இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அரத்துறைநாதர், ஸ்ரீ ஆனந்தீஸ்வரர், ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அரத்துறை நாயகி, ஸ்ரீ ஆனந்த நாயகி, ஸ்ரீ திரிபுர சுந்தரி
திருமுறை : ஐந்தாம் திருமுறை 003 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
"இத்திருப்பதிகத்தினை பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்."
ஸ்ரீ அரத்துறைநாதர் |
பாடல் எண் : 01
கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பாரி இலாத எம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
சொற்களையும் உணர்ச்சிகளையும் கடந்தவனை, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்ட பின்னரும் உடல் அழியாமல் இருந்தவனை, தனக்கு ஒப்பாகச் சொல்வதற்கு எவரும் இல்லாதவனை, தான் நினைத்தபோது வெளிப்பட்டு தான் நினையாதபோது மறைந்து நிற்கும் வல்லமை படைத்தவனை, அரத்துறை தலத்தில் உறைபவனை, ஞானச்சுடராக விளங்குபவனை, காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 02
கரும்பு ஒப்பானைக் கரும்பினில் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
தன்னை நினைக்கும் அடியார்களுக்கு கரும்பு போன்று இனிப்பவனும், முறைப்படி வழிபட்டு தியானம் செய்யும் ஞானிகளுக்கு கரும்பு கட்டி போன்று இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் அந்தந்த உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்களை விளைவிப்பவனும், விண்ணோர்கள் காண முடியாதவனும், அனைத்து உயிர்களுடனும் கலந்து அரும்பு போன்று குவிந்து மறைந்து காணப்படுபவனும், தனக்கு விருப்பமான எட்டு அக மலர்களை வளர்த்துக் கொண்டு தன்னை வழிபடும் அடியார்களின் மனதினில் உள்ள அக மலர்களின் பயனாகிய பக்தி எனப்படும் தேனினைப் பருகுவதற்கு அத்தகைய மனங்களைச் சுற்றித் திரியும் தேன் வண்டாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 03
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
பெருமை உடையவனும், ஒவ்வொரு உயிரினுள்ளும் தனித்தனியாக கலந்து இருப்பவனும், விண்ணோர்கள் அறிய முடியாதவனும், தன்னில் குளிப்போரின் உடலை தூய்மை செய்தும் அவர்கள் குளிக்கும் சமயத்தில் ஆனந்தம் அளிக்கும் ஆறு போன்று, தன்னை உணர்ந்து வழிபடும் அடியார்களின் மனதினை தூய்மைப்படுத்தி, அவர்கள் இறையுணர்வுடன் திளைக்கும் சமயங்களில் அவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவனும், அரத்துறை தலத்தில் உறைபவனும், தங்களது அறியாமையை நீக்கிகொண்டு மெய்ப்பொருளை உணரும் அடியார்களின் மனதினில் ஊற்று போன்று ஊறி பெருக்கெடுப்பவனும் ஆகிய இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 04
பரப்பு ஒப்பானைப் பகல் இருள் நன்னிலா
இரப்பு ஒப்பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
சூரியனின் ஒளி போன்று பரந்த இடத்தில் எங்கும் ஒன்று போன்று அனைத்து உயிர்களுக்கும் உடனிருந்து கருணை புரிபவனும், சந்திரனின் ஒளி படிப்படியாக வளர்வது போன்று உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவைகளின் ஞானத்தை படிப்படியாக வளரச் செய்பவனும், சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், தனது ஐந்து தொழில்களையும் சிரமமோ அல்லது பெரிய முயற்சியோ தேவைப்படாமல், நினைத்த மாத்திரத்தில் விளையாட்டாகச் செய்பவனும் ஆகிய அரத்துறை இறைவன் தன்னிடத்தில் அன்பு கொள்ளும் அடியார்களின் மனதினில் பால் சுரப்பது போன்று சுரக்கின்றான். இத்தகைய பண்புகள் கொண்ட சிவபெருமானை அன்புடன் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 05
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வதோர்
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
பாலில் மறைந்துள்ள நெய், தயிரினைக் கடைந்தால் வெளிப்படுவது போன்று நமது உள்ளத்தில் இறையுணர்வு கொண்டு கடைந்தால் நமக்கு வெளிப்படுபவனும், நெய்ச்சுடர் போன்ற உருவினனும், தேவர்கள் அறிய முடியாதவனும், நமக்கு பெரிய வியப்பாகத் தோன்றுபவனும், இடர்கள் நம்மை எதிர் நோக்கும் போது நமக்கு கை போன்றும் ஊன்றுகோல் போன்றும் உதவி செய்பவனை, அரத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 06
நெதி ஒப்பானை நெதியில் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
வாழ்க்கை மற்றும் உலகத்தின் ஒழுங்குமுறையாக இருப்பவனும், அந்த ஒழுங்குமுறையின் தலைவனாக இருப்பவனும், உயிர்கள் சென்ற பிறவிகளில் சேமித்து வைத்த வினைகளின் பயனாக இருப்பவனும், தேவர்களால் அறிய முடியாதவனும், உயிர்களின் உணர்வினைக் கடந்து நிற்பவனும், அனைத்து உயிர்களும் சரண் அடையத் தக்க இடமாக இருப்பவனும் அரத்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை சென்று காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 07
புனல் ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
உயிர்களை வளர்க்கும் தண்ணீர் போன்று அனைத்து உயிர்களுடனும் கலந்து நின்று உயிர்களின் ஞானத்தை வளர்ப்பவனும், சிவநெறியில் பொருந்தாத பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களுக்கு இடி போன்றவனும், பகைவர்களுக்கு அனல் போன்றவனும், விண்ணோர்களால் அறிய முடியாதவனும், உயிர்களுடன் கலந்து என்றும் அணையாத தீ போல நின்று உயிர்களின் அறியாமையை ஒழித்து ஓங்கி வளரும் ஞானமாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 08
பொன் ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
பொன்னின் நிறத்தை ஒத்த திருமேனியை உடையவனும், பொற்சுடர் போன்றும் மின்னல் போன்றும் மிளிரும் சோதியானை, தேவர்களால் அறிய முடியாதவனும், அன்னையை ஒத்து நம்மை கருணையுடன் பேணி வளர்ப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம். அவன் தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாமையால், தன்னையே தனக்கு நிகராகக் கொண்டவன் ஆவான்.
பாடல் எண் : 09
காழி யானைக் கனவிடை ஊருமெய்
வாழி யானை வல்லோரும் என்று இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழி யானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
பல ஊழிகளைக் கடந்து நிற்கும் சீர்காழி தலத்தின் இறைவனாக இருப்பவனும், பெருமையை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஊர்பவனும், அழியும் தன்மை கொண்ட மற்றவர்களின் உடல் போலன்றி நிலையாக வாழும் உடலினை உடையவனும், வல்லவர்கள் என்று நாம் கருதும் பிரமனும் திருமாலும் ஊழிக்காலத்தில் ஒடுங்கும் இடமாகத் திகழ்பவனும் ஆகிய அரத்துறை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
பாடல் எண் : 10
கலை ஒப்பானைக் கற்றாற்கு ஓர் அமுதினை
மலை ஒப்பானை மணிமுடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பொருளுரை:
உயிர்களின் அறியாமையை நீக்கி, உயிர்களை இறையுணர்விலும் போகத்திலும் செலுத்துவதில் கலை போன்றவனும், சிவநெறியினைக் கற்றவர்களுக்கு அமுதமாக இனிப்பவனும், பல நற்பண்புகளைக் கொண்டு, வளங்களைக் கொண்டு, அனைவரையும் விடவும் ஓங்கி உயர்ந்து நிற்பதில் மலை போன்றவனும், எங்கும் பரந்து காணப்படும் நிலையிலும், தன்னுள் மூழ்கித் திளைக்கும் அடியார்களுக்கு வீடுபேறு எனப்படும் உயர்த்த செல்வதை அளிப்பதில் கடல் போலவும், இருக்கும் இறைவன் அரத்துறை தலத்தில் நிலைபெற்று இருக்கின்றான். அந்த இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.
இந்த பதிகத்தின் பல பாடல்களில் சிவபெருமானை விண்ணோரும் அறிகிலார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். விண்ணோரும் அறிய முடியாத ஆற்றல் படைத்தவனை மனிதர்களாகிய நாம் எவ்வாறு அறிவது. நாம் அவனை அறிந்து கொள்வதற்குத் தான், அவனது தன்மையை புரிந்து கொள்வதற்காகத் தான், ஒப்பில்லாதவனாக இறைவன் திகழ்ந்தாலும், நாம் அறிந்த உலகப் பொருட்களைச் சுட்டிக் காட்டி அப்பர் பிரான் விளக்கும் நேர்த்தியை நாம் இந்த பதிகத்தில் காணலாம். மேலும் விண்ணோர்களும் அறிய முடியாத இறைவனை, நாம் எப்படி அறிவது என்பதையும் உணர்த்தும் பாடல்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். அப்பர் பிரான் அறிவித்த வண்ணம், அவனது தன்மையை, பண்பினை நாம் புரிந்து கொண்டு, அவனைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
நன்றி: என். வெங்கடேஸ்வரன்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||