செவ்வாய், 3 மே, 2016

மழை வேண்டல் திருப்பதிகம்‬ 02 திருப்பறியலூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வீரட்டேஸ்வரர், ஸ்ரீ தக்ஷபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ இளங்கொம்பனையாள், ஸ்ரீ வாலாம்பாள்

திருமுறை : முதல் திருமுறை 134 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத் தகும் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.


பாடல் எண் : 02
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.


பாடல் எண் : 03
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.


பாடல் எண் : 04
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்செய்யும் ஒளி வடிவினன்.


பாடல் எண் : 05
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.


பாடல் எண் : 06
அரவுற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செருவுற்றவர் புரம் தீயெழச் செற்றான்
தெருவில் கொடிசூழ் திருப்பறியலூரில்,
வெருவுற்றவர் தொழும் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.


பாடல் எண் : 07
நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.


பாடல் எண் : 08
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறியலூரில்
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல் விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலை மலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால் விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.


பாடல் எண் : 09
விளங்கொண் மலர்மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல் வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.


பாடல் எண் : 10
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.


பாடல் எண் : 11
நறு நீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த் திருப்பறியல் வீரட்டத்தானை
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத் தானே.

பாடல் விளக்கம்‬:
நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர் வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||