புதன், 27 ஏப்ரல், 2016

நோய் தீர்க்கும் திருப்பதிகம் - திருவதிகை

 இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : நான்காம் திருமுறை 01 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானத்தில் அருள்புரியும் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் மீது பாடிய இந்த பாடல் திருநாவுக்கரசரின் முதல் திருப்பதிகம் ஆகும். இதன் மூலம் திருநாவுக்கரசருக்கு சூலை நோய் என்னும் வயிற்றுவலி நீங்கியதாக வரலாறு கூறுகிறது. இத்திருப்பதிகத்தை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.


திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள் நீக்கியாரும் பிறந்தனர். மருள் நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும்

"கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன் நான் அறியேன்..."

என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.


பாடல் எண் : 01
கூற்றாயின வாறு விலக்ககிலீர் 
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் 
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 


பாடல் எண் : 02
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் 
நினையாது ஒரு போதும் இருந்தறியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை 
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும் என்னீர் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானே, எனது நெஞ்சத்தை உமக்கு உறைவிடமாக ஒதுக்கியுள்ளேன். இனிமேல் உம்மை ஒரு பொழுதும் நினையாமல் இருக்கமாட்டேன். நோயின் மூல காரணத்தை எவராலும் அறியமுடியாதாகவும், இத்தகைய கொடிய நோயினை இதுவரை எவரும் அனுபவித்ததாக தான் கேட்டறியாதாகவும் உள்ள இந்த சூலை நோய் மிகவும் வஞ்சனையான முறையில் என்னை வந்தடைந்துள்ளது. இந்த சூலைநோய் எனது குடலினை சுருட்டி, மற்ற உள்ளுறுப்புக்களை செயல்படவிடாமல் கொடிய விஷம் போல் என்னை வருத்தி நலிவடையச் செய்துள்ளது. இந்த சூலை நோய் என்னை வருத்தாமல் அதனைத் துரத்தியோ, மறைத்தோ எனக்கு அருள் செய்ய வேண்டும். அஞ்சேல் என்று நீர் ஆறுதல் கூறவேண்டும்.


பாடல் எண் : 03
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர் 
படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய்பூச வல்லீர்
பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண்தலைகொண்டு
அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
ஊழிமுடிவினில் இறந்தவர்களின் உடல் சாம்பலை தனது உடலில் பூசிக்கொண்டும், விருப்பமுடன் எருதினை வாகனமாக ஏற்று உலகெங்கும் செல்பவரும், தனது கழுத்தினில் இறந்தவர்களின் தலையினை மாலையாக அணிந்தும் இருப்பவரும் கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறைபவரும் ஆகிய சிவபெருமானே, உம்மை வழிபடும் அடியார்களின் பாவங்களை நீக்கும் வல்லமை உடையவரே, கிள்ளப்பட்டதும் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் உள்ள பிரமனின் தலையில் பிச்சை ஏற்றுத் திரியும் பெருமானே, நான் மதம் மாறியதற்காக என் மீது கோபம் கொண்டு சமண சமயத்தவர் சூழ்ச்சி செய்வார்கள் என்பதை அறிந்தும் நான் மிகவும் துணிந்து உமக்கு அடிமையாக வாழ்வது என்று முடிவினில் உள்ளேன். ஆனால் கொடுமையான சூலை நோய் என்னை நெருப்பு போல் எரிக்கின்றது. இந்த சூலை நோயினை நீர் தவிர்த்து அருள வேண்டும்.


பாடல் எண் : 04
முன்னம் அடியேன் அறியாமையினால் 
முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ 
தலையாயவர்தம் கடன் ஆவதுதான்  
அன்ன நடையார் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!


பாடல் எண் : 05
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் 
கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட 
நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்
வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
பெருத்த ஆராவாரம் செய்யும் நீர் நிலைகளை உடைய அதிகை நகரில் கெடில நதியின் கரையில் உள்ள வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, கொடிய சூலை நோய் எனது குடரினைத் துடக்கி எனது உடல் உறுப்புகளைச்.செயலிழக்கச் செய்துவிட்டது. என்னைக் காத்துக் கொண்டிருந்த தமக்கையாரின் சொற்களை மதிக்காமல் சமண சமயம் சார்ந்தேன். குளத்தின் கரையிலிருந்த காவலர்கள் சரியாக என்னை வழிநடத்தாமையால், குளத்தில் மூழ்கும் நிலையில் உள்ள எனக்கு மீண்டு வரும் வழி என்ன என்று தெரியவில்லை. நீ தான் எனக்கு அருள்புரிந்து நான் மீள்வதற்கு உதவி புரியவேண்டும்.


பாடல் எண் : 06
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்
உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
பிரமனின் தலையில் பலி ஏற்று உலகெங்கும் திரியும் சிவபெருமானே, கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறையும் இறைவனே, எனது உடலினை வருத்தும் சூலை நோயினை நீ தான் தவிர்த்து அருள வேண்டும். நான் இனி எப்போதும் நீர், மலர்கள், தூபம் இவை கொண்டு உன்னை மறவாமல் வழிபடுவேன்; இனிமையான தமிழில் இசைப்பாடல்கள் பாடி உன்னை புகழ்வேன். வாழ்க்கையின் எந்த நிலையிலும், துன்பம் வந்த காலத்திலும் மற்றும் துன்பமின்றி இருக்கும் காலத்திலும் உன்னை என்றும் மறவாமல், உனது நாமங்களைச் சொல்லுவேன்.


பாடல் எண் : 07
உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே 
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, என்னை சரியாக வழி நடுத்துபவர் எவரும் இல்லாததால், மனை வாழ்க்கை, செல்வம், புகழ் இவைகளை பெரிதாக மதித்தேன். உமது அருள் வயப்பட்ட நான், வாழ்க்கையின் இன்பம், செல்வம். மற்றும் புகழ் அனைத்தும் உமது பெருமையின் முன்னே வெறுமை என்பதை உணர்ந்துவிட்டேன். எனவே உமக்கு அடிமையாக வாழ்வது என்ற முடிவில் இருக்கும் என்னை, கொடிய சூலை நோய் என்னை மிகவும் வருத்துகின்றது. எனது குடரின் உள்ளே புகுந்து, குடரினை பறித்தும், புரட்டியும், அறுத்தும் என்னை பல வகையில் துன்புறுத்தும் இந்த சூலை நோயால் நான் மிகவும் அஞ்சி தளர்ந்துவிட்டேன். நீர் தான் இந்த சூலை நோயினை தவிர்த்து அருளவேண்டும்.


பாடல் எண் : 08
வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
வஞ்சம் மனம் ஒன்று இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச் 
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே 
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே. 

பாடல் விளக்கம்‬:
அதிகை... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.


பாடல் எண் : 09
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 
புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை 
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார் 
அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபிரானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் கவலை ஆகியவற்றைக் களைந்து அருள் புரிவீராக. என்னைப் போன்றவர்கள் உமது கருணையின் திறத்தை அறியாததால் தெளியாத நிலையில் உள்ளனர். கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின்  கவலைகளை, துன்பங்களை நீக்கினால் அவர்களும் தெளிவு அடைவார்கள். உலகெங்கும் அன்பே நிலவும்.


பாடல் எண் : 10
போர்த்தாய் அங்கோர் யானையின் ஈருரிதோல் 
புறங்காடு அரங்கா நடம் ஆடவல்லாய்  
ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ் 
அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய்   
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் 
என் வேதனையான விலக்கியிடாய்     
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.

பாடல் விளக்கம்‬:
அதிகமான நீரினை உடையதால் மிகுந்த ஆரவாரத்துடன் ஓடும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் உறையும் இறைவனே, தாருகாவனத்து முனிவர்களால் உன் மீது ஏவிவிடப்பட்ட யானையின் தோலை உரித்து உனது உடலின் மீது போர்த்துக் கொண்டாய். ஊருக்கு புறம்பே உள்ள காட்டினை அரங்கமாக மாற்றிக்கொண்டு நடமாட வல்லவனே, தனது வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையை பேர்த்தேடுப்பேன் என்று மிகுந்த ஆரவாரத்துடன் முயற்சி செய்த இராவணனை, முதலில் அவனது செருக்கு அடங்குமாறு மலையின் கீழே அழுத்தி வருத்திய பின்னர், அவன் பாடிய சாமகானத்திற்கு மகிழ்ந்து அவனுக்கு அருள்கள் பல செய்தாய். அதே போல், முன்னர் நான் செய்த கொடுமைகளை பொருட்படுத்தாது, சூலை நோயின் கொடுமையால், வேர்த்தும், புரண்டும், எழுந்தும், விழுந்தும் துன்பப்படும் எனது வேதனைகளை, நீர் தான் களையவேண்டும்.

இந்தப் பதிகம் பாடிய பின்னர் மருள்நீக்கியாரின் சூலை நோய் முற்றிலும் நீங்கியது. நடந்த அதிசயத்தை உணர்ந்த நாயனார் சிவபிரானின் அருள் ஆகிய கடலுள் மூழ்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தான் சமண சமயத்தைச் சார்ந்து பிழை செய்த போதிலும் தன்  மீது கருணை கொண்டு இறைவன் அருள் செய்ததை நினைத்து, மகிழ்ச்சியினால் அவரது திருமேனி முழுதும் உரோமங்கள் சிலிர்த்து நிற்க, கண்கள் இடையறாது ஆனந்தக் கண்ணீர் பொழிய, தரையின் மீது பலமுறை புரண்டு வீழ்ந்தார். சிவபிரானின் அருளைப் பெறுவதற்கு காரணமாக இருந்த சூலை நோயினுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன் என்று சூலை நோயினை வணங்கினார். அப்பொழுது செந்தமிழில் சொல்வளம் கொண்ட பாடலைப் பாடியதால் உமது பெயர் நாவுக்கரசர் என்று உலகினில் விளங்கும் என்ற ஒலி, அனைவரும் வியப்புறும் வண்ணம் வானில் எழுந்தது.

குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||