சனி, 13 ஆகஸ்ட், 2016

கந்தர் அனுபூதி 41 - 51

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி



பாடல் எண் : 41
சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும் நாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே.

பொருளுரை‬:
வெற்றியைத் தரவல்ல வேலாயுதத்தை உடையவரே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனனே! யோக மூர்த்தியே! சிவபெருமானுக்கு ஞானோபதேசம் செய்த குருமூர்த்தியே! யமன் அடியேனின் உயிரைக் கலக்கிப் பிடிக்க வரும் அந்நாளில் அடியேன் இறவாது தேவரீரின் திருவடிகளை அடியேன் சேருமாறு காப்பாற்றியருள்வீராக!.


பாடல் எண் : 42
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே.

பொருளுரை‬:
தியானிக்கப்படும் பொருளை, பசு, பாசம் பற்றிய அறிவைக் கொண்டு தியானிக்காமல், பதிஞானத்தைத் தியானித்து அறிகின்ற வழியைத் தனிச் சிறப்புமிக்க வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்தருளியவுடனே உலகத்தாருடன் கொண்டொழுகும் நெருங்கிய உறவுகள், வாக்கு, மனம், அறிவு ஆகியவற்றோடு அறியாமையும் நீங்கி ஒழிந்தனவே!.


பாடல் எண் : 43
தூசா மணியும் துகிலும் புணைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

பொருளுரை‬:
ஆடை அலங்காரமாக முத்து, மரகதம் ஆகிய மணி வகைகளையும் ஆடையையும் அணியப்பெற்றவரும் வேடர் குலத்தவருமான வள்ளியம்மையாரின் அன்பரே! திருமுருகப்பெருமானே! தேவரீரின் அன்பும் அருளும் அடியேனுக்குக் கிடைத்த நற்பெற்றால், அடியேனின் ஆசை என்னும் விலங்கு பொடியாகிய பின்னர் மவுனம் என்னும் அனுபவ ஞானம் பிறந்ததுவே!.


பாடல் எண் : 44
சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே.

பொருளுரை‬:
பகைவர்களைத் தொளைத்து அழிக்கும் ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானே! வீடுபேற்றின் நிலையிலும், விண்ணோர்களின் தலைமீதும் நான்கு வேதங்களிலும் கொடிய காட்டிடையேயும் தினைப்புனத்திலும் விளங்கும் வீரக்கழல்கள் அணியப்பெற்றத் தேவரீரின் திருவடிகளை அடியேன் சிரசின்மீது அடைக்கலமாகச் சூட்டிக் கொள்ளுமாறு தேவரீர் தந்தருளிய கருணையை அடியேன் எடுத்துச் சொல்லக்கூடுமோ?.


பாடல் எண் : 45
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.

பொருளுரை‬:
குருமூர்த்தியே! குமாரப்பெருமானே! குலிசாயுதத்தை உடையவனே! பிணிமுகம் என்னும் யானையை வாகனமாகக் கொண்டவனே! சிவயோகத்தை அருளும் கருணா மூர்த்தியே! தாம் கற்ற கல்வியறிவை பிறருக்குப் பயன்படுமாறு எடுத்துச் சொல்லாது வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் சென்று அடியேன் இரந்து கேளாவண்ணம் தேவரீர் உண்மை ஞானப்பொருளை ஈந்து அருள்புரிவீரோ?.


பாடல் எண் : 46
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

பொருளுரை‬:
கந்தப் பெருமானே! ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார மூர்த்தியே! வேத மூர்த்தியே! தேவரீர் அடியேனின் தாயும், அடியேனுக்கு அருள்புரியும் தந்தையும் ஆவீர்! அடியேனின் மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கி அடியேனை ஆண்டருள்வீராக!.


பாடல் எண் : 47
ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரிசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

பொருளுரை‬:
சினத்துடன் ஆரவாரம் செய்து கொண்டு வந்த சூரரைக் கொன்று தேவர்களுக்குச் சொந்தமான தேவலோகத்தை தேவர்கள் மனம் களிக்கும்படி அவர்களுக்கு அளித்தவனே. ஆறு வழிகளான ஆதார கமலங்களையும் தாண்டி அதற்கும் மேலே இருக்கும் ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரையில் தங்கும் பேற்றைப் பெறுவதற்கு அரிய பேறு எனக்குக் கிடைக்குமா?.


பாடல் எண் : 48
அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

பொருளுரை‬:
ஜீவபோதம் கடந்த நிலையில் நின்று சிவபோதத்தால் தேவரீரை அறியும் ஞானியரின் ஞானநிலையில் பிரிவு ஒன்றும் இல்லாது நிற்கும் திருமுருகப்பெருமான் அன்றோ தேவரீர்! உலக பந்தமான நெருங்கிய உறவுகள் அற்றுப் போகும் நிலையை எய்துவதால் அறியாமை என்னும் இருள் சிதைவுற்று அழியுமாறு மனக்கலக்கம் என்னும் மயக்கத்தை வென்ற ஞானியர்களோடு பொருந்தும் வேலாயுதக் கடவுளே!.


பாடல் எண் : 49
தன்னம் தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.

பொருளுரை‬:
ஒளி வீசும் கதிர்களையுடைய வேலாயுத்தை ஏந்திய வேறுபாடுடைய திருமுருகப்பெருமானே! தேவரீரை நினைத்துத் தியானிப்பவர்களின் துக்கங்களை நீக்கும் கருணை விளங்கும் பேரொளியே! ஒரு சார்பும் இல்லாது தனித்து விளங்கும் பரம்பொருள் இத்தன்மைத்து என்று அறியுமாறு மற்றவருக்கு அடியேன் சொல்லவியலுமோ?.


பாடல் எண் : 50
மதிகெட்டற வாடி மயங்கி அறக்
கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.

பொருளுரை‬:
கங்கை நதிக்கு மைந்தரே! ஞானசுகத்தின் தலைவரே! திதி என்பவளின் புத்திரர்களாகிய அசுரர்களின் பெருமையைக் கெடுத்து அழித்த அதிவீரரே! அறிவு குலைந்து மிகவும் உள்ளம் சோர்வுற்று மயங்கி நற்கதி பெறும்வழியை இழந்து வீணாகக் கெட்டழிதல் அடியேனின் தலைவிதியோ?.


பாடல் எண் : 51
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

பொருளுரை‬:
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!.


|| ----------- கந்தர் அனுபூதி முற்றிட்டு ----------- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||