திங்கள், 8 ஆகஸ்ட், 2016

நலம் தரும் திருப்பதிகம் 08 திருநொடித்தான்மலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பரமசிவன், ஸ்ரீ கைலாயநாதர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பார்வதிதேவி 

திருமுறை : ஏழாம் திருமுறை 100 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளை யானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்ற போது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன் படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக்களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.

பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது. இதற்கு அவர் சொல்லும் பிரமாணம் என்ன தெரியுமா? தானே இது சத்தியம் என்பதைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார்.


நொடித்தான் மலை என்பது கயிலாய மலையைக் குறிக்கும். சிவபெருமானுக்கு வாழையடி வாழையாக மீளா அடிமைசெய்யும் வம்சத்தில் பிறந்த அடியார்கள் சிவலோகம் பெறுதல் உண்மை என்பதை சுந்தரரின் இந்த அகச்சான்று உறுதி செய்கிறது. இதில் சந்தேகம் வேண்டாம். "சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்ற அவரது தேவார அடிகள் இக்கருத்துக்கு உறுதுணை ஆவதை மனத்தில் கொண்டு ஆடி சுவாதி நன்னாளில் குருநாதரின் பாத கமலங்களை வணங்கிச் சிவத்தொண்டு ஆற்றுவோமாக.

பாடல் எண் : 01
தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித் தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்.


பாடல் எண் : 02
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ 
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளி யானை நினைத்திருந்தேன் 
வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனையேற வைக்க 
ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ.


பாடல் எண் : 03
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை 
அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
நெஞ்சே! அடியேன் மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்துகொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!.


பாடல் எண் : 04
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப் பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் 
சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்.


பாடல் எண் : 05
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் 
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன் என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச்செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.


பாடல் எண் : 06
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா 
வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லதொரு 
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என்மனத்தின் கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானை யூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.


பாடல் எண் : 07
நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே 
அலை கடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச
உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திருமலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.


பாடல் எண் : 08
அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப
வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர்
சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
"அரகர" என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, "வாணன்" என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.


பாடல் எண் : 09
இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம்
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான் 
நம்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே.

பொருளுரை:
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், "இவன் யார்" என்று வினவ, "இவன் நம் தோழன்` ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.


பாடல் எண் : 10
ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையைச்
சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.

பொருளுரை:
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திருநாவலூரில் தோன்றியவனாகிய யான், இசைநூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை உடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை உடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப்பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||