ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 51 - 60

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 51
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே.

பொருளுரை‬: 
கிரௌஞ்ச மலையின் நடுப்பாகம் பிளவுபட்டு அங்கு வழிதோன்றுமாறு வேலாயுதத்தை ஏவியருளிய திருமுருகப்பெருமானை அன்புடன் வணங்கி, யாசிப்பவர்களுக்குத் தானம் செய்வதாகிய நிலையான பெருந்தவத்தைச் செய்வீர்களாக. இத்தகைய தவத்தின் பயனானது, உங்களைத் தேடிவரும் தொலையாத இறுதி யாத்திரை வழிக்கு கட்டமுது போன்ற பொருத்தமான துணையாக அமையும் என்பதை உணர்வீர்களாக; உம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இலைக் கறியாயினும், வெந்தது எதுவாயினும், பகிர்ந்து கொள்ளுங்கள்.


பாடல் எண் : 52
சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால்
பகர் ஆர்வம் ஈ பணி பாச சங்க்ராம பணா மகுட
நிகராட்சம் பட்ச பட்சி துரங்க ந்ருப குமரா
குக ராட்சச பட்ச விட்சோப தீர குணதுங்கனே.

பொருளுரை‬: 
சிகரங்களையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேலாயுதத்தையும் செம்மையான சேவற்கொடியையும் செந்தமிழ்ப் பாடல்களால் பாடித் துதிக்கின்ற விருப்பத்தை அடியேனுக்குக் தந்தருள்வீராக. பாசக் கயிறு போன்றதும் போர் செய்வதற்குரியதுமாகிய பாம்பின் படத்தின் மகுடங்களைப் பொடியாக்குவதற்குரிய சிறகுகளுடன் கூடிய குதிரை போன்ற மயிலை வாகனமாக உடையவரே, தலைவரே, குமாரக் கடவுளே, குகையில் வசிப்பவரே, அரக்கர்கள் மீது வெறுப்புடையவரே, தைரியமானவரே, தூய அருட்குணத்தை உடையவரே.


பாடல் எண் : 53
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தால்
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

பொருளுரை‬: 
வேடவர் மகளாகிய வள்ளியம்மையை விரும்பும் திருமுருகப்பெருமானை உண்மையான அன்போடு உருகிப் பாடி, பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்தபோது அப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு, திகைத்து உடல் மெலிந்து மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே ஆவர்.


பாடல் எண் : 54
சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றி தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இலையே இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழி காட்டு என்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச்சிலை வளைத்தோன் மருகா மயில் வாகனனே.

பொருளுரை‬: 
இறப்பதற்கும் மீண்டும் திரும்பத் திரும்பப் பிறப்பதற்கும் அல்லாமல் வறுமையால் தளர்வுற்றவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவி செய்வதற்கு அடியேனை விதிக்கவில்லையே! "இலங்கை மாநகரத்திற்குச் செல்வதற்கு நீ வழிகாட்டக் கடவாய்" என்று சொன்னதும் அந்தக் கடலானது நெருப்புப் பற்றிக்கொள்ளுமாறு வெற்றியுடைய கோதண்ட வில்லினை வளைத்தவராகிய இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரே, மயிலை வாகனமாக உடையவரே.


பாடல் எண் : 55
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரம ஆனந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பும் அறார் தினைப்போது அளவும்
ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யம தூதருக்கே. 

பொருளுரை‬: 
'நான்' என்னும் அகங்காரம், 'எனது' என்னும் மமகாரம் ஆகிய இரண்டையும் ஒழித்து அருள் அனுபவத்தில் அடங்கப் பெறமாட்டார்; பொறிபுலன்கள் ஒடுங்கப் பெறமாட்டார்; பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி நிறைவு பெறமாட்டார்; நினைப்பும் மறப்பும் அற்றச் சமாதி நிலையில் பொருந்தமாட்டார்; ஒரு தினையளவு காலமாயினும் ஓங்காரமாகிய நாதத்துக்குள்ளே ஒளிரும் ஜோதியினுள்ளே திருமுருகப்பெருமானின் திருவுருவத்தின் தரிசனம் கண்டு அப்பரவச நிலையில் தூங்கமாட்டார்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்யமாட்டார். இயமனுடைய தூதர் வரும்போது என்ன செய்வார்?. 


பாடல் எண் : 56
கிழியும் படி அடல் குன்று எறிந்தோன் கவிகேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர் எரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப் படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. 

பொருளுரை‬: 
வலிமையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்து ஒழியுமாறு வலிமையுடைய வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானைப் புகழும் அருட்பாடல்களைக் கேட்டு உள்ளம் உருகி ஏனைய இழிந்த பாடல்களைக் கற்காமல் இருப்பீராக. நெருப்புடன் கூடிய நரகக் குழியையும் அதனால் அனுபவிக்கக் கூடிய துன்பத்தையும் நீரில்லாத வழியே சென்று தவித்து இயமனுடைய ஊருக்குப் போகின்ற கொடிய வழியையும் அதனால் உண்டாகும் துன்பத்தையும் மறந்தவர்களுக்குச் சொல்லுங்கள், மீண்டும் சொல்லுங்கள். 


பாடல் எண் : 57
பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல் சண்முகவா எனச் சாற்றி நித்தம்
இரு பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்
ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.

பொருளுரை‬: 
'ஓ' மனமே, போர் செய்தற்குரிய பெண் யானையும் ஆண் யானையும் கலந்து விளையாடுகின்ற தினைப் புனத்தில் உள்ள சிறிய மானானது பெற்ற பெண் யானையைப் போன்ற "வள்ளியம்மையாருக்கு நாயகரே ஆறு திருமுகங்களைக்கொண்டவரே" என்று துதித்த பின்னர், யாசிக்கும் வறியவர்களுக்கு ஒரு பிடியளவு சோறாவது கொடுத்து உதவிய பிறகு நீயும் சாப்பிட்டு இருப்பாயாக; நல்வினை, தீவினை ஆகிய வினைகளுடைய நாம் இறந்துவிட்டால் மாய உடம்பாகிய இவ்வுடல் ஒருபிடியளவு சாம்பலும் ஆகாது ஒழியும் தன்மையுடையது. 


பாடல் எண் : 58
நெற்றாப் பசுங்கதிர் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கு இனிய பிரான் இக்கு முல்லையுடன்
பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும் படவிழியால்
செற்றார்க்கு இனியான் தேவேந்திரலோக சிகாமணியே.

பொருளுரை‬: 
முதிராத பசுமையான கதிர்களையுடைய சிவந்த தினைப் புனத்தைக் காவல் புரிகின்ற நீல நிறமான வள்ளியம்மையாரின் எப்பொழுதும் முற்றாத கொங்கைக்கு இனிமையான தலைவராக விளங்குபவர் திருமுருகப்பெருமான். கரும்பாலாகிய வில், முல்லை மலராகிய அம்பு, அம்புக்கூடு ஆகியவற்றோடு மன்மதன் வெந்து சாம்பலாகும்படி தம் நெற்றிக் கண்ணால் அழித்தவராகிய சிவபெருமானின் இனிமையான திருமைந்தரான திருமுருகப்பெருமான் தேவேந்திரலோகத்திற்கு முடிபோன்றவராவார்.


பாடல் எண் : 59
பொங்கார வேலையில் வேலை விட்டோன் அருள்போல் உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது இடாமல் வைத்த
வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும்
சங்காதமோ கெடுவீர் உயிர்போமத் தனிவழிக்கே.

பொருளுரை‬: 
நல்வழியிலன்றி தீய வழியில் சென்று கேடு அடையும் மனிதர்களே! மிகுதியாக ஒலிக்கும் கடலில் வேலாயுதத்தை விடுத்தருளிய திருமுருகப்பெருமானின் திருவருளைப் போல, யாசிக்கும் வறியவர்க்கு பொருள் வழங்கியதன் பலன் தப்பாமல் உங்களுக்கு உதவும் பொருட்டு எவ்விடத்தில் ஆயினும் உங்களை நாடி வரும் யாசிப்பவர்களுக்கு தருமம் செய்யாமல், பெட்டியில் பூட்டி வைத்திருந்த பொன்னும், அழகிய வீடும், பெண்களும் உயிர்போகின்ற தனிமையான வழிக்குத் துணையாகுமோ?.


பாடல் எண் : 60
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே.

பொருளுரை‬: 
அடியேனின் உள்ளத்தின் துக்கங்களையும் உடலின் துயரங்களையும் அறவே அகற்றுவதன் பொருட்டு திருமுருகப்பெருமானை நினைக்கின்றேன் இல்லை; அவருடைய சந்நிதியில் நின்று தரிசிக்கின்றேன் இல்லை; தண்டையணிந்த சிறிய திருவடிகளை வணங்குகின்றேன் இல்லை; அவருடைய பெருமைகளில் ஒன்றையாவது சொல்லி வாழ்த்துகின்றேன் இல்லை; மயிலை வாகனமாகக் கொண்ட அப்பரமபதியைச் சந்திக்கின்றேன் இல்லை; பொய்யை இகழ்ந்து நீக்கினேன் இல்லை; மெய்யான செயல் எதுவும் செய்கின்றேன் இல்லை. 


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||