுப்போன்ற அற்ப உயிர்களுக்கு இடையிலும் புல் போன்ற தாவரங்களுக்கு இடையிலும் சிவனருள் பாகுபாடு இன்றி நிறைந்து இருக்கிறது. அந்த அகண்ட சொரூபத்தைக் காணப்பெற்ற பின்பும் அப்பெரு நிலையினின்றும் வழுவியவன் ஆனேன். முற்றிலும் மலபரிபாகம் அடையாததே இந்த துன்பநிலைக்குக் காரணம் ஆகும்.
பாடல் எண் : 09
கட்டு அறுத்து எனை ஆண்டு கண்ணார நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே..
பொருளுரை:
அஷ்டமூர்த்தி தத்துவத்தையும் அர்த்த நாரீசுவர தத்துவத்தையும் அறிந்து கொõள்ளாத எனது பாசத்தளையைக் களைந்து என்னை ஆட்கொண்டாய். அது மட்டுமன்று. திருநீறு பூசிய உன் மெய்யன்பர்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய். எட்டு என்னும் சொல் அஷ்டமூர்த்தியைக் குறிக்கிறது. நிலம்,நீர்,நெருப்பு,வாயு,ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம். ஈற்றிலுள்ள மூன்றுக்குப்பதில் சூரியன், சந்திரன், உயிர் என்றும் கூறுவர். இரண்டு என்பது சிவனும் சக்தியும் சேர்ந்த அர்த்த நாரீசுவர வடிவம். உடல் அம்பிகையின் சொரூபம்; உயிர் சிவ சொரூபம். இவை இரண்டும் பிரிந்தால் வாழ்வு நடைபெறாது.
பாடல் எண் : 10
அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டதும்
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே.
பொருளுரை:
பேரறிவு சொரூபியே! அமிர்த சொரூபியே! அற்பனாகிய என்னை ஒரு ஞானியாக்குதற் பொருட்டு அன்றோ, நீ, என்னை ஆட்கொண்டது. நீ ஆட்கொண்டதற்கு முன்பு நான் அறிவிலியாய் இருந்தது வெளிப்படை. இன்று நான் ஞானியோ அல்லனோ. எனக்கு விளங்கவில்லை. என் நிலைமையைச் சற்றே கூர்ந்து தெளிவு செய்வாயாக!.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||