இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருச்சிற்றம்பலமுடையார், ஸ்ரீ கனகசபாபதி
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாம சுந்தரி
திருமுறை : ஆறாம் திருமுறை 01 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் தலம் சிதம்பரம். இங்கு அருள்பாலிக்கும் திருமூலநாதர், உமையம்மை மற்றும் நடராஜரை மனதில் நினைத்து இந்த பாடலைத் தினமும் மாலையில் படித்தால், வீட்டில் ஆனந்தம் நிலைத்திருக்கும். திருநாவுக்கரசர் பாடியது இது.
தில்லைச் சிற்றம்பலத்து அரனின் பெருமையை பல பதிகங்களில் பாடிய அப்பர் பிரானுக்கு, தான் பல வருடங்கள் சமண மதத்தைச் சார்ந்து இருந்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தற்கு வருத்தம் ஏற்பட்டது போலும். அந்த நாட்களை ஒரு கெட்ட கனவாக மறக்க நினைத்தவர், சிவபெருமானின் புகழைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்ற முடிவுக்கு வந்தார் போலும். அந்த எண்ணத்தைப் பதிகமாக வடித்து ஒவ்வொரு பாடலின் முடிவிலும் சிவபிரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று முடியும் வண்ணம் இந்தத் திருத்தாண்டகத்தை அருளியுள்ளார்.
பாடல் எண் : 01
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
சிவபெருமான், தங்களது முயற்சியால் கண்டு கொள்ளலாம் என்று நினைப்பவர்க்கு (அவர்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும்), மிகவும் அரியவன், பரம்பரை பரம்பரையாக, தங்களைத் தில்லை சிற்றம்பலத்து இறைவனின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட அந்தணர்களின் சிந்தையில் வசிப்பவன்; சிறப்பான வேதங்களின் உட்பொருளாக உள்ளவன், பகுத்துப் பார்க்க முடியாத அணுவினும் நுண்ணியன், தங்களது முயற்சியால் எவரும் உணரமுடியாத மெய்ப்பொருள், தேன் போலும் பால் போலும் மிகவும் இனிமையாக இருப்பவன், சுயம் பிரகாசமாக தானே ஒளிரும் ஒளியான்; திருமாலாகவும் பிரமனாகவும் தீயாகவும் காற்றாகவும் ஒலிக்கும் கடலாகவும், உயர்ந்த மலைகளாகவும் உடன் இருந்து செயல்படுபவன்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லையில் உறைகின்றான். அவனது புகழினைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்களாகும்.
பாடல் எண் : 02
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
எல்லாக் கலைகளும் கைவரப் பெற்றவன் சிவபெருமான், கங்கையைத் தனது நீண்ட சடையில் தேக்கியவன்; காவிரியால் ஒரு புறத்தில் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறைபவனும் வாழ்க்கையில் துணை ஏதும் இல்லாதவர்க்கும் துன்பத்தால் வாடுகின்றவர்க்கும் அருள் செய்யும் இறைவனும்; திருவாரூர் தலம் புகுகின்றவனும் ஆகிய சிவபெருமானை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன்; வானவர்களால் எப்போதும் வணங்கி ஏத்தப்படுபவன். இத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாமல் கழிக்கும் வாழ்நாட்கள் வீணாகக் கழிக்கும் நாட்கள் ஆகும்.
பாடல் எண் : 03
கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித்து ஆட
வளர்மதியம் சடைக்கு அணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடுகின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அடக்கி, அதன் தோலை உரித்து, அந்த தோலை மேலாடையாகத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டு, தனது காலில் அணிந்திருக்கும் கழல்கள் எழுப்பும் ஒலி மற்ற ஒலிகளுடன் கலக்குமாறும், கையில் அனல் ஏந்தியும், பெருமைக்குரிய தோள்கள் மடிந்து அசையுமாறும், வளர்கின்ற பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தும் சிவபெருமான் நடனம் ஆடுகின்றான். மானைப் போன்று மருண்ட பார்வையை உடையவளும், ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளும் ஆகிய பார்வதி தேவி, இந்த அழகிய நடனத்தைக் கண்டு ரசிக்கின்றாள். இவ்வாறு நடனம் ஆடும் பெருமானை, தேவர் கணங்கள், தங்களது தலையைத் தாழ்த்தி வணங்குகின்றார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த நடனம் ஆடும் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிக்கப்பட்ட நாட்கள் ஆகும்; அந்த நாட்களை வாழ்ந்த நாட்களாக கருதுவது தவறு.
பாடல் எண் : 04
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை
அமரர்கள் தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பாடல் எண் : 05
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்தணைமேல் வரும் பயனைப் போகமாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன் தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரிய புலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பாடல் எண் : 06
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சியானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்
சுரும்பமரும் கடிபொழில்கள் சூழ்தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தனது திருமேனியின் இடது பாகத்தில் கொண்டவன் சிவபெருமான்; தனது சிவந்த மேனியில் வெண்ணீறு பூசிய காரணத்தால், வெண்மை நிறத்தில் வைரக் குன்று போன்று காட்சி அளிப்பவனும், மலரும் தருவாயில் உள்ள கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், அருமறையோடு ஆறங்கமாகத் திகழ்பவனும் அவனே. அத்தகைய சிவபிரானை, வண்டுகள் நிறைந்த நறுமணம் வீசும் சோலைகள் மிகுந்த திருவாரூரில் உறையும் சுடர்க்கொழுந்தை, அசைவதும் அணைந்து போவதும் அற்ற விளக்கினை, அனைத்துப் பொருட்களினும் அதிகமான இன்பத்தைத் தரும் வீடுபேறாக இருப்பவனை, பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபிரானைப் பேசாத நாட்கள் வீணாகக் கழிந்த நாட்கள் ஆகும்.
பாடல் எண் : 07
வரும் பயனை எழுநரம்பின் ஓசையானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம் செய அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல் நஞ்சு நஞ்சயின்றான் தன்னைச்
சுரும்பமரும் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன். மேருவை வில்லாகக் கொண்டு, தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன். அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பாடல் எண் : 08
காரானை ஈர் உரிவைப் போர்வை யானைக்
காமரு பூங்கச்சி ஏகம்பன் தன்னை
ஆரேனும் அடியார்கட்கு அணியான் தன்னை
அமரர்களுக்கு அறிவரிய அளவிலானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கரிய யானையின், இரத்தத்தின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்தியவனை, அனைவரும் விரும்பும் அழகினை உடைய கச்சி மாநகரில் உறையும் ஏகம்பனை, எல்லா அடியார்களுக்கும் நெருக்கமாக இருப்பவனை, தங்களது முயற்சியால் அறிய முயலும் தேவர்களால் அறிய முடியாதவனை, மண்ணவரும் விண்ணவரும் வழிபடத் தொடர்ந்து நடனம் ஆடுபவனை, ஒளி உருவமாக உள்ளவனை, எண்ணற்ற திருநாமங்கள் கொண்டவனை, பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தலத்தில் உறைபவனைப் பேசாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களே.
பாடல் எண் : 09
முற்றாத பால்மதியம் சூடினானை
மூவுலகும் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலம் அமர்ந்து உறையும் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
பால் போன்று வெண்மை நிறம் கொண்ட இளமதியைச் சூடியவனை, மூவுலகும் தானேயாய் இருக்கும் முதல்வனை, உலகில் உள்ள அனைவரையும் பகைத்து அவர்களை அழிக்கத் துணிந்த முப்புரத்து அரக்கர்களை வென்றவனை, ஒளி வடிவாக விளங்குபவனை, மரகதம், தேன், பால் போன்று அருமையானவனை, குற்றாலம் எனப்படும் தலத்தில் சித்திரக்கூத்து ஆடவல்லானை, அனைவருக்கும் தலைவனை, ஞானிகள் ஞானத்தால் அறியப்படுபவனை, பெரும்பற்றப்புலியூர் எனப்படும் தலத்தில் உறைவானப் பேசாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களே, அவை பிறவா நாட்களாக கருதப்பட வேண்டும்.
பாடல் எண் : 10
காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக் கமலத்து இருந்தவனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
ஒளி பொருந்திய கரிய உடல் உடையவனும், சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் தாமரை மலரில் இருப்பவனாகிய நான்முகனும், அடிமுடி தேடியபோது, அவர்கள் காணா வண்ணம், சிறந்த ஒளியினை வீசிய தழற்பிழம்பாய் நின்றவன் சிவபெருமான். நமது உள்ளத்தில் உள்ள அறியாமை என்ற மயக்கம் தரும் இருளை நீக்கும் வல்லமை படைத்தவன் சிவபெருமான். அவன் இந்த நிலவுலகையும், வானத்தையும், ஏழ் உலகங்களையும், கடந்து அவைகளுக்கு அப்பாலும் பேரொளிப் பிழம்பாய் நிற்பவன். அத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்களே.
பதிகத்தின் சிறப்பு:
இந்த பதிகத்தின் முதல் பாடலில், அந்தணர் தம் சிந்தையான் என்றும், இரண்டாவது பாடலில் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வான் என்றும், ஐந்தாவது பாடலில் அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்து என்றும், ஏழாவது பாடலில் துறந்தோர் உள்ளப் பெரும்பயன் என்றும், எட்டாவது பாடலில் ஆரேனும் அடியார்கட்கு அணியான் என்றும், தேவர்களுக்கு அரியானாகிய சிவபிரான், அடியவர்களுக்கு எளியவனாக விளங்கும் தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.
வணங்கத் தலை வைத்து, வார்கழல்கள் வாழ்த்த வைத்து, இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்த பெருமானின் புகழினைப் பேசாத நாட்கள் பிறவாத நாட்கள் என்று கூறி, நாம் பிறந்ததன் பயனை அடைய வேண்டுமானால் தினமும் இறைவனின் புகழைப் பாட வேண்டும், அவனது புகழைக் கேட்கவேண்டும், அவனது புகழினைப் பேச வேண்டும் என்று உணர்த்தும் அருமையான பதிகம்.
உலகப் பற்றினைத் துறந்து வாழும் அடியார்கள் காட்டிய வழி செல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனுக்கு மலர் மாலைகள் சூட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, இறைவனது திருவருளைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்கள் என்று கணக்கிட்டு, அவரது திருவருளைப் புகழ்ந்து பேசி நமது வாழ்நாள் கழித்தாலே போதும், அஞ்சேல் என்று இறைவன் சொல்லவேண்டும் என்ற விண்ணப்பம் வைப்பதற்கு நமக்கு தகுதி ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வேண்டும் அடியார்க்கு வேண்டுவது ஈயும் கருணை உள்ளம் படைத்தவன் அல்லவா சிவபிரான். எனவே இறைவனிடம் அஞ்சேல் என்று வேண்டும் தகுதி அடைவதற்கு நாமும் இன்று முதல் சிவபிரானின் புகழினைப் பேசி நமது வாழ்நாட்களைக் கழித்து, நமது உயிர் உய்யக்கூடிய வழியினில் செல்வோமாக.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||