இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ பெருங்கேடிலியப்பர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கருணாம்பிகை, ஸ்ரீ பெருங்கருணை நாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 092 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
துன்பங்களை நாசம் செய்தருளும் பெருங்கேடிலியப்பராக அவிநாசியப்பர் என்னும் திருநாமத்தோடு ஐயனும், அரவணைத்துப் பாதுகாக்கும் பெருங்கருணை நாயகியாக கருணாம்பிகை என்னும் திருநாமத்தோடு அம்மையும் காட்சி கொடுக்கும் திருத்தலமான அவிநாசியில், பிள்ளையை இழந்து தவித்த பெற்றோரின் துயரத்தைப் போக்கி, அவர்களுக்குப் பிள்ளையை மீட்டுத் தந்த அற்புதத்தை நிகழ்த்திய பாடலும் இதுவேயாகும்.
"உன்னைப் போற்றிப் பேசுபவர்களுடைய போற்றுதல்களில் உறைபவனே, என்றும் உன்னை நினைப்பவர்களின் தலைமீது வசிப்பவனே, படமெடுத்தாடும் பாம்பை இடையில் அணிந்தவனே, முதலும் முடிவும் ஆனவனே, முல்லை நிலங்களும் சோலைகளும் சூழ்ந்த திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் அவிநாசித் திருக்கோயிலில் அவிநாசியப்பராக எழுந்தருளியவனே, முதலையையும் யமனையும் குளக்கரையில் விழுங்கிய பிள்ளையைத் தரச் சொல்லு" என்று இரக்கமும் இறைஞ்சுதலும் சினமும் சீற்றமும் கலந்ததாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருப்பாட்டும் இது.
சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரநாட்டுக்குப் புறப்பட்டார். வழியில் கொங்கு நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டே சென்றார். திருப்புக்கொளியூர் என்று அந்நாட்களில் அழைக்கப்பெற்ற அவிநாசியை அவர் அடைந்து ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பக்கம் இனிய மங்கலவொலி கேட்டது; மற்றொரு பக்கம் அழுகுரல் கேட்டது. இரண்டு ஒலிகளும் கலந்தொலிக்க, சுந்தரரும் அவை குறித்து விசாரித்தார். அந்த வீதியில் கங்காதரன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். நெடுநாட்கள் பிள்ளையின்றிப் பின்னர் மகன் பிறக்க, அவனுக்கு அவிநாசி லிங்கம் என்றே பெயர் சூட்டி வளர்த்தனர்.
அந்த பாலகனுக்கு ஐந்து வயதாகையில் அதே வயதுக்குரிய எதிர்வீட்டுப் பிள்ளையோடு ஆற்றுப்பகுதிக்கு விளையாடச் சென்றான். சிறிது நேரத்துக்குப் பின், ஆற்று முதலை அவிநாசி லிங்கத்தைப் பிடித்து விழுங்கிவிட்டது. எதிர்வீட்டுச் சிறுவன் அழுது கொண்டே வர, பெரியவர்கள் ஓடிப்போய் ஆற்றுப் பகுதியில் தேட, கரையிலிருந்து பார்க்கும்போது முதலையின் சுவடு தெரியவில்லை. எங்கே அது பதுங்கியிருந்தது என்றும் புரியவில்லை. கங்காதரனும் அவர்தம் மனைவியும் ஆற்றில் இறங்க முற்பட்டபோது, மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.
நாட்கள் நகர்ந்து ஆண்டுகளும் ஓடிவிட்டன. இப்போது, மூன்றாண்டுகளுக்குப் பின்னர் எதிர் வீட்டுச் சிறுவனுக்கு உபநயனம். அந்த வீட்டில் மங்கல இசை முழங்குகிறது. தங்கள் பிள்ளையும் உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் செய்திருப்போமே என்கிற ஆற்றாமையில் கங்காதரன் வீட்டில் அழுகுரல். இரண்டும் கலந்து சுந்தரர் திருச்செவிகளில் ஒலித்தன.
விஷயத்தை சுந்தரர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய வருகையை அறிந்த கங்காதரனும் அவருடைய மனைவியும் அங்கு வந்தனர்; தம்பிரான் தோழரைத் தொழுதனர். ஊரார் அடையாளம் காட்ட, "உங்கள் பிள்ளையா ஆற்று முதலையால் அநியாயமாக விழுங்கப்பட்டவன்?’"என்று வினவினார். "இறைவன் விளையாட்டு! என்ன செய்வது?" என்று மனம் தேறி விடை தந்தனர் பெற்றோர். "அந்தப் பிள்ளையை மீட்காமல் அவிநாசியப்பரைத் தொழேன்" என்று உறுதிகொண்ட சுந்தரர், "வாருங்கள், அவன் விழுந்த இடத்தைக் காட்டுங்கள்" என்று அனைவரையும் அழைத்தார்.
பாலகர்கள் விளையாடிய இடத்தை அடைந்த சுந்தரர் இறைவனாரைத் தொழுது பாடத் தொடங்கினார். "நீரில் விளையாடிய பிள்ளையின் தவறென்ன?" என்கிற தொனியில் பாடியவர், பதிகத்தின் நான்காம் பாடலில், "கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" என்று ஆணையிட்டார்.
சுந்தரர் ஆணையைச் சிவனார் மீறுவாரா? காலதேவனான யமனுக்கு எப்படி ஆணை போயிற்றோ தெரியாது. காலன் தனதுலகிலிருந்து அப்பிள்ளையை ஆற்று முதலையின் உடலுக்குள் புகுத்தினானாம். சுந்தரரும் பிறரும் நின்ற கரையின் பக்கம் சர்வ சாதுவாக ஒதுங்கிய முதலை பாலகனைத் தனது வாயிலிருந்து உமிழ்ந்தது. என்ன அதிசயம்! பிள்ளை உயிருடன் வந்தான் என்பது மட்டுமில்லை; இடைப்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சி குன்றாமல், பொலிந்த தோற்றத்தோடு வெளிப்பட்டான்.
பிள்ளை மீண்டும் கிடைத்ததால், புத்தொளி பெற்ற பெற்றோரையும், முதலை வாய் மீண்ட அப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, அவிநாசியப்பரைத் தரிசித்த சுந்தரர் அடுத்த நாள், அந்தப் பிள்ளைக்கும் உபநயனம் செய்து வைத்தார்.
இந்தப் பாடலில் சுந்தரர் வாக்கு அலாதியானது. முதலையை மட்டுமல்லாமல் காலனையும் சேர்த்துச் சொல்லி, இருவரையும் பிள்ளையைத் தரச் சொல்லு என்று சிவபெருமானுக்கு ஆணையிடுகிறார். முதலை தானே பிள்ளையை விழுங்கியது, யமனைக் கூறுவானேன் என்று வினவலாம். என்னதான் முதலை விழுங்கினாலும், உயிரைக் கொண்டுபோய் யமனிடம் தானே சேர்த்திருப்பான்! கிருஷ்ணாவதாரத்திலும் இப்படியொரு சம்பவம் உண்டு. சாந்தீபனியின் பிள்ளை கடலில் மாய்ந்துபோக, அவனை மீட்டுத் தரும்படி குருபத்தினி கிருஷ்ணரிடம் கேட்கிறாள்.
கடலுக்குள் கிடக்கும் பஞ்சஜனன் என்னும் சங்கு வடிவ அரக்கன் அப்பிள்ளையை விழுங்கினான் என்பதால் அவனிடம் கிருஷ்ணர் போரிட, அவனோ அப்பிள்ளையை யமலோகத்தில் விட்டு விட்டேன் என்று கூற, பின்னர் யமனிடம் சொல்லி அப்பிள்ளையை கிருஷ்ணர் வரவழைத்தார். இரண்டு முறை தனித்தனியாகப் போராடுவானேன் என்றெண்ணிய சுந்தரர், ஒற்றை வரியில் ஒட்டுமொத்தமாக ஆணையிட்டுவிட்டார் போலும்!! விழுங்கிய முதலை உடலைத் தர, யமன் உயிரைத் தர, சிவனாரன்றோ அருள்தர வேண்டும்? ஆகவே, ஆணை முதலைக்கும் யமனுக்கும் மாத்திரமில்லை; சிவனாருக்கும் சேர்த்துத்தான்!.
அடியாரின் அன்பு, எத்தகையவற்றையெல்லாம் சாதித்துக் கொடுக்கும் என்பதற்கான சான்று அவிநாசி திருத்தலம்! பழைய காலங்களில், இவ்வூருக்குப் புக்கொளியூர் நத்தம் என்றே பெயர். அவிநாசி என்பது ஆலயத்திற்கும் அதைச் சுற்றிய பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட பெயர். இப்போது ஆறு பாயவில்லையென்றாலும், சிறிய ஏரி காணப்படுகிறது. முதலை மடு என்றே பெயர். சுந்தரர் காலத்தில் இங்கே ஆறோடி, பின்னர் திசைமாறி, ஏரியாக மட்டுமே தங்கிவிட்டது. உயிர்களுக்கு உய்வு தருகிற தலமாதலால், தட்சிண காசி என்றும் பெயர். இரண்டு அம்பாள்கள் அருள்புரியும் இங்கு, தலமரமான பாதிரியின் அடியில் அம்பாள் தவமிருக்கிறாள். ஆகவே, பாதிரிமர அம்பாளைத் தரிசித்த பின்னரே சுவாமியைத் தரிசிப்பது இங்கு முறை.
பாதிரி மரம் சித்திரைப் பெருவிழாவின்போது மட்டுமே பூக்கும் சுவாமிக்கு, தன்னுடைய மலர்களைக் காணிக்கையாக்குவதாக ஐதிகம். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கால பைரவர் வெகு விசேஷமானவர்; காசி பைரவரின் மூத்த சகோதரராகக் கருதப்படும் இவருக்கு வடைமாலை சாத்துவது வெகு சிறப்பு. எதிரிகள் தொல்லை நீங்கும்.
பங்குனி உத்திர விழாவின்போது, முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் மீட்கும் காட்சியும் அவனுக்கான உபநயன திருக்கல்யாணக் காட்சியும் நிகழ்த்தப் பெறுகின்றன. "காசியில் வாசி அவிநாசி" என்பார்கள். காசியில் வழிபட முடியவில்லையென்றால் அவிநாசியில் வழிபட்டால் போதும்; அங்கு கிட்டுவதில் பாதிக்குக் குறையாமல் இங்கு கிட்டும் என்பது பொருள். அவிநாசியப்பரை அணுகுவோம்; அகலா அருள் பெறுவோம்.
நன்றி : Hindu Spritual Articles
பாடல் எண் : 01
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாட அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.
பொருளுரை:
புற்றின்கண் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!.
பாடல் எண் : 02
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாமணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே.
பொருளுரை:
அருள்மிக்க தவக்கோலத்தையுடையவனே! பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக்காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய்.
பாடல் எண் : 03
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறைகொண்டு ஆறலைப்பார் இல்லை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.
பொருளுரை:
மிகுதியான ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர்; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.
பாடல் எண் : 04
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
பொருளுரை:
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக்கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
பாடல் எண் : 05
அரங்காவது எல்லாம் மாயிடு காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்காடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.
பொருளுரை:
திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய "அவினாசி" என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை அணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு; அதுவன்றியும், நீ அம்பை எடுத்து வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.
பாடல் எண் : 06
நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது எனா
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே.
பொருளுரை:
எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது என்றும், உனக்கு வணக்கம் என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ளவனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ?.
பாடல் எண் : 07
மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
பொருளுரை:
பெண் குரங்கு, ஆண் குரங்குக்கு அது செல்லும் மலைப்புறங்களில் உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி "காலை, நண்பகல், மாலை" என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற "நந்தி" என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன்.
பாடல் எண் : 08
பேணாது ஒழிந்தேன் உன்னை அல்லால் பிற தேவரைக்
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான்
பூணாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே.
பொருளுரை:
அணிகலமாகவும், வில் நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன்; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன்; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தை உடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.
பாடல் எண் : 09
நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே.
பொருளுரை:
திருநள்ளாறு, திருஅரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?.
பாடல் எண் : 10
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே.
பொருளுரை:
நீர் தங்குதலால் பருமை பெற்ற நீண்ட புல்லிய சடையை உடைய தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தை உடையவனும் ஆகிய திருப்புக்கொளியூரிலுள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் ஒரு பயன் கருதிப் பாடிய இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும். "மகனை இழந்து நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்."
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||