ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன.
இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்ட போது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது.
அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று "முத்தைத் திரு பத்தித் திருநகை" எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல். அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர். உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.
கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.
|| --- --- --- விநாயகர் காப்பு --- --- --- ||
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.
பொருளுரை:
தன்னை நினைவுகூரும் மாத்திரத்திலேயே பக்தர்களுக்கு முக்தியினைத் தரவல்ல திருவண்ணாமலை கோயிலின் அழகிய கோபுரத்தின் வாயிலுக்கு வடக்குப் பக்கம் சென்று அக்கோபுரத்தின் வாயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் வீற்றிருக்கும் திருவிநாயகப்பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் "தட, பட" என்ற ஒலியுடன் தங்கள் தலைமீது போட்டுக்கொள்ளும் குட்டுடன் அவர்கள் படைக்கும் சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களையும் தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும் "இச்சை, கிரியை, ஞானம்" என்னும் மும்மதங்களையும் விசாலமான கும்பத்தலங்களையும் கொண்டிருப்பவருமான யானை முகத்தான் திருவிநாயகப்பெருமானின் இளையோனாகிய திருமுருகப்பெருமானின் தரிசனம் கண்டுகொண்டேன்.
பாடல் எண் : 01
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.
பொருளுரை:
குமரப் பெருமானே, முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேன், அசுத்தப்படுத்தும் பிரபஞ்சம் என்னும் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்! அடர்ந்த சிவந்த சடையின்மீது கங்கை நதியையும் நாகப் பாம்பினையும் கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக்கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவரீர், திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குகின்றீர்.
பாடல் எண் : 02
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
பொருளுரை:
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்கவல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய திருமுருகப்பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமல் (ஓதாமல்) இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப்போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும்?.
பாடல் எண் : 03
தேரணி இட்டு புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேரணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.
பொருளுரை:
தேரை அலங்கரித்துச் செலுத்தி, "ஆணவம், மாயை, கன்மம்" என்னும் மூன்று கோட்டைகளைத் தம் திருப்பார்வையினாலேயே எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணிவகுத்து வந்து பின்னர் வட்டவடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்கள் வதியும் அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.
பாடல் எண் : 04
ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலரிட்டு உனது தாள்
சேர ஒட்டார் ஐவர் செய்வதென் யான் சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனை சூரனை காருடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
பொருளுரை:
ஐம்புலன்களாகிய ஐவர், தேவரீரின் திருவடிப்பெருமைகளை ஆராயவிடமாட்டார்; ஒரே பரம்பொருளாகிய தேவரீரை நினைக்கவிடமாட்டார்; நறுமணமிக்க மலர்களால் அருச்சித்து தேவரீரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சென்றடையவிடமாட்டார். அடியேன் என்ன செய்வது? அமரர்கள் உய்யவேண்டி, திருட்டுத்தனமும் கொடூரமும் பொருந்திய சூரனை, அவனுடைய கரிய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அழித்தவரே.
பாடல் எண் : 05
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.
பொருளுரை:
அழகிய உலகங்கள் யாவையும் பெற்று அருளிய பொன்னிற உமாதேவியின் ஞானப்பாலைப் பருகிய பின்னர், சரவணத் தடாகத்தில் உள்ள தாமரை மலர்த் தொட்டிலில் ஏறி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு செவிலியர் பாலையும் உண்ண விழையவே, கடல் அழவும், கிரௌஞ்ச மலை அழவும், சூரபன்மன் அழவும், தானும் விம்மி விம்மி அழுத இளங்குழந்தையை உலகமானது குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லும்.
பாடல் எண் : 06
பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனி பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.
பொருளுரை:
பசுமையுடைய பெரிய தினைப் புனத்தில் சிறிய தினைக் கொல்லையைக் காவல் செய்யும் [ஜீவான்மாவாகிய] வள்ளியம்மையை விரும்புகின்ற திருமுருகப்பெருமானை உண்மையான அன்புடன் மெல்ல மெல்ல நினைக்க, அந்த நினைப்பினால் ஒப்பற்ற பேரின்பத்தை அடியேன் துய்த்து, அதன் இனிமையை உணர்ந்தபொழுது இனிய கரும்பும் துவராகி, செவ்விய தேனும் புளித்து மிகவும் கசந்துவிட்டது.
பாடல் எண் : 07
சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
பொருளுரை:
துன்பமாகிய கயிற்றினால் கட்டப்பட்டு மூடத்தனமான காரியங்களைச் செய்து மீண்டும் வினைப்பயனைத் தேடிக்கொண்டு பரிதவிக்கின்ற அடியேனுடைய மனத்தில் உள்ள மயக்கத்தை நீக்கி அருள்வீராக! வெற்றி நிறைந்த போர்க்களத்தில் அவுணர்களின் மார்பிலிருந்து பெருகிய இரத்தக்குளத்தில் பேய்கள் குதித்து முழுகி ஆனந்தமடைந்து அந்த இரத்தத்தைக் குடித்து அகங்கரித்து நடனம் ஆடும்படி வேலாயுதத்தை அந்த அவுணர்கள் மீது ஏவிய இறைவனே!.
பாடல் எண் : 08
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்தது ஓர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்
தெளிய விளம்பியவா முகம் ஆறுடைத் தேசிகனே.
பொருளுரை:
அருட்பெருஞ்சோதியில் உண்டாகிய உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியிலே, தனிப் பெருங்கருணையால் உண்டாகிய ஒப்பற்ற சிவானந்தத் தேனை மிகவும் பழைய காலத்திலேயே கட்டு நீங்கிய வெட்ட வெளியில் உண்டாகிய ஒன்றுமில்லாத ஒன்றை தன்னிடத்தில் பெற்றுள்ள தன்னந்தனிமையான நிலையை அடியேன் தெளிவடைந்து உய்யுமாறு உபதேசித்து அருளிய ஆறுமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!.
பாடல் எண் : 09
தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வ வள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வான் அன்று கால் அன்று தீ அன்று நீர் அன்று மண்ணும் அன்று
தான் அன்று நான் அன்று அசரீரி அன்று சரீரி அன்றே.
பொருளுரை:
தேன் என்றும் கற்கண்டு என்றும் ஒப்புமை சொல்வதற்கு இயலாத இனிய மொழியை உடைய தெய்வ மடந்தையாகிய வள்ளி நாயகியாரது கணவராகிய திருமுருகப்பெருமான் அடியேனுக்குக் குருவாக வந்து உபதேசித்து அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. அஃது ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. அஃது, ஒன்றும் அற்ற ஒன்று.
பாடல் எண் : 10
சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே.
பொருளுரை:
இத்தன்மைத்து என்று அளவிட்டு கூறுவதற்கு இயலாத மனம், வாக்கு முதலியவற்றை இழந்து அசைவின்றி பேசாமல் சும்மாயிருக்கும் அநுபூதியான எல்லைக்குள்ளே புகுமாறு அடியேனைச் செலுத்தி அருளியவரே, போர் புரியும் வேலினை உடையவரே, கொல்லிப்பண்ணை ஒத்த இனிய மொழிகளையும் கோவைப் பழத்தை ஒத்த சிவந்த இதழையும் உடையவருமான வள்ளி நாயகியாரை மருவுகின்ற பெருமை பொருந்திய மலைபோன்ற புயங்களை உடைய திருமுருகப்பெருமானே.
தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||